பேங்க் புத்தகத்தை அடமானம் வைத்து ரூ 4,000 கடன் வாங்கினேன். தின வட்டி 100-க்கு 10 ரூபாய். இது வரை ரூ 75,000 கட்டிவிட்டேன், இன்னமும் கடன் தீரவில்லை.மதுரை செல்லூர் பந்தல்குடியில்கொலை வெறித்தாக்குதலில் ஈடுபட்ட கந்துவட்டி கும்பல் ஆஷா, மகா, செல்வம், சதீஷ், பூஜா ஆகியோரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்கவும், இந்த அராஜகத்திற்கு துணை நிற்கும் செல்லூர் எஸ்.ஐ. அன்பழகனை பணி நீக்கவும் வலியுறுத்தி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக 30.01.2015 வெள்ளிக்கிழமை காலை 11.00 மணி அளவில் மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மதுரை மாவட்ட துணைத் தலைவர் வழக்குரைஞர் பா நடராஜன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
செல்லூர், பந்தல்குடி கந்துவட்டி அராஜகம்பந்தல்குடியில் பாதிக்கப்பட்ட மக்களும், வழக்குரைஞர்களும், மக்கள் கலை இலக்கியக் கழகம், விவசாயிகள் விடுதலை முன்னணி, இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை போன்ற அமைப்பைச் சேர்ந்த தோழர்களும் திரளாக கலந்து கொண்டனர்.
செல்லூர் – பந்தல்குடி – சுயராஜ்யபுரம் பகுதி பெரும்பான்மை தலித் மக்கள் குடியிருந்து வரும் பகுதியாகும். கூலிவேலை, சிறு வியாபாரம் செய்துவரும் ஏழை உழைக்கும் மக்களே அதிகம் உள்ளனர். விலைவாசி முதல், எல்லா செலவினங்களும் அதிகரித்துவிட்ட இன்றைய சூழலில் வருவாய் பற்றாக்குறை காரணமாகவும் மருத்துவ சிகிச்சை, நல்லது கெட்டது போன்ற அவசரத் தேவைகளுக்காக கடன் வாங்குவது என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகும்.

செல்லூர், பந்தல்குடி கந்துவட்டி அராஜகம்இதைப் பயன்படுத்திக் கொண்டு பந்தல்குடி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆஷா, மகாலட்சுமி, செல்வம், சதீஷ், செல்வராஜ், ரமேஷ் போன்றவர்கள் கந்துட்டித் தொழிலில் தங்களது சொந்த மக்களையே கடுமையாகச் சுரண்டி வருகின்றனர். ரன் வட்டி, மீட்டர் வட்டி, நாள் வட்டி, நேர வட்டி எல்லாவற்றையும் தாண்டி அவர்கள் கேட்சிற வட்டியைத் தராவிட்டால் நடுத்தெருவில் இழுத்துப் போட்டு அடிப்பது, ஆபாச வார்த்தைகளில் திட்டுவது, வீடு புகுந்து சாமான்களை அள்ளுவது, மானபங்கப்படுத்துவது போன்ற அடாவடிகளில் ஈடுபடுவதே இவர்களது வாடிக்கை. இந்தக் கும்பலிடம் சிக்கிக் கொண்டவர்கள் ஒருபோதும் மீண்டதில்லை.
வட்டிப்பணம் மாலை 4 மணிக்குள் தர வேண்டும். 1 மணி நேரம் தாமதமானாலும் வட்டித் தொகை 2 மடங்கு ஆகிவிடும். ஏன் என்று கேட்டால் அடி உதை. செல்லூர் காவல் நிலையத்தில் இவர்கள் மீது புகார் கொடுத்தால் அதிகாரிகள் கண்டுகொள்வதே இல்லை. செல்லூர் எஸ்.ஐ.அன்பழகன் இந்த கும்பலுக்கு மிக மிக நெருக்கம். அவரை மகா குடும்பத்தினர் செல்லமாக “மொட்டை மாமா” என்று அழைக்கிற அளவுக்கு நெருக்கம். எந்நேரமானாலும் மகா வகையறாக்கள் வீட்டுக்கு அவர் வந்து போவார். அன்றாடம், அவருக்கு விருந்துதான். கந்துவட்டியில் அவர் பங்காளி.
kanthu-vatti-hrpc-demo-09கடந்த 08.01.2015 அன்று கந்து வட்டி கேட்டு பாண்டிமகன் பாஸ்கரன் என்பவரை ஆபாச வார்த்தைகளால் திட்டி, அடித்து, கொலை மிரட்டல் விடுத்த சதீஷ், செல்வம், ஆஷா, பூஜா ஆகியோர் மீது பாஸ்கரன் புகார் அளித்த போது வழக்குப் பதிவு செய்த செல்லூர் காவல் அதிகாரிகள் கந்துவட்டி கும்பலிடம் ஒரு புகாரைப் பெற்று முதலில் புகார் கொடுத்த பாஸ்கரனின் மருமகன் அசோக் என்பவரைக் கைது செய்தது. அவர் ஜாமீனில் வந்துள்ளார். இப்படி இந்தக் கும்பல் மீது பல புகார்கள் கொடுத்தும் செல்லூர் காவல் நிலையம் செவிடன் போல உள்ளது. இந்த கும்பலின் அராஜகம் தொடர் கதையாக உள்ளது.
கந்துவட்டி கும்பலுக்கு நெருக்கமான எஸ்.ஐ.அன்பழகனிடம் அவர்களைக் கைது செய்யும்படி கேட்டபோது, “ஏன்டா நான் கூப்பிட்டா அவளுங்க வீட்டுல 5 பொம்பளைங்களும் வருவாளுங்க, உன் வீட்டில் எவளாச்சும் வருவாளா?” என்று திமிருடன் ஆபாசமாக திட்டியிருக்கிறார். ஆஷா, பூஜா, செல்வம் கும்பல் “போலீஸ் ஸ்டேசன் எங்க கண்ட்ரோல்ல இருக்குடா, நீ எத்தனை புகார் கொடுத்தாலும் உன்னால் எங்க மயிரக் கூட புடுங்க முடியாது” என்று சொல்லியுள்ளனர்.
‘காவல் நிலையங்கள் மக்களுடைய பாதுகாப்புக்கானது, காவலர்கள் உங்கள் நண்பர்கள்’ என்று அரசும் அதிகாரிகளும் சொல்கிறார்கள். ஆனால் காவலர்கள் யாருடைய நண்பர்களாக இருக்கிறார்கள். காவல் நிலையம் யாருக்காக இருக்கிறது என்றால் அது கிரிமினல்களுக்காகத்தான் என்பது இந்த கந்து வட்டி கிரிமினல் கும்பலின் பிரச்சனையில் பளிச்சென்று தெரிகிறது. கிரிமினல்களும் காவல் துறையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிற இந்தக் கூட்டணி மறைமுகமானது அல்ல. வெளிப்படையானது. காவல் நிலையத்தில் புகார் கொடுத்தவர் ஏழையாக இருந்தால் நிச்சயம் அவர்தான் சிறைக்குப் போவார். அவர் மீது பொய் வழக்கு போடப்படும் என்பதுதான் உண்மை நிலை. சதீஷ், செல்வம், ஆஷா, பூஜா இவர்கள் மீது 08-01-2015 அன்று வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது ஆனால் யாரும் கைது செய்யப்படவில்லை.
செல்லூர், பந்தல்குடி கந்துவட்டி அராஜகம்மேலும் இதே கும்பல்,  “பாதிக்கப்பட்டவர்கள் அவர்களுக்கு எதிராக போராடத் துணிந்துவிட்டார்கள். காவல் நிலையம், மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையரிடம் புகார் கொடுக்கிறார்கள்” என்பதை அறிந்தவுடன் கடந்த 17.01.2015 அன்று அந்தப் பகுதியில் பயங்கர கலவரம் நடத்தி வினோத்குமார், சுந்தர்ராஜன் ஆகிய இரண்டு பேரை தலையில் அரிவாளால் வெட்டி அவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வருகின்றனர்.
மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் தலையீட்டின் பேரில் கொலை முயற்சி செய்த ஆஷா, மகா, செல்வராஜ், செல்வம், சதீஷ், ரமேஷ், பூஜா உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ளனர். எஸ்.ஐ.அன்பழகன் மீது நடவடிக்கை எடுக்காமல் அதிகாரிகள் அவ்ரைப் பாதுகாக்கின்றனர்.
அதன் பொருள் என்ன? கந்து வட்டி கும்பலின் செல்வாக்கு எஸ்.ஐ. அன்பழகனோடு நின்றுவிடவில்லை. அது மேல்மட்டம் வரை பரவியிருக்கிறது என்பது தான்; அதுமட்டுமல்லாமல் பகுதியில் நடக்கும் விபாச்சார தொழிலில் அன்பழகன் பங்காளிதான் என்றும் சொல்கிறார்கள். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை வீட்டுக்கு அனுப்ப காவல்துறை நெருக்கடி கொடுத்து வருகிறது. இதை அம்பலப்படுத்தி ம.உ.பா. மையம் சுவரொட்டி ஒட்டியதற்காக துணை ஆணையர் புகார் கொடுக்கச் சென்ற மக்களைக் கடிந்து கொண்டுள்ளார்.
கந்து வட்டிக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது என்று அரசு சொல்கிறது. ஆனால் அரசின் சட்டம் ஒழுங்கு பாதுகாவலர்களான காவல் துறைதான் கந்துவட்டி கும்பலைக் காப்பாற்றுகிறது. இப்போது சிறையிலிருக்கும் கிரிமினல்களை விரைவில் மீட்டுக் கொண்டுவந்து திரும்பவும் ஆதிக்கத்தில் அமர்த்த முயற்சி செய்கிறது செல்லூர் காவல்துறை.
கந்து வட்டி பிரச்சனை இங்கு மட்டுமல்ல எல்லா இடங்களிலும் ஏழைகளின் ரத்தத்தை உறிஞ்சி வருகிறது. எனவே இதற்கு எதிராக மக்கள் ஒன்றிணைந்து உறுதியுடன் போராடி கந்து வட்டிக் கும்பலை அந்தப் பகுதியை விட்டே விரட்டியடிக்க வேண்டும். ஏற்கனவே இந்த கும்பல் ஒருமுறை ஊரைவிட்டு விரட்டியடிக்கப்பட்டுள்ளது. ஆனால் செல்லூர் காவல் நிலையத்தின் ஆதரவுடன் மீண்டும் அந்த கும்பல் வந்துவிட்டது. இந்த கிரிமினல் கூட்டணியை விரட்டியடிப்பது ஒன்றே இந்தப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வாகும்.
ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய ம.க.இ.க தோழர் ராமலிங்கம் “இன்று மதுரையில் பல பகுதிகளில் கந்துவட்டிக் கும்பல் ஒரு தனி அரசாங்கத்தையே நடத்திக் கொண்டிருக்கின்றன. பந்தல்குடியில் 8 பேர் கொண்ட ஒரு கும்பல், செய்கின்ற அராஜகத்திற்கு எல்லையே இல்லாமல் போய்விட்டது. ஒரு சிறிய கும்பல், அந்தப்பகுதியிலுள்ள 1000 பேரையும் கட்டுப்படுத்தி, ரவுடித்தனம் செய்ய முடிகிறது என்றால் அதற்குக் காரணம் காவல் துறைதான். கந்துவட்டிக் கும்பலுக்கும் காவல் துறைக்கும் உள்ள கள்ள உறவு தான் இத்தனை அராஜகத்திற்கும் அடிப்படையாக இருக்கிறது” என்று பேசினார்.
kanthu-vatti-hrpc-demo-06“கந்து வட்டி வன்கொடுமைக்கு எதிராகப் பல சட்டங்கள் இயற்றப்பட்டாலும், காவல்துறை அதைக் கண்டு கொள்வதேயில்லை. பந்தல்குடியில் கந்துவட்டிக் கும்பல் அராஜகத்திற்குக் காரணமே செல்லூர் எஸ்.ஐ அன்பழகன் தான். அவரை தட்டிக் கேட்காத மாவட்ட காவல் துறை நிர்வாகம் போலீக்கு எதிராக ஏன் போஸ்டர் போட்டாய் என்று கேட்கிறது” என்று இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப்பாசறை மாவட்ட துணை அமைப்பாளர் தோழர் தென்னரசு கேள்வி எழுப்பினர்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]
வி.வி.மு. உசிலை வட்டம் தோழர் குருசாமி பேசியதாவது
செல்லூர், பந்தல்குடி கந்துவட்டி அராஜகம்“கந்து வட்டிக்கு மதுரை சிறப்புத் தகுதி பெற்றது. தமிழ் நாட்டிற்கே மதுரை தான் வழிகாட்டி. இந்தக் கந்து வட்டியால் ஏழை மக்களின் வாழ்க்கையே நாசமாகிப் போய்விடுகிறது. சொந்த சாதிக்காரன், உறவுக்காரன் ஊர்க்காரன் என்றெல்லாம் பார்ப்பதில்லை. எல்லோரையும் உறிஞ்சிக் கொழுக்கவே அவர்கள் விரும்புகின்றனர்.
மக்கள் பிரிந்து கிடப்பதும், பலவீனமாக இருப்பதும் தான் அவர்களுக்கு பலம். புகார் கொடுத்தால் புகார் கொடுத்தவர் மீதே காவல்துறை வழக்குப் போடுகிறது. வட்டிக்கு கடன் வாங்கும் ஏழை மக்கள், ஏமாற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு வாங்குவதில்லை. நியாயமாக நடந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கின்றனர். ஆனால் கந்துவட்டியில் சிக்கியவுடன் அவர்களது வாழ்க்கை நிலை கீழாகப் போய் விடுகிறது. மீளவே முடியாத அளவிற்கு மேலும் மேலும் வட்டி அவர்களை அழுத்துகிறது. இதனால் வட்டி கட்ட முடியாமல் தடுமாறுகின்றனர்.
கந்து வட்டிக் கும்பலோ வீட்டிற்குள் நுழைந்து இரக்கமின்றி சூறையாடுகிறது. கேவலமாகத் திட்டுகின்றது. மானபங்கம் நடக்கிறது. இத்தனையும் காவல் துறையின் உதவியோடு நடக்கிறது என்பது தான் கொடுமை.”
கந்துவட்டிக் கும்பலால் நேரடியாக பாதிக்கப்பட்ட மூதாட்டி மகாராணி தனக்கு ஏற்பட்ட கொடுமைகளைக் கண்ணீர் மல்கப் பேசினார்.
செல்லூர், பந்தல்குடி கந்துவட்டி அராஜகம்“பேங்க் புத்தகத்தை அடமானம் வைத்து ரூ 4,000 கடன் வாங்கினேன். தின வட்டி 100-க்கு 10 ரூபாய். இது வரை ரூ 75,000 கட்டிவிட்டேன், இன்னமும் கடன் தீரவில்லை. எனக்கு வரும் 6,000ரூபாய் பென்சனில் 2,500 ரூ வங்கியில் வாங்கிய கடனுக்காக எடுத்துக் கொள்வார்கள். மீதப் பணத்தை இந்த கந்து வட்டிக்காரங்க எடுத்துக்கிறாங்க. எனக்கு கஞ்சி குடிப்பதற்குக் கூட வழியில்லை. மேலும் பணம் கேட்டு, என் வீட்டிற்குள் புகுந்து பாத்திரங்களையும் சூறையாடியுள்ளனர். இதே நிலை தான் பலருக்கும் ஏற்பட்டிருக்கு” என்று கண்ணீர் மல்கக் கூறினார் அந்த மூதாட்டி.
ம.உ.பா. மையம் லயனல் அந்தோணிராஜ், மதுரை மாவட்டச் செயலர்
“கந்து வட்டிக் கொடுமை நாடுமுழுவதும் இருக்கிறது. பந்தல் குடியிலும் நடக்கிறது. எல்லை மீறும் பொழுதுதான் போராட்டமாக வெடிக்கிறது. பொறுத்துப் பொறுத்து பார்த்த பந்தல்குடி பகுதி மக்கள், இனிமேல் பொறுக்க முடியாது என்ற நிலையில் தான் வீதிக்குப் போராட வருகிறார்கள்.
kanthu-vatti-hrpc-demo-11பந்தல்குடியில் சுரண்டுபவர்களும், சுரண்டப்படும் மக்களும் ஒரே சாதியைச் சார்ந்தவர்கள். பணம் கட்டினாலும் கடன் மட்டும் தீருவதேயில்லை. அசல் அப்படியே நிற்கிறது. செல்லூர் எஸ்.ஐ அன்பழகனை இந்தக் கந்துவட்டிக் கும்பல் “மொட்டை மாமா” என்று செல்லமாக அழைத்துக் கொஞ்சுகிறது என்றால் அவர்களுக்கிடையிலான உறவைப் புரிந்து கொள்ளுங்கள். மேல் மட்டம் வரை மாமூல் பிரித்துக் கொடுக்கப்படுவதால் உயர் அதிகாரிகள் எஸ்.ஐ அன்பழகனைத் தட்டிக் கேட்பதேயில்லை.
இன்றைய உலகமய சூழலில் 4 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். விதர்பா, கர்நாடகம், ஆந்திரா, பஞ்சாபில் இது நடந்தது. காரணம் கந்து வட்டிதான். வறட்சியினாலும் விவசாயிகள் செத்தனர். அதிகமாக விளைந்தும் விலை இல்லாமலும் செத்தனர். அங்கேயும் கந்துவட்டி பலரை பலி வாங்கியது.
இங்கேயும், கீரைத் தோப்பு, வாழைத்தோப்பு, அண்ணா தோப்பு, ஜெய்ஹிந்துபுரம், அவனியாபுரம், செல்லூரிலும் பலி கேட்கிறது. இந்த கந்து வட்டிக் கும்பலுக்கு எதிராக இங்கே உள்ள அரசியல் கட்சிகள் போராட மாட்டார்கள். ஏனெனில் இவர்களும் அந்தக் கும்பலுக்குப் பின்புலமாக இருக்கிறார்கள். எனவே அரசியல் கட்சிகளை நம்பிப் பயன் இல்லை.
விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்ட மக்கள் எல்லாம் ஒன்றிணைந்து ஒரே சக்தியாக திரண்டு, எழுந்து ம.உ.பா.மையம் மற்றும் மக்களுக்காக சமரசமின்றி போராடும் புரட்சிகர இயக்கங்களின் பின் நின்றால் இந்தக் கும்பலை ஓட ஓட விரட்டி அடிக்க முடியும்.
kanthu-vatti-hrpc-demo-10தமிழக அரசே ! காவல்துறையே !
  • செல்லூர் – பந்தல்குடி கந்துவட்டி கும்பலை உடனே குண்டர் சட்டத்தில் சிறையிலடை !
  • எஸ்.ஐ.அன்பழகனைப் பணி நீக்கம் செய் !
  • தாக்குதலுக்கு ஆளானவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கு !
  • கந்து வட்டிக் கொடுமையை ஒழிக்க விரைந்து நடவடிக்கை எடு !
தகவல்
மனித உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு
மதுரை மாவட்டக்கிளை vinavu.com