வியாழன், 12 மார்ச், 2015

சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி கைது!

 சென்னையில் சாலையோரமாக வைக்கப்படும் பேனர்களை தன்னந்தனி ஆளாக நின்று அகற்றி பரபரப்பை ஏற்படுத்துபவர் டிராபிக் ராமசாமி. நேற்று இவர், புரசைவாக்கத்தில் டாக்டர் அழகப்பா சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக வைக்கப்படும் பேனர்கள் குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு நடுரோட்டில் பேட்டி அளித்தார். இதனை அந்த வழியாக காரில் வந்த வேப்பேரியை சேர்ந்த வீரமணி என்பவர் தட்டிக்கேட்டார். போக்குவரத்துக்கு இடைஞ்சலாக நின்று கொண்டு பேட்டி கொடுக்கிறீர்களே, ஓரமாக நிற்கக்கூடாதா? என்று கேட்டார். இதனால் இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது டிராபிக் ராமசாமி, தனது காரை உடைத்து தகராறில் ஈடுபட்டதுடன் கொலை மிரட்டல் விடுத்ததாக வேப்பேரி போலீசில் வீரமணி புகார் கொடுத்தார். இதையொட்டி டிராபிக் ராமசாமி மீது கொலை மிரட்டல், அவதூறாக பேசுதல், காரை உடைத்தல் உள்ளிட்ட 4 சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அவரை போலீசார் தேடினர். பாண்டி பஜாரில் விடுதி ஒன்றில் தங்கி இருந்த டிராபிக் ராமசாமியை, வேப்பேரி இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையிலான போலீசார், இன்று அதிகாலை கைது செய்தனர். பின்னர் சைதாப்பேட்டையில் உள்ள எழும்பூர் 14–வது குற்றவியல் கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு கயல்விழி முன்பு ஆஜர்படுத்தினர். அவரை 15 நாட்கள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு கயல்விழி உத்தரவிட்டார். இதையடுத்து டிராபிக் ராமசாமி புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.  maalaimalar.com

கருத்துகள் இல்லை: