புதன், 11 மார்ச், 2015

Air India? ஏர் இந்தியாவை இழுத்து மூட அரசு முடிவு! நஷ்டத்தில் இயங்கும் அரசு நிறுவனங்கள் மூடப்படும் .

தொடர்ந்து பல ஆண்டுகளாகவே, ஏர் - இந்தியா நிறுவனம் நஷ்டத்தில் தான் இயங்கி வருகிறது. 2011 - 12ம் நிதியாண்டில், 7,559 கோடி ரூபாய், 2012 - 13ம் நிதியாண்டில், 5,490 கோடி ரூபாய், 2013 - 14ம் நிதியாண்டில், 5,388 கோடி ரூபாய் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.  புதுடில்லி: தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி, அன்றாட செயல்பாட்டிற்காக அரசின் பணத்தை காலி செய்து வரும், ஏர் - இந்தியா விமான நிறுவனம், எம்.டி.என்.எல்., தொலை தொடர்பு நிறுவனம், இந்துஸ்தான் ஷிப்யார்டு போன்ற, ஐந்து பொதுத்துறை நிறுவனங்களை இழுத்து மூட, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பை, லோக்சபாவில், கனரகத் துறை அமைச்சர் ஆனந்த் கீதே, நேற்று வெளியிட்டார்.   பொதுத் துறை நிறுவனங்கள் அரசு நிறுவனங்களை விட கேவலமாகச் செயல் படுவதில் ஆச்சர்யம் இல்லை.காரணம் வேலை செய்து சம்பளம் வாங்குவோரை விட வேலை செய்யாமலே சம்பாதிப்பதற்கு என்று கொஞ்சம் பேர் தொழில் சங்கங்கள் வைத்துக் கொண்டு நிர்வாகத்தை பயமுறுத்தி வருவது வேதனைக்கு உரியது.அதன் பலனாகத்தான் மொத்த தொழிலாளர்களும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.இதில் வேடிக்கை என்னவென்றால் இவர்களுக்கு வக்காலத்து வாங்குவதற்கு என்று சில எம்.பிக்களும் இருக்கிறார்கள்.இவர்கள் எல்லாம் தன தலையிலேயே தெரிந்தே மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்வது நமக்கும் வேதனையாகத்தான் இருக்கிறது.இருந்தும் என்ன பலன்.


பொதுமக்களுக்கு சேவையாற்ற வேண்டும்; அதே சமயத்தில் போட்டிகளை சமாளித்து, லாபத்தில் இயங்க வேண்டும் என்ற எண்ணத்தில், பொதுத்துறை நிறுவனங்கள் உருவாக்கப்படுகின்றன. அத்தகைய நிறுவனங்கள், அரசின் கட்டுப்பாட்டில் செயல்படுவதால், தனியார் நிறுவனங்களைப் போல லாபகரமாகவும், நேர்மையாகவும் செயல்பட முடியாமல், தத்தளித்து வருகின்றன. இத்தகைய நிறுவனங்களை காப்பாற்ற, மத்திய அரசு, ஒவ்வொரு ஆண்டும், பல ஆயிரம் கோடி ரூபாயை வீணடித்து வருகிறது.


இழுத்து முடுவது...:

இத்தகைய நிறுவனங்களுக்கு செலவழிக்கும் பணத்தை வைத்து, உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொண்டால், பொருளாதார வளர்ச்சியாவது மேம்படும். இதை உணர்ந்த மத்திய அரசு, நலிவடைந்த, தொடர்ந்து பல ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களை கண்டறிந்தது. முதற்கட்டமாக, 65 பொதுத்துறை நிறுவனங்கள், மிகவும் நலிவடைந்த நிலையில் இருப்பது தெரிய வந்தது. அவற்றை தனியார்மயமாக்குவது அல்லது இழுத்து மூடுவது என்ற முடிவுக்கு வந்தது. அந்த வகையில், முதற்கட்டமாக, ஏர் - இந்தியா, பெருநகரங்களில் தொலை தொடர்பு வசதி ஏற்படுத்தும் பொதுத்துறை நிறுவனமான, மகாநகர் டெலிகாம் நிகாம் லிமிடெட் எனப்படும் எம்.டி.என்.எல்., வாட்ச் மற்றும் டிராக்டர்களை தயாரிக்கும், எச்.எம்.டி., எனப்படும், இந்துஸ்தான் மிஷின் டூல்ஸ் நிறுவனம், கப்பல் கட்டும் பொதுத்துறை நிறுவனமான, இந்துஸ்தான் ஷிப்யார்டு போன்ற, ஐந்து நிறுவனங்களை இழுத்து மூட உள்ளது.

ஓய்வு பெறும்:

இதற்கான அறிவிப்பை, லோக்சபாவில் நேற்று வெளியிட்டு பேசிய, கனரக தொழில் துறை அமைச்சர் ஆனந்த் கீதே கூறியதாவது:இழுத்து மூடப்பட உள்ள பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் நலன்கள் பாதிக்காத வகையில், வி.ஆர்.எஸ்., எனப்படும், தானாக முன்வந்து ஓய்வுபெறும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். இந்த நிறுவனங்களை மூடுவதற்கான பணிகள் விரைவில் துவங்கும்.இவ்வாறு, அமைச்சர் ஆனந்த் கீதே கூறினார்.ஐந்தாவது நிறுவனம் எது என்ற விவரத்தை, அமைச்சர் தெரிவிக்கவில்லை.

எதன் அடிப்படையில் மூடல்?


எந்தெந்த பொதுத்துறை நிறுவனங்களை மூடலாம் என்பதற்கு, மத்திய அரசு சில கணக்குகளை வைத்துள்ளது.
*தொடர்ந்து, நான்காண்டுகளாக நஷ்டத்தில் இயங்க வேண்டும்.
*தொடர்ந்து நஷ்டம் அடையும் நிறுவனங்கள், அதன் மொத்த சொத்து மதிப்பில், 50 சதவீதத்தை இழந்திருக்க வேண்டும்.
*தொழிற்சாலை மிகவும் பழமையானதாக இருந்தால்; அதன் கருவிகள், இப்போதைய தொழில் சூழ்நிலைக்கு ஒத்துவராமல் இருக்கும் பட்சத்தில்.
*தொழிற்சாலையை புனரமைக்க போதிய நிதி ஆதாரங்கள் கிடைக்காத சூழ்நிலையில்.
*அதிக வேலையாட்கள்.
*தொழிற்சாலையை செயல்படுத்த போதிய முதலீடு இல்லாமை.போன்ற பல காரணங்கள் கூறப்படுகின்றன.க்ஷ

எவ்வளவு நஷ்டம்?

தொடர்ந்து பல ஆண்டுகளாகவே, ஏர் - இந்தியா நிறுவனம் நஷ்டத்தில் தான் இயங்கி வருகிறது. 2011 - 12ம் நிதியாண்டில், 7,559 கோடி ரூபாய், 2012 - 13ம் நிதியாண்டில், 5,490 கோடி ரூபாய், 2013 - 14ம் நிதியாண்டில், 5,388 கோடி ரூபாய் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.அது போல, டில்லி, மும்பை, கோல்கட்டா ஆகிய பெருநகரங்களில் தொலை தொடர்பு வசதியை அளித்து வரும் பொதுத்துறை நிறுவனமான, எம்.டி.என்.எல்., 2013 - 14ல், 7,820 கோடி ரூபாய் லாபம் சம்பாதித்தாலும், அதற்கு முந்தைய ஆண்டுகளில், முறையே, 5,321 கோடி ரூபாய் மற்றும் 4,109 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்துள்ளது. இந்துஸ்தான் ஷிப்யார்டு நிறுவனம், கடந்த மூன்று நிதியாண்டுகளில், 859 கோடி ரூபாய், 551 கோடி ரூபாய், 462 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்துள்ளது.

மூன்று மாதங்களில் 89 விமானம் தாமதம்:

குறிப்பிட்ட நேரத்தில் தனியார் விமான நிறுவனங்கள், தங்கள் விமானங்களை இயக்கி, கோடிகளை குவித்து வரும் நிலையில், கடந்த ஆண்டு, டிசம்பர் முதல் இந்த ஆண்டு பிப்ரவரி வரை, பொதுத்துறை விமான நிறுவனமான, ஏர் - இந்தியாவின், 89 விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டு உள்ளன. இதனால், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பணியாளர்கள் பற்றாக்குறை, விமானிகள் போராட்டம் போன்ற பல காரணங்களால், ஏர் - இந்தியா விமானங்கள் தாமதமாக
இயக்கப்பட்டதாக, விமான போக்குவரத்து துறை இணையமைச்சர் மகேஷ் சர்மா, ராஜ்யசபாவில் நேற்று தெரிவித்தார்.

15 மணி நேர தாமதம்:

கடந்த 8ம் தேதி இரவு, 10:30 மணிக்கு, டில்லியிலிருந்து மும்பை செல்லும், ஏர் - இந்தியா விமானத்தில் பயணம் செய்ய, 300 பேர் டிக்கெட் எடுத்திருந்தனர். அந்த விமானம், நள்ளிரவு, 12:30க்கு புறப்படும் என, அறிவிக்கப்பட்டது. அப்போதும் புறப்படாமல், அதிகாலை, 3:40 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டது. இரவு முழுவதும் காத்திருந்த பயணிகளுக்கு, ஒரேயொரு அதிகாரி மட்டும் தான் பதிலளித்துக் கொண்டிருந்தார். பயணிகளுக்கு எவ்வித வசதிகளும் செய்யப்படவில்லை.அப்படியே மறுநாள் மதியம் வரை, அந்த விமானத்தில் முன்பதிவு செய்திருந்த பயணிகளுக்கு விமானம் கிடைக்கவில்லை. அதன் பின், ஒவ்வொரு விமானமாக, பயணிகள் தனித்தனியாக அனுப்பி வைக்கப்பட்டனர். டில்லி - மும்பை செல்லும் விமானத்தை பிடிக்க, 15 மணி நேரம் ஆனது. இது, ஏர் - இந்தியா விமான நிறுவனத்தின், 'சேவையை' எடுத்துக் கூறுவதாக உள்ளது.

ஏர் - இந்தியா விமானத்திற்கான, எந்தவொரு வழித்தடங்களும், கடந்த மூன்றாண்டுகளாக தனியார் நிறுவனங்களுக்கு மாற்றம் செய்யப்படவில்லை. இந்த
நிறுவனத்திற்கான பொறுப்புகள் அதிகரித்துள்ளன. தினமலர்.com

அசோக் கஜபதி ராஜு
விமான போக்குவரத்து துறை
அமைச்சர்

கருத்துகள் இல்லை: