செவ்வாய், 3 பிப்ரவரி, 2015

வாஸ்து வியாதி பிடித்த சந்திரபாபு நாயுடுவும் சந்த்ரசேகர ராவும் மக்களின் பணத்தில் அடிக்கும் பெருங்கூத்து

ஐதராபாத்: ஆந்திரா, தெலுங்கானா முதல்வர்களின், 'வாஸ்து' மோகத்தால், கோடிக்கணக்கில், மக்களின் வரிப் பணம் பாழாவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.இந்த வகையில், 'ஆந்திரா தலைநகரை சிங்கப்பூர் போல் மாற்றுவேன்' என முழங்கிய முதல்வர் சந்திரபாபு நாயுடுவும், 'ஐதராபாத்தின் சுற்றுப் பகுதிகளை, தகவல் தொழில்நுட்ப முதலீடுகள் குவியும் கோட்டையாக ஆக்குவேன்' என சூளுரைத்த சந்திரசேகர ராவும், வாஸ்து வலையில் விழுந்து, போட்டி போட்டு, அரசு கஜானாவை காலி செய்து வருகின்றனர்.சந்திரசேகர ராவ், வெளிப்படையாகவே, 'தற்போதுள்ள தெலுங்கானா தலைமைச் செயலகத்தில் வாஸ்து சரியில்லை' என்று கூறி, 150 கோடி ரூபாய் செலவில், எரகடாவில் உள்ள அரசு காச நோய் மருத்துவமனை வளாகத்திற்கு மாற்றப் போவதாக அறிவித்துள்ளார்.  தமிழகத்தில் வாஸ்து என்ற பெயரில் சட்டசபை கட்டிடத்தையே மருத்துவமனையாக அறிவித்தவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்...


கலாசார சின்னம்:

கலாசாரச் சின்னமாக விளங்கும் மருத்துவமனையை இடிப்பது சரியா என, நிருபர்கள் கேட்டதற்கு, 'அர்த்தமற்ற கலாசாரச் சின்னங்கள் எதற்கு?' என, திடுக்கிடும் பதிலை, திருவாய் மலர்ந்தருளிஉள்ளார்.புதிய தலைமைச் செயலக கட்டுமான துவக்க நிகழ்ச்சியில், அனைத்து மதத்தினரும் கலந்து கொண்டு, தீய சக்திகளை விரட்ட பிரார்த்திப்பர் என்றும் தெரிவித்து உள்ளார். மேலும், தெலுங்கானா போராட்டம் வெற்றி பெற்று, தனி மாநிலம் அமைய, பல கடவுள்களிடம் வேண்டிக் கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார். இதன்படி, திருப்பதி பெருமாளுக்கு, 5 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க ஆபரணங்கள் காணிக்கையாக வழங்கப்படும்; அஜ்மீர் தர்காவில் தெலுங்கானா யாத்திரிகர்கள் தங்க, 5 கோடி ரூபாய் செலவில், விடுதி அமைக்கப்படும் என, சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.மேலும், விஜயவாடாவில் உள்ள, கனக துர்கம்மா கோவில், திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயார் கோவில்களுக்கு, தங்க மூக்குத்தி தருவதாகவும், பத்ரகாளிக்கு, தங்க கிரீடமும், வீரபத்ர சாமிக்கு, தங்க மீசை வழங்குவதாகவும், ராவ் வாக்களித்து விட்டாராம். இவற்றுக்கான செலவுகள் அனைத்தையும், அவர், தெலுங்கானா அரசு தலையில் கட்டி விட்டார். ஏற்கனவே நிதிப் பற்றாக்குறையால் தள்ளாடும் அரசு, சிறப்பு அந்தஸ்து வழங்குமாறு, மத்திய அரசை கோரி வருவது குறிப்பிடத்தக்கது.இத்துடன் விட்டாரா ராவ்... பேகம்பட்டில் உள்ள முதல்வர் இல்லத்தை வாஸ்து முறைப்படி மாற்றி, யாக பூஜை அமர்க்களங்களுடன் பணியைத் துவங்கினார்.

இவருக்கு சற்றும் சளைத்தவர் அல்ல சந்திரபாபு நாயுடு. தெலுங்கு தேசம் கட்சி தலைமை அலுவலக வாசலை, வாஸ்து முறைப்படி, பல முறை மாற்றி அமைத்த பெருமை இவருக்கு உண்டு.ஆந்திர முதல்வரான பின், நீர் நிலை அருகே தான் தலைமைச் செயலகம் இருக்க வேண்டும் என, வாஸ்து நிபுணர்கள் கூற, உசேன் சாகர் ஏரியை நோக்கி, அலுவலகத்தை அமைத்து விட்டார். ஆந்திரா பிரிக்கப்பட்ட பின், தலைமைச் செயலகத்தில், முதல்வர் அலுவலகம் உள்ள 'எச்' பிளாக், பல கோடி ரூபாய் செலவில், வாஸ்து முறைப்படி புதுப்பிக்கப்பட்டது. 10 ஆண்டு இடைவெளிக்கு பிறகு மீண்டும் முதல்வரான சந்திரபாபு நாயுடு, ராசி சரியில்லை என்று கூறி, 20 கோடி ரூபாய் செலவு செய்து, 'எல்' பிளாக்கில், அலுவலகத்தை அமைத்துக் கொண்டார்.

நீர்நிலை அருகில்...:

ஆனால், இதுவும் வாஸ்துபடி சரியில்லை என, அண்மையில் குடியரசு தினத்தையொட்டி, கவர்னர் அளித்த விருந்தின் போது, நாயுடுவிடம், ராவ் தெரிவித்ததாக கேள்வி. கடந்த ஆண்டு இதே நிகழ்ச்சியில், நீர் நிலை அருகில் உள்ள தலைநகரங்கள் தான் செழிப்பாக உள்ளன என, நாயுடுவிடம், ராவ் ஓதியுள்ளார்.இதனால் தான், ஆந்திரா தலைநகரை, குண்டூர் மாவட்டம், கிருஷ்ணா நதிக்கரை அருகே சந்திரபாபு அமைக்க முடிவு செய்ததாகவும் கூறப்படுகிறது. 'அரசு எவ்வழியோ, குடியும் அவ்வழி' என்பது போல், ஆந்திரா, தெலுங்கானா முதல்வர்களை பின்பற்றி, பல அரசு துறை உயரதிகாரிகளும் வாஸ்து முறைப்படி, அலுவலகங்களை மாற்றி அமைத்து வருகின்றனர். இதற்காக மக்களின் வரிப் பணம் பல கோடி ரூபாய் செலவு செய்யப்படுவது தான் வேதனை. dinamalar.com

கருத்துகள் இல்லை: