செவ்வாய், 3 பிப்ரவரி, 2015

மைக்கல் குன்ஹாவின் சதியால்தான் ஸ்ரீ ரங்கம் இடைதேர்தலா? ஜெயலலிதாவின் அறிக்கை சொல்கிறது?

சென்னை: சதியும், விதியும் நடத்திய சதிராட்டத்தால் நடக்கும் இடைத்தேர்தல் என ஸ்ரீரங்கம் வாக்காளருக்கு எழுதிய பிரசார கடிதத்தில் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், ''கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் என்னை வெற்றி பெறச் செய்து, அதன் மூலம் 3வது முறையாக தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்க எனக்கு வாய்ப்பு நல்கினீர்கள். இதற்காக என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். கடந்த 2006ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை நடைபெற்ற தி.மு.க. ஆட்சியில் அனைத்துத்துறைகளும் அதல பாதாளத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. அதுமட்டுமின்றி, நிலஅபகரிப்பு, கொலை, கொள்ளை, சட்டம்-ஒழுங்கு பிரச்னை என்பதுடன் மின்வெட்டால் தமிழகமே இருள் சூழ்ந்த நிலைக்கு தள்ளப்பட்டது.


அப்படியொரு அவல ஆட்சியை தந்த தி.மு.க.வை மக்கள் சக்தி என்னும் உங்கள் துணையோடு வீழ்த்தி, அ.தி.மு.க. ஆட்சியை மீண்டும் ஏற்படத்தி தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்றுள்ளேன்.  தமிழக மக்களின் உரிமையை நிலைநிறுத்துவதோடு மட்டுமின்றி, தமிழக மக்களின் வாழ்வு வளம் பெறவும், தமிழ்நாடு நலம் பெறவும், பல்வேறு முன்னோடி திட்டங்களை தீட்டி தமிழர்களின் பெருமையை நிலைநாட்டியதை அங்கீகரிக்கும் வகையில் தான் கடந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் எனது தலைமையிலான அ.தி.மு.க.விற்கு மகத்தான வெற்றியை தமிழக மக்கள் தேடி தந்தார்கள்.

திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட இந்த ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளருக்கு பெருவாரியான வாக்குகளை வழங்கி, வளர்ச்சிக்கு உறுதுணையாக நாங்களும் உள்ளோம் என்பதை நீங்கள் பறைசாற்றினீர்கள்.

ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இதைத்தேர்தல் நீங்கள் விரும்பாத இடைத்தேர்தல் என்பதை நான் அறிவேன். இந்த இடைத்தேர்தல் என் மீது போடப்பட்ட வழக்கின் தீர்ப்பின் காரணமாக ஏற்படுத்தப்பட்ட இடைத்தேர்தல். சதியும், விதியும் இணைந்து நடத்திய சதிராட்டத்தில் விளைந்திட்ட இடைத்தேர்தல். ஸ்ரீரங்கம் தொகுதி வாக்காளராகிய உங்கள் அன்பையும், பற்றையும், என்னுடன் பின்னி பிணைந்தள்ள பாசத்தையும், இந்த இடைத்தேர்தலால் எள்ளளவும் குறைத்திட இயலாது. நமக்குள்ளே உள்ள பந்தம் இன்னும் மேன்மை அடையவே இது வழிவகுக்கும்.

கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் நமக்கு சோதனை அளித்துள்ள இறைவன், நம் நெஞ்சுரத்தை வலுப்படுத்தி இதையே சாதனையாய் மாற்றி விடுவார் என்பதில், உங்களை போலவே எனக்கும் அதிக நம்பிக்கை உண்டு. இருப்பினும், இந்த இடைப்பட்ட காலத்தில் தேர்தல் சட்ட விதிமுறைகளின்படி நடைபெறும் இந்த இடைத்தேர்தலில் உங்களது வாக்குகளை அ.தி.மு.க. வேட்பாளர் வளர்மதிக்கு வழங்கிட இந்த கடிதம் வாயிலாக கேட்டுக் கொள்கிறேன்'' எனக் கூறியுள்ளார்.

மேலும், தமிழகம் மற்றும் ஸ்ரீரங்கம் தொகுதிக்கு தனது ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட நலத்திட்டங்களையும் ஜெயலலிதா பட்டியலிட்டுள்ளார்.

இந்த கடிதம் அ.தி.மு.க. தொண்டர்கள் மூலம் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது.

முன்னதாக, ஒலி நாடாக்கள் மூலமும் ஜெயலலிதாவின் பிரசாரம் ஒலிபரப்பப்பட்டது விகடன்.com

கருத்துகள் இல்லை: