வியாழன், 12 மார்ச், 2015

கி.வீரமணி :புதிய தலைமுறை மீது :குண்டு வீச்சு: ஒத்த கருத்துள்ளவர்கள் ஒன்று திரண்டு முறியடிப்போம்:

புதிய தலைமுறை’ அலுவலகம்முன் இன்று காலைகூட டிபன்பாக்ஸ் குண்டு வீச்சு எனும் வன்முறை நடந்துள்ளது. ஒத்த கருத்துள்ளவர்கள் ஒன்று திரண்டு முறியடிப்போம் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தாலி’பற்றிய விவாதம் ஒன்றினை ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சி ஒன்று சில நாள்களுக்குமுன் ஏற்பாடு செய்ததை, மிரட்டி நடக்கவிடாமல் செய்ய, அந்த ஊடகவியலாளர்களான ‘கேமிராமேன்’ மற்றும் சில ஊழியர்களைப் பின்புறத்தில் சென்று தாக்கி வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டு, கருத்துச் சுதந்திரத்தை எதிர்த்து அச்சுறுத்தல்களை மேற்கொண்டுள்ளனர்; அதுவும் மோடி அரசு மத்தியில் வந்ததையட்டி தங்கு தடையின்றி, பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். மற்றும் மதவாத அமைப்புகள் வன்முறைகளில் தீவிரமாக இறங்கிவிட்டன.
அவ்வமைப்புகளின் தலைவர்கள் வன்முறையை நியாயப்படுத்துவது போன்ற அறிக்கைகள் வாயிலாக அச்செயல்களைத் தூண்டுவதும் வெளிப்படையாகி விட்டது. தாலி அணிதல் மதத்தின் கலாச்சாரமா? தாலி அணிதல் என்பது ஒரு மதத்தின் கலாச்சாரம் என்றுகூட எவராலும் வாதிட முடியாது; காரணம், மதுரை, தேனி போன்ற சில மாவட்டங்களில் மற்றும் பல பகுதிகளில் தாலி கட்டாத வைதிக திருமணங்களே பலவும் வழமையாக (சிustஷீனீணீக்ஷீஹ் விணீக்ஷீக்ஷீவீணீரீமீs) நடைபெற்று வருவது கண்கூடு. இதை ஒரு விவாதத்திலேயே கொண்டு வரக்கூடாது என்பதற்காக அத்தகைய தொலைக்காட்சி ஊடக ஊழியர்களைத் தாக்குவது வன்மையான கண்டனத்திற்குரியது. இது அச்சுறுத்திப் பணிய வைக்கும் பாசிச அணுகுமுறையாகும். இதுகுறித்து நாம் சில நாள்களுக்கு முன் (9.3.2015) அறிக்கையும் விடுத்தோம். ‘புதிய தலைமுறை’ அலுவலகம்முன் டிபன் பாக்ஸ் குண்டு வீச்சு! இன்று (12.3.2015) காலை அதே அலுவலகம் (‘புதிய தலைமுறை’) முன்பு இரண்டு ‘டிபன்பாக்ஸ்’ குண்டுகளை வெடிக்கச் செய்துள்ளதானது - மிகமிக வேதனைக்கும், வெட்கத்திற்கும், வன்மையான கண்டனத்திற்கும் உரிய நடத்தை கெட்ட செயல் அல்லவா? அந்த அலுவலகத்திற்கு முன்பே தக்க பாதுகாப்பு அளிப்பது காவல்துறையின் கடமையல்லவா? மதவெறியர்களைக் கைது செய்க! மதவெறியர்களை உடனடியாகக் கைது செய்து, கருத்துச் சுதந்திர உரிமையைக் காவல்துறையும், தமிழ்நாடு அரசும் நிலை நிறுத்த முன்வரவேண்டும். ‘தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு இந்த லட்சணத்தில் இருக்கிறது’ என்று மற்றவர்கள் பேசுவார்களே என்ற கவலை கூடவா இந்த அரசுக்கு இருக்காது? ஒத்த கருத்துள்ளவர் ஒன்று திரண்டு எதிர்த்திடுவோம்! இது ஒரு தொலைக்காட்சிமீது நடத்தப்பட்ட அச்சுறுத்தல் வன்முறை என்று எடுத்துக்கொள்ள முடியாது; ஒட்டுமொத்த கருத்துச் சுதந்திரத்தின்மீது தொடுக்கப்பட்ட போர்! இதற்குத் தக்க பதிலடியை - வன்முறையால் அல்ல - ஒன்று திரண்டு ஓங்கிய குரலால், ஒத்தக் கருத்துள்ள அனைவரும் ஓரணியில் திரண்டு ஒலிக்க முன்வரவேண்டும் - முறியடிக்கவேண்டும். இவ்வாறு கி.வீரமணி கூறியுள்ளார். nakkheeran.in

கருத்துகள் இல்லை: