திங்கள், 9 மார்ச், 2015

சேது சமுத்திர கடலுக்குள் புதைந்த இயந்திரம் மீட்க படுகிறது

ராமேசுவரம்,மார்ச்.09 (டி.என்.எஸ்) கடந்த 2009–ம் ஆண்டு சேதுசமுத்திர கால்வாய் திட்டத்திற்காக கடலை ஆழப்படுத்தும் பணிகள் நடந்து வந்தன. அப்போது ராமேசுவரம் தனுஷ்கோடி 4–வது மணல் தீட்டை மற்றும் 5–வது மணல் தீட்டை ஆகிய இடங்களுக்கு இடைப்பட்ட கடல் பகுதிகளில் பாறைகளை உடைக்கும் பணியில் அக்வாரிஸ் என்ற கப்பல் ஈடுபட்டு இருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த கப்பலின் ‘ஸ்பட்’ என்ற ராட்சத எந்திரம் கடலில் விழுந்து விட்டது. இந்த எந்திரம் தான் கடலில் உள்ள பாறைகளை உடைத்து, மணலை அப்புறப்படுத்தும் பணியில் முக்கிய பங்காற்றியது. அந்த எந்திரம் 50 டன் எடையும், 15 மீட்டர் நீளமும் கொண்டது. இதற்கிடையில் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றக்கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டதால் அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது.


அதே நேரத்தில் கடலில் விழுந்த அந்த ஸ்பைட் எந்திரமும் மீட்கப்படவில்லை. அதனால் இரவு நேரத்தில் அந்த கடல் வழியாக மீன் பிடித்து வரும் ஏராளமான நாட்டுப்படகு, விசைப்படகுகளும் அந்த ராட்சத எந்திரம் மீது மோதி கடலில் மூழ்கின. இதனால் மீனவர்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டது.

கடந்த மாதம் கூட பாம்பனை சேர்ந்த டோம்னிக் என்ற சதீஷ் என்பவருக்கு சொந்தமான படகு ஸ்பட் எந்திரம் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அந்த படகு கடலில் மூழ்கியது. அப்போது அதில் இருந்த 7 மீனவர்களும் கடலில் தத்தளித்து பின்னர் வேறு படகு மூலம் கரை வந்து சேர்ந்தனர்.

கடலில் கிடக்கும் அந்த ராட்சத எந்திரத்தை அப்புறப்படுத்த வேண்டும் என்று மீனவர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை ஏற்று கொண்ட மத்திய அரசு, ஸ்பட் எந்திரத்தை அகற்றும்படி சேது சமுத்திர கழகத்திற்கு உத்தரவிட்டது.

அதன்தொடர்ச்சியாக மும்பையை சேர்ந்த தனியார் கப்பல் நிறுவன என்ஜினீயர் ஹரிஷ்குமார் தலைமையிலான 5 பேர் கொண்ட குழுவினர் தனுஷ்கோடி கடல் பகுதியில் மூழ்கி கடக்கும் ‘ஸ்பட்’ எந்திரத்தை நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பின்னர் அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:

கப்பலின் ஸ்பட் எந்திரம் மூழ்கி கிடக்கும் தனுஷ்கோடி கடல் பகுதியில் கடல் நீரோட்டம் வேகமாக உள்ளது. மேலும் பகல் நேரத்தில் குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் தான் அந்த எந்திரம் லேசாக வெளியே தெரிகின்றது. மற்ற நேரங்களில் கடலில் மூழ்கி விடுகிறது. அந்த ராட்சத எந்திரத்தை முழுமையாக அறுத்து கடலின் அடிப்பகுதியிலேயே மூழ்க செய்து, அதன்பின் அந்த கருவியை மேலே தூக்கி மீட்டு படகு மூலமாக கரைக்கு கொண்டுவர முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இன்னும் ஓரிரு நாட்களில் இதற்கான பணி தொடங்கும். ஒரு வாரத்திற்குள் ‘ஸ்பட்’ எந்திரத்தை மீட்டு கரைக்கு கொண்டு வருவோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.   tamil.chennaionline.com/

கருத்துகள் இல்லை: