வியாழன், 12 மார்ச், 2015

Chennai Metro ரயில் திட்டம் பூர்த்தி ஆனால் ஜெயலலிதாவுக்காக கிடப்பில் போடப்பட்டுள்ளது!


சென்னை-தி.நகர் கிழக்கு, மேற்கு பகுதி திமுக சார்பில் மறைந்த திமுக பிரமுகர் பழக்கடை ஜெயராமன் 31வது நினைவு நாள் பொதுக்கூட்டம் தி.நகரில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் தலைமை தாங்கினார். ஜெ.கருணாநிதி, கே.ஏழுமலை முன்னிலை வகித்தனர். உதயசூரியன் வவேற்றார். பி.மாரி நன்றி கூறினார். கூட்டத்தில் ஈரோடு இறைவன், அய்யாவு, உசேன் பேசினார்கள். கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு ஜெ.அன்பழகன் வெள்ளி வீரவாளை வழங்கினார். ஆளுயர ஆப்பிள் பழ மாலை அணிவித்தார். கூட்டத்தில் மு.க.ஸ்டா லின் பேசியதாவது:அவசர நிலை பிரகடனத்தின்போது எங்களோடு மிசா கைதியாக சிறையில் வாடியவர் பழக்கடை ஜெயராமன். நான் இந்த நிகழ்ச்சிக்கு தொடர்ந்து வருவதாக அன்பழகன் கூறினார். இனியும் தொடர்ந்து வருவேன்.


திமுக ஆட்சியில் சென்னை நகர போக்குவரத்து நெரிசலை குறைக்க மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்பட்டது. 2009ம் ஆண்டு நான்தான் அதை தொடங்கி வைத்தேன். 45 கிலோ மீட்டர் நீளம் கொண்ட அந்த திட்டம் 2014ல் முடிந்திருக்க வேண்டும். அதிமுக ஆட்சியில் அந்த திட்டத்தை கிடப்பில் போட்டதால் தாமதம் ஏற்பட்டது. இப்போது ரயில் சோதனை ஓட்டம் முடிந்த பிறகு கூட மெட்ரோ ரயில் தொடங்கி வைக்கப்படவில்லை. ஜெயலலிதா முதல்வர் இல்லை என்பதால் மெட்ரோ ரயில் தொடங்கப்படவில்லை. பெங்களூர் நீதிமன்ற தீர்ப்பு அவர்களுக்கு சாதகமாக வரப்போகிறதாம். எனவே, காத்திருக்கிறார்களாம். இப்படி தான் முதலில் வந்த தீர்ப்பையும் கூறினர். அப்போது வந்த தீர்ப்புதான் இப்போதும் வரப்போகிறது.

மெட்ரோ ரயிலை உடனே இந்த அரசு தொடங்கி வைக்க வேண்டும். இல்லாவிட்டால் சென்னையில் உள்ள நான்கு மாவட்ட திமுக சார்பில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம். எங்கள் போராட்டத்திற்கு அனுமதி தராவிட்டால் சிறையையும் நிரப்ப தயாராக இருக்கிறோம். நியாயமாக மார்ச் முதல் வாரம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு இருக்க வேண்டும். ஆனால், இன்னும் தேதி அறிவிக்கவில்லை. பெங்களூர் தீர்ப்புக்காக காத்திருக்கிறார்களாம்.
ஜெயலலிதாவை தேமுதிக எம்எல்ஏ விமர்சித்தால் தண்டனை தருகிறார்கள். நீதிபதி குன்ஹா ஜெயலலிதாவை குற்றவாளி என்று கூறினார். சட்டசபை செயலாளர் ஜமாலூதீன் எம்எல்ஏக்களுக்கு எழுதிய கடிதத்தில் குற்றவாளி ஜெயலலிதா என்று குறிப்பிட்டு இருக்கிறார். அந்த கடிதம் இருக்கிறது. அரசு கெஜட்டில் குற்றவாளி ஜெயலலிதா என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு என்ன செய்வார்கள். சட்டசபை செயலாளரை வெளியேற்றுவார்களா.

சட்டசபையில் ஓ.பன்னீர் செல்வம் பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார். அதிமுக ஆட்சியில் 4 ஆயிரம் மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்கிறார்களாம். 22 ஆயிரம் மெகா வாட் உற்பத்தி செய்ய போகிறார்களாம். என்னுடன் ஒரே மேடையில் பேச ஓ.பன்னீர் செல்வம் வரவேண்டாம். அமைச்சர்கள் கூட வரவேண்டாம். அதிமுக பேச்சாளர் வரட்டும். இதே இடத்தில் மேடை போடுவோம். அதிமுக ஆட்சியில் ஒரு மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்தததாக கூறட்டும். நான் அரசியலை விட்ட விலகி விடுகிறேன். தயாரா?

அதிமுகவை சேர்ந்த ஒருவர், மணல் அள்ளுவதில் ஆயிரத்து 440 கோடி இழப்பு ஏற்பட்டு மாபெரும் ஊழல் நடந்ததாக குற்றம்சாட்டியுள்ளார். அவரை கட்சியில் இருந்து நீக்கியுள்ளனர். அதே போல ஒவ்வொரு டிரான்ஸ்பர், நியமனத்திற்கு ரேட் நிர்ணயித்து லஞ்சம் வாங்குவதாக பத்திரிகையில் செய்தி வந்துள்ளது. டிஎஸ்பிக்கு ரூ.10 லட்சம், இன்ஸ்பெக்டருக்கு ரூ.3 லட்சம். கல்லூரி உதவி பேராசிரியர் ரூ.7 லட்சம், வேளாண்மை துறை உதவி இயக்குனர்களுக்கு ரூ.1 லட்சம், துணை இயக்குனர்களுக்கு ரூ.3 லட்சம், ஆசிரியர்களுக்கு ரூ.4 லட்சம் பணியிடமாற்றத்திற்கு பெறுகிறார்கள். இப்படி ரேட் வைத்து ஊழல் செய்கிறார்கள்.
தாது மணலில் ரூ.1 லட்சம் கோடி ஊழல் என்று நான் கூறினேன். இதுவரைக்கும் நடவடிக்கை இல்லை. நான் கூறியது தவறு என்றால் என்மீது வழக்கு போடட்டும். ஜெயலலிதா போல வாய்தா வாங்க மாட்டேன். நாளையே நீதிமன்றத்திற்கு வரத்தயார். அதிமுக ஆட்சியில் நான்கு வருடங்களில் 7,059 கொலைகள் நடந்துள்ளது. ஆனால், கொலை சம்பவம் குறைந்துவிட்டதாக முதல்வர் கூறுகிறார். இப்படிப்பட்ட ஆட்சிக்கு வருகிற தேர்தலில் முடிவு கட்ட தமிழக மக்கள் உறுதி கூற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட செயலாளரும், எம்எல்ஏவுமான ஜெ.அன்பழகன் பேசும் போது, Ôஜெயலலிதாவை மக்கள் முதல்வர் என்கிறார்கள். மக்களுக்காக பாடுபடுவர்தான் மக்கள் முதல்வர், மக்கள் தலைவர். வீட்டிலேயே முடங்கி கிடப்பவர் எப்படி மக்கள் முதல்வராக முடியும். 2016 தேர்தலில் திமுக ஆட்சிக்கு வரும். அதிமுகவுக்கு பெரும் தோல்வியை மக்கள் தரப்போகிறார்கள்Õ என்றார்.மாவட்ட நிர்வாகிகள் எம்டிஆர். நாதன், வெல்டிங் மணி, செல்வி சவுந்தரராஜன், நானூர் ஜெயக்குமார், சண்முகநாதன், தி.நகர் மூர்த¢தி, பகுதி செயலாளர் க.கருணாநிதி, ஏழுமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர். வட்ட செயலாளர் பி.மாரி நன்றி கூறினார். - See more at: tamilmurasu.org

கருத்துகள் இல்லை: