புதிய தலைமுறை தொலைக்காட்சியின் ஒளிப்பதிவாளர்
செந்தில்குமரனை, அந்த தொலைக்காட்சி நிலையத்தின் வாயிலிலேயே வைத்து, இந்து
முன்னணி, பாரதிய ஜனதா காலிகள் 30 பேர் சூழ்ந்து கொண்டு தாக்கி, அவருடைய
கேமராவையும் உடைத்திருக்கின்றனர். தற்செயலாக அங்கு வந்த பத்திரிகையாளர்
தியாகச்செம்மலும் பொதுமக்கள் சிலரும் குறுக்கிட்டுத் தடுத்து அவரைக்
காப்பாற்றியிருக்கின்றனர்.
புதிய
தலைமுறை தொலைக்காட்சியின் ஒளிப்பதிவாளர் செந்தில்குமரனை, அந்த
தொலைக்காட்சி நிலையத்தின் வாயிலிலேயே வைத்து, இந்து முன்னணி, பாரதிய ஜனதா
காலிகள் 30 பேர் சூழ்ந்து கொண்டு தாக்கி, அவருடைய கேமராவையும்
உடைத்திருக்கின்றனர். RSS நாசகாரிகளின் ஆட்சியில் நிச்சயம் ஊடங்கள் இன்னும் மோசமாக நசுக்கப்படும் . அதற்குரிய சகல சகுனங்களும் தெரிகிறது Wake up before its too late
ஆனால் தாக்குதல் நடந்தபோது பாதுகாப்புக்கு நின்ற போலீசார் கைகட்டி நின்று வேடிக்கை பார்த்திருக்கின்றனர். அடித்த இந்து முன்னணி தலைவர்கள் சிலர் போலீசு பாதுகாப்பு பெற்றவர்கள். அவர்கள் போலீசு பாதுகாப்புடன் இந்த ரவுடித்தனத்தை நடத்தியிருக்கிறார்கள்.
இது குறித்து சைதாப்பேட்டை உதவி ஆணையர், இணை ஆணையர் ஆகியோரிடம் நேரில் சென்று புகார் செய்தபோது, தங்களை அவர்கள் ஒருமையில் ஏசியதாகவும், “நீங்கள் ஏதாவது கான்ட்ராவர்சியலாக ஒளிபரப்புவீங்க, அதுக்கெல்லாம் பாதுகாப்பு கொடுக்கறதுதான் எங்க வேலையா?” என்றும் திமிராகவும் அலட்சியமாகவும் பேசியதாக தியாகச்செம்மல் கூறுகிறார். தற்போது வேறு வழியின்றி பத்து பேர் மீது போலீசு ஒப்புக்கு வழக்கு பதிவு செய்திருப்பதாகத் தெரிகிறது.
இந்தத் தாக்குதல் மூலம் இந்து வெறியர்கள் சொல்லவருவது என்ன?
“அவள் எதிர்ப்பு காட்டாமல் இணங்கியிருந்தால் அனாவசியமாகச் செத்திருக்க வேண்டியதில்லை” இது பி.பி.சி ஆவணப்படத்தில், குற்றவாளி முகேஷ் பேசும் வசனம். இதையேதான் இந்து வெறியர்களும் சொல்கிறார்கள்.
அவர்கள் “தாலியைப் பற்றிப் பேசக்கூடாது என்றால் எதிர்ப்பு காட்டாமல் இணங்க வேண்டும்” “பகுத்தறிவு பேசக்கூடாது என்றால் அதற்கும் இணங்க வேண்டும்.”
இல்லையென்றால் தபோல்கரையும் பன்சாரேவையும் செய்ததைப்போல கொலை செய்வார்கள்.
நிர்பயாவும் தபோல்கரும் பன்சாரேவும் எதிர்த்து நின்றார்கள். நாம் எதிர்த்து நிற்கப் போகிறோமா, அல்லது இணங்கி அடங்கிப் போகப்போகிறோமா என்பதுதான் கேள்வி.
முதலாவதாக, இது இந்துமதவெறி பாசிஸ்டுகள் நாடு முழுவதும் நடத்தி வரும் வெறியாட்டத்தின் ஒரு அங்கம். அதிலும் குறிப்பாக, தமிழ் நாட்டிலிருந்து பகுத்தறிவு, சுயமரியாதையுணர்வு, தமிழ் உணர்வு ஆகிய அனைத்தையும் துடைத்து ஒழிக்க வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு இந்து வெறி பாசிஸ்டு அமைப்புகள் வேலை செய்து வருகின்றன.
மாதொருபாகன் பிரச்சினையில் ஒரு எழுத்தாளரை தாக்கினார்கள். இங்கே ஒரு பிரபல தொலைக்காட்சி நிறுவனத்தின் ஊழியர்களையே தாக்கியுள்ளார்கள். அதிகாரத்தில் இருந்தால் கொலை செய்திருப்பார்கள். எனவே, “இந்து அமைப்புகள் என்று தங்களை சொல்லிக் கொள்பவர்கள் பயங்கரவாதிகள். ஜனநாயகத்துக்கும் மதச்சார்பின்மைக்கும் எதிரானவர்கள்” என்று நாம் பிரகடனம் செய்ய வேண்டும். அவர்களை எதிர்த்து நிற்க வேண்டும். இதனை பத்திரிகை சுதந்திரத்தின் மீதான தாக்குதல் என்று மட்டும் கூறுவது தவறு.
இரண்டாவதாக, ஊடக முதலாளிகள்.
இந்தத் தாக்குதல் பற்றி புதிய தலைமுறை நிர்வாகத்தின் நிலை என்ன? இந்து முன்னணியும் பாஜ.க வும் இதில் சம்மந்தப்பட்டிருப்பதாக புதிய தலைமுறையின் செய்தியறிக்கை கூறுகிறது. அடுத்த செய்தியாக, பாஜக மாநிலத்தலைவர் தமிழிசை சவுந்தரராசன் மகளிர் தினம் கொண்டாடியதும், அவருக்கு வீரவாள் வழங்கப்படும் காட்சியும் காட்டப்படுகிறது.
“அடுத்தமுறை தாக்க வரும்போது கையில் வாளோடு வருக” என்று அழைக்கிறார்களா? திரு பச்சமுத்து பல தொழில்கள் நடத்துகிறார். கல்வி நிறுவனங்கள், பேருந்து, தொலைக்காட்சி ஆகியவற்றுடன், ஒரு கட்சியும் நடத்தி வருகிறார். அவருடைய கல்வி நிறுவனங்களில் பாஜக வினருக்கு டிஸ்கவுன்ட் கிடைக்கிறதோ இல்லையோ புதிய தலைமுறை தொலைக்காட்சியில் தாராளமாக ‘டிஸ்கவுன்ட்’ கிடைக்கிறது. தமிழகத்தில் முகவரியே இல்லாத பாரதிய ஜனதா கட்சிக்கு முகவரி ஏற்படுத்திக் கொடுத்து, மதவெறிக் கருத்தை பிரச்சாரம் செய்ய மேடை அமைத்துக் கொடுப்பதில் முதலிடம் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்குத்தான்.
ஆனால், தாலி பற்றிய இந்த விவாதத்தை நடத்தக்கூடாது என்று இந்து வெறியர்கள் உத்தரவிட்டவுடனே, ஒரு சிறிய எதிர்ப்புக் கூட காட்டாமல் அதன் ஒளிபரப்பை நிறுத்துவதாக முடிவு செய்து விட்டார்கள். அடி வாங்கிய பிறகாவது ஒளிபரப்பியிருக்கலாம்.
ஒரு தொழில் நிறுவனம் என்ற அடிப்படையிலான கவுரவம் கூட அந்த நிர்வாகத்துக்கு இருப்பதாகத் தெரியவில்லை. இவர்களின் ஆதாயத்துக்காக ஊழியர்களும் மானங்கெட்டவர்களாக இருக்க வேண்டுமா, அடி வாங்கவேண்டுமா என்பதுதான் கேள்வி.
புதிய தலைமுறை மட்டுமல்ல, தமிழகத்தின் பெரும்பாலான காட்சி மற்றும் அச்சு ஊடகங்களிலும் இன்றைக்கு இதுதான் நிலை. சன் டிவியில் ஒரு பெண்ணுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் பிரச்சினை நடந்தபோது, ஆகப்பெரும்பான்மையான ஊடகங்கள் அதனை கட்டுப்பாடாக இருட்டடிப்பு செய்தததை நாம் அறிவோம். தற்போது புதிய தலைமுறை ஊழியர் மீதான தாக்குதல் செய்தியையும் மற்ற ஊடகங்கள் இருட்டடிப்பு செய்திருக்கின்றன.
“இந்து அமைப்பினர் முற்றுகைப் போராட்டம்” என்று தலைப்பிட்டு “தமிழ் தி இந்து” நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தை செந்தில்குமார் படமெடுத்த காரணத்தினால் தாக்கினார்களாம். ஆர்ப்பாட்டத்தை படமெடுத்ததாகவே இருக்கட்டும், அதற்காக ஏன் தாக்கவேண்டும், போலீசு என்ன செய்தது என்ற கேள்விகளைக்கூட அந்த நாளேடு எழுப்பவில்லை. மற்ற ஊடகங்களோ, இந்த செய்தியைக் கூட வெளியிடவில்லை.
இந்நிலையில் பத்திரிகையாளர்கள் என்ன செய்வது? ‘பத்திரிகை சுதந்திரத்தை’ காப்பாற்றுவதைப் பிறகு பார்ப்போம். தங்கள் உயிரையும், மானத்தையும் காப்பாற்றிக் கொள்வதற்குக்கூட பிரஸ் என்ற அடையாள அட்டையையோ, தமது நிர்வாகத்தையோ அவர்கள் நம்பியிருக்க முடியுமா? முடியாது என்பதைத்தான் அடுத்தடுத்து நடைபெறும் பல சம்பவங்கள் காட்டுகின்றன. அச்சு மற்றும் காட்சி ஊடகங்களைச் சேர்ந்த ஊழியர்கள் ஒரு சங்கமாக சேருவதன் மூலம் மட்டும்தான் தங்களையும், தங்கள் தன்மானத்தையும் கருத்துரிமையையும் பாதுகாத்துக் கொள்ள முடியும்.
மூன்றாவது பிரச்சினை – போலீசின் அணுகுமுறை பற்றியது.
குடியரசு தின விழாவில் தண்டிக்கப்பட்ட கிரிமினலின் படத்துக்கு வரிசையில் நின்று போலீசு அதிகாரிகள் சல்யூட் அடிப்பதை தமிழகத்திலும், மோடி ஆட்சியின் கீழ் கொலைக்குற்றவாளிகள் வரிசையாக விடுவிக்கப்படுவதை தேசிய அளவிலும் பார்க்கிறோம். இந்த சூழலில், யாரேனும் ஒரு போலீசு அதிகாரி சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க முயற்சித்தால், அதைத்தான் நாம் அதிசயமாகப் பார்க்கவேண்டும்.
முதலிரண்டு பிரச்சினைகள்தான் நாம் முதன்மையாக கவனம் செலுத்தவேண்டியவை என்று கருதுகிறோம். போலீசு கடமை தவறிவிட்டது என்பதை முதன்மைப்படுத்துவது ஊடக முதலாளிகள் குற்றத்தை பின்னுக்குத் தள்ளுவதற்கே பயன்படும். எனவேதான், “பத்திரிகையாளர்களே உடனே சங்கமாக ஓரணியில் திரளுங்கள்” என்று கோருகிறோம். இது ஊதிய உயர்வுக்கோ, பணிப் பாதுகாப்புக்கோ அல்ல. உங்கள் உயிரையும் மானத்தையும் பாதுகாத்துக் கொள்வதற்கு!
டாஸ்மாக்கை வைத்து பெண்களின் தாலி அறுத்துக் கொண்டிருக்கிறார் அம்மா. அம்மாவின் இயற்கையான கூட்டாளிகளான இந்துவெறியர்கள், புனிதமான தாலியை அகற்றுவதாக பகுத்தறிவாளர்கள் மீது குற்றம் சாட்டி, பெண் உரிமைக்கு எதிராகத் தாக்குதல் தொடுத்திருக்கிறார்கள்.
கார்ப்பரேட்டுகளுக்கு “சிங்கிள் வின்டோ சிஸ்டம்” கொண்டு வந்த மோடி, பெண் உரிமையைப் பாதுகாப்பதற்கும் “சிங்கிள் வின்டோ” கொண்டுவரவிருப்பதாக மகளிர் தினத்தன்று காலையில் அறிவித்தார். சொல்லி முடிப்பதற்குள் புதிய தலைமுறைத் தொலைக்காட்சிக்கு வந்து விட்டார்கள் ஆர்.எஸ்.எஸ் காலிகள் – மோடி குறிப்பிடும் சிங்கிள் வின்டோ அவர்கள்தான்.
________________________________
பின்குறிப்பு: டிசிஎஸ் ஆட்குறைப்பிற்கு பின் எமது புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தொழிற்சங்கம், ஐ.டி துறை ஊழியர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக அணிதிரட்டி வருகிறது. அந்த நம்பிக்கையையும், சுயமிரியாதையையும் பத்திரிகையாளர்கள் அடைய வேண்டாமா? பத்திரிகையாளர்களுக்கான தொழிற்சங்கம் கட்டுவோம்!
பத்திரிகை நண்பர்களே உடன் தொடர்பு கொள்ளுங்கள்!
vinavu@gmail.com / 97100 82506
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக