செவ்வாய், 3 பிப்ரவரி, 2015

ஐ.எஸ் இஸ்லாமிய பயங்கரவாதிகள் என் மகளை தினம் தினம் பாலியல் சித்திரவதைகள்.......


இராக்குக்கு 5 முறை வந்துவிட்டேன் 2007-க்குப் பிறகு. இப்போது பார்த்ததைப் போன்ற துயரத்தை இதற்கு முன்னால் பார்த்ததில்லை. இராக், சிரியா நாடுகளிலிருந்து வெளியேறிய அகதிகள் தங்க வைக்கப் பட்டுள்ள முகாம்கள், தற்காலிக வசிப்பிடங்கள் ஆகிய வற்றைப் பார்வையிட்டேன்.
கடந்த 4 ஆண்டுகளாக நடக்கும் சண்டையில் சிரியாவின் மொத்த மக்கள்தொகையான 2.3 கோடியில் கிட்டத்தட்ட பாதிப்பேர் தங்களுடைய வசிப்பிடங்களை விட்டு வெளியேறி விட்டார்கள். இராக்கில் பயங்கரவாதிகளின் வன்செயல் களுக்கு அஞ்சி 2 கோடிக்கும் மேற்பட்டவர்கள் வசிப்பிடங் களை விட்டு வெளியேறிவிட்டார்கள். உயிருக்கு அஞ்சி ஓடி வந்துள்ள இந்த அகதிகள், மிகவும் கொடூரமான பயங்கரங்களை நேரில் பார்த்தவர்கள். அவர்களுடைய குழந்தைகளின் படிப்பு அவ்வளவுதான். வாழ்வதற்கு வழி தெரியாமல் அனைவரும் திண்டாடுகிறார்கள். நாலா புறங்களிலும் பயங்கரவாதமெனும் கொடூரம்.
கடந்த சில ஆண்டுகளாகவே அகதி முகாம்களைப் பார்த்துவருகிறேன். கூடாரத்தில் அமர்ந்து அகதிகளின் சோகக் கதைகளைக் கேட்கிறேன். என்னால் முடிந்த அளவுக்கு ஆறுதல் சொல்கிறேன், அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டப்பார்க்கிறேன். அவர்களுடைய துயரங்களிலே நானும் பங்குகொள்கிறேன் என்ற உணர்வை ஏற்படுத்தவும், என்னால் முயன்ற அளவுக்கு வழிகாட்டவும் விரும்பு கிறேன். இந்த முறை அகதிகளின் துயரங்களைக் கேட்டு வாயடைத்துப்போனேன்.
என் மகள் எங்கே?
“என்னுடைய மகளை ஐ.எஸ். படையினர் பிடித்து வைத்துக்கொண்டு, பாலியல்ரீதியாக தினம்தினம் சித்தர வதை செய்கிறார்கள். அவளை விட்டுவிட்டுத் தனியாக இங்கு முகாமில் இருப்பதை நான் விரும்பவில்லை. என் மகள் துயரப்பட்டாலும் என் கண் முன்னால் இருப்பதையே விரும்புகிறேன். நானும் அங்கு இருப்பது என்றால் என்னவென்று தெரியும், என்னையும் உடல்ரீதியாகப் பலாத்காரம் செய்து சீரழிப்பார்கள்; என் மகளுக்கருகில் இருக்கிறேன் என்ற ஆறுதலாவது எனக்கு மிஞ்சியிருக்கும்” என்று ஒரு தாய் கண்ணீர் பொங்கிவரக் கதறியபோது என்ன சொல்லித் தேற்றுவது?
“நானும் என்னைச் சேர்ந்தவர்களும் ஒரு கிடங்கில் அடைக்கப்பட்டோம். திடீரென ஆட்கள் வருவார்கள், ஒரே சமயத்தில் எங்களில் 3 பேரை இழுத்துக்கொண்டுபோய் பாலியல்ரீதியாகக் கொடுமைப்படுத்துவார்கள்; எங்களைத் தேடிக்கொண்டு என்னுடைய அண்ணன் வந்தார், அவரைப் பார்த்ததும் பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றுவிட்டார்கள்” என்று 13 வயதுச் சிறுமி அழுகையும் கோபமுமாகச் சொல்லித்தீர்த்தாள். அவளிடம் என்ன பேச முடியும்?
அடுத்த கூடாரத்தில் 8 குழந்தைகள் மட்டும் இருந்தார்கள். அவர்களுடைய அப்பாவைக் கொன்றுவிட்டார்கள். அம்மா ‘எங்கோ’ இழுத்துச் செல்லப்பட்டார். 7 குழந்தைகளுக்கும் மூத்தவனான 19 வயதுப் பையன்தான் இப்போது அவர்களுக்கு அம்மா, அப்பா எல்லாம். “உனக்குத்தான் இப்போது எல்லாப் பொறுப்பும்” என்று நான் சொன்னவுடன் அந்தச் சிறுவன் சோகத்துடன் புன்னகைத்தான். சற்றே அஞ்சிய நிலையில் இருந்த தனது குட்டித் தங்கையைத் தேற்றும்விதமாக அவளுடைய தோளில் கைபோட்டு அருகில் அணைத்துக்கொண்டான். “இவர்களுக்கு உதவ என்னை விட்டுவைத்ததற்காகக் கடவுளுக்கு நன்றி செலுத்துகிறேன்” என்றான். அவனும் அவனுடைய உடன்பிறப்புகளும் எதிர்காலம் நல்லதாக இருக்கும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள். எவ்வளவு துயரம் வந்தாலும், அதைக் கடவுளின் துணையுடன் வென்றுவிட முடியும் என்று நினைக்கிறார்கள்.
பசி, பட்டினி, கொலை
எத்தனை லட்சம் மக்கள் பசி, பட்டினி, படுகொலைகளுக்கு ஆளாகியிருக்கிறார்கள். பெண்களுக்கு நேரிட்டிருக்கும் துயரம் சொல்லி மாளாது. பசியாலும் நோயாலும் வாடும் குழந்தைகளின் முகங்களை நேரில் பார்க்க முடியவில்லை. குழந்தைகள் அச்சமும் அவநம்பிக்கையும் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.
நாம் அவர்களைக் கைவிட்டுவிட்டோம் என்று அவர்கள் நினைத்தால், அதற்காக அவர்களைக் குறை சொல்ல முடியுமா? உண்மையும் அதுதானே? ஜெனீவா மேற்கொண்ட முயற்சி ஓராண்டுக்கு முன்னால் தோல்வியுற்ற பிறகு, போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் ஒரு முன்னேற்றமும் இல்லையே? சிரியா பற்றி எரிகிறது; இராக்கின் பல பகுதிகளில் இன்னமும் கடும் சண்டை நடந்துவருகிறது. இந்த அகதிகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஏராளமான நாடுகள் தங்களுடைய கதவுகளை அடைத்துவிட்டன. அவர்கள் இப்போது போவதற்கே இடமில்லாமல் நிர்க்கதியாகத் தவிக்கிறார்கள்.
அகதிகள் வெடிப்பு
சிரியாவின் பக்கத்து நாடுகளில் இப்போது 40 லட்சம் சிரியர்கள் அகதிகளாகத் தஞ்சம் அடைந்துள்ளார்கள். ஜோர்டானின் மக்கள்தொகையில் 10% இப்போது சிரியர்கள்தான். லெபனானில் 25% சிரியர்கள்தான். அவர்களுக்கு உணவு, குடிநீர், தங்க இடம், உடுக்க உடை, கல்வி, சுகாதார வசதி, வேலை ஆகிய அனைத்தும் தேவை. இதை அவர்களுக்கு வழங்கினால், தன்னுடைய சொந்த மக்களுக்குத் தருவதற்கு லெபனானிடம் அதிகம் இருக்காது. எவ்வளவு பெரிய பணக்கார நாடாக இருந்தாலும், இப்படி அகதிகள் படையெடுப்பை எதிர்கொள்ள நேரிட்டால் நொறுங்கிப்போய்விடும்.
புதிதாக இருவர் சந்தித்துக்கொண்டால், குண்டுவீச்சு பற்றியும் திடீரென்று பயங்கரவாதிகள் வீடு புகுந்து வீட்டில் இருந்தவர்களைச் சரமாரியாகச் சுட்டுக்கொன்றதுபற்றியும், இளம் பெண்களைத் துப்பாக்கிமுனையில் தூக்கிச் சென்றது பற்றியும்தான் பேசிக்கொள்கிறார்கள். இதையெல்லாம் கேட்கும்போது, நம் நிலைமை என்ன என்று சிந்திக்கத் தோன்றுகிறது. இதெல்லாம் எங்கோ தொலைவில் நடக்கிற பயங்கரங்கள், நமக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்று முகத்தைத் திருப்பிக்கொண்டுவிட முடியாது.
சர்வதேசச் சமூகத்தின் லட்சணம்
லட்சக் கணக்கான அகதிகளின் நல்வாழ்வு, மத்தியக் கிழக்கின் எதிர்காலம் மட்டுமே இப்போதைய பிரச்சினைகள் அல்ல. சர்வதேச நாடுகளின் அமைப்புகள் என்ன செய் கின்றன? மனித உரிமைகளைக் காப்போம் என்று நாம் கூட்டாக எடுத்துக்கொண்ட உறுதிமொழிக்குப் பொருள் என்ன? சிரியாவிலும் இராக்கிலும் அன்றாடம் ஆயிரக் கணக்கானோர் சுட்டுக்கொல்லப்படவும், லட்சக் கணக்கானோர் வீடு, வாசல்களை இழந்து முன்பின் தெரியாத இடங்களுக்குப் பிச்சைக்காரர்களாக ஓடவும், பெண்களும் சிறுமிகளும் பாலியல்ரீதியில் சூறையாடப்படுவதற்கும் காரணமாக இருக்கும் இந்த அராஜகத்தை நாம் எப்படி முடிவுக்குக் கொண்டுவரப்போகிறோம்?
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, ஐக்கிய நாடுகள் சபை அகதிகள் முகமையை ஏற்படுத்தியதற்குக் காரணம், அந்தப் போரில் இடம்பெயர்ந்த, வீடுவாசலை இழந்த மக்கள் விரைவாகத் தங்களுடைய நாடுகளுக்கும் சொந்த ஊர்களுக்கும் சென்று இயல்பு வாழ்க்கையை மீண்டும் தொடங்க வேண்டும் என்பதற்காகத்தான். ஆண்டுதோறும் பல்வேறு நாடுகளிலிருந்து அகதிகளாக வெளியேறும் மக்களுக்குக் கூடாரம் அமைத்துக்கொடுத்து துணி, மருந்துகள் வாங்கித்தந்து 3 வேளையும் சாப்பாடு போடுவதற்காக அல்ல. அப்படிச் செய்தால், இந்தக் குழந்தைகள் நாடற்றவர்களாக நிரந்தரமாகத் திரிய நேரும். அந்தக் குடும்பங்கள் தங்களுடைய வீடுகளுக்கே திரும்ப முடியாத நிலைமை ஏற்படும். அந்த நாடுகளில் அமைதியே ஏற்படாது. துரதிர்ஷ்டவசமாக இன்றைக்கு அதுதான் நடக்கிறது. 5.1 கோடி மக்கள் உலகம் முழுவதுமே ஏதாவதொரு நாட்டிலிருந்து வெளியேறி முகாம்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அரசியல் புகலிடம் தேடியும் உயிருக்குப் பாதுகாப்பு வேண்டியும் தங்கியிருக்கிறார்கள். உலக வரலாற்றில் இப்போதிருக்கும் அளவுக்கு அகதிகள் முன்பு எப்போதும் இருந்ததில்லை.
லட்சக் கணக்கான அகதிகளை வைத்துக்கொண்டு பராமரிக்க முடியாமல் திண்டாடும் சிரியாவின் பக்கத்து நாடுகளுக்கு சர்வதேச உதவி தேவைப்படுகிறது. ஐ.நா. சபை விடுக்கும் மனிதாபிமான கோரிக்கைகளை ஏற்று நன்கொடை தருவோர் எண்ணிக்கை குறைந்துவிட்டது. இந்த வளையங்களைத் தாண்டி உள்ள நாடுகள் அகதிகளைத் தங்கள் நாட்டில் ஏற்று மறுவாழ்வு அளிக்க வேண்டும். குறைந்தபட்சம், சித்தரவதைகளுக்கும் பாலியல் வன்முறைகளுக்கும் ஆளானவர்களுக்காவது கருணை காட்ட வேண்டும். சமாதானம் ஏற்பட சர்வதேசச் சமூகம் வழிகாண வேண்டும். நம்முடைய தார்மிக விழுமியங்களை நம்முடைய வீட்டுக்குள், நம்முடைய நாட்டுக்குள், பத்திரிகைகளின் கட்டுரைகளில், கடிதங்களில் மட்டும் காட்டினால் போதாது. மத்தியக் கிழக்கிலும், சீரழிக்கப்பட்டுவிட்ட சிரியாவின் நகரங்களிலும் இந்த விழுமியங்கள் காப்பாற்றப்பட வேண்டும். அதற்கு நம்முடைய உதவிகள் குவிய வேண்டும். tamil.hindu.com
- ஏஞ்சலினா ஜோலி,
ஹாலிவுட் நடிகை, அகதிகளுக்கான ஐ.நா. சபை ஆணையத்தின் சிறப்புத் தூதர், பாலியல் வன்முறைக்கு எதிரான அமைப்பின் இணை நிறுவனர்.
|தமிழில்: சாரி.| 

கருத்துகள் இல்லை: