கேரளத்தின் மேற்கு தொடர்ச்சி மலையில் கஸ்தூரி ரங்கன் கமிட்டி அறிக்கைகளை அமல்படுத்த பரிந்துரை செய்ததுதான் தனக்கு எதிரிகள் உருவாக காரணமாக அமைத்துவிட்டது எனக் கூறு கிறார் காங்கிரஸிலிருந்து விலகிய ஜெயந்தி நடராஜன்.
கஸ்தூரிரங்கன் கமிட்டி அறிக்கையின் பின்னணியில் ஜெயந்திக்கு எதிராக நடந்தவை குறித்து ‘தி இந்து’விடம் விரிவாகப் பேசினார் கேரள தமிழர் கூட்ட மைப்பின் அமைப்பாளர் அன்வர் பாலசிங்கம்.
சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாப் பதற்காக கேரளத்தின் இடுக்கி மாவட்டத்தில் 123 கிராமங்களில் கஸ்தூரி ரங்கன் கமிட்டி பரிந்துரை களை அமல்படுத்த முனைந்தது மத்திய அரசு. அந்த கிராமங்களில் புதிய கட்டுமானங்களை எழுப்ப தடை விதித்தும் சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்கும் விதமாக மேலும் பல கட்டுப்பாடுகளையும் கஸ்தூரி ரங்கன் கமிட்டி பரிந் துரை செய்திருந்தது. இந்தப் பரிந்துரைகள் கேரளத்தில் மட்டு மல்லாது தமிழகம் உள்ளிட்ட ஏழு மாநிலங்களில் அமலுக்கு வந்தது.
மற்ற மாநிலங்களில் இதற்கு எதிராக எந்தப் போராட்டமும் வெடிக்கவில்லை. கேரளத்தில் மட்டும் பெரும் எதிர்ப்புக் கிளம்பியது.
கேரள சம்ரக்‌ஷன சமிதி என்ற அமைப்பின் தலைவர் ஃபாதர் செபாஸ்டின் இதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்தார். 123 கிராமங்களிலும் ஏராளமான சிறுபான்மையினர் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. கமிட்டி பரிந்துரைகள் அமல்படுத்தப் பட்டால் இந்தப் பள்ளிகளுக்கு பாதிப்பு வரும். இதனால் சம்ரக்‌ஷன சமிதி எதிர்ப்பு தெரிவித்து இடுக்கி மாவட்டத்தில் மூன்று நாட்களும் மாநிலம் முழுக்க ஒரு நாளும் முழு அடைப்பு நடத்தியது.
ஆனால், இவர்கள் யாரைப் பற்றியும் ஜெயந்தி கவலைப்பட வில்லை. சுற்றுப்புறச் சூழலுக்கு ஆபத்து உண்டாக்கும் எந்த கோப்பிலும் நான் கையெழுத்திட மாட்டேன் என உறுதியாக நின்றார் அப்போது வனம் மற்றும் சுற்றுச் சூழல் அமைச்சராக இருந்த ஜெயந்தி நடராஜன்.
இதையடுத்து, சக அமைச்சர் வீரப்ப மொய்லி மூலமாக அப்போது ஜெயந்திக்கு கடும் நெருக்கடி கொடுக்கப்பட்டது. அதற்கும் அவர் அசரவில்லை. அதன் பிறகுதான் ஜெயந்தியை அமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வைத்தார்கள். அவர் ராஜினாமா செய்த மறுநாளே அவரது துறையை கவனித்து வந்த ஜெய்ராம் ரமேஷை கையெழுத்துப் போடவைத்து கேரளத்தில் மட்டும் கஸ்தூரி ரங்கன் கமிட்டி சிபாரிசுகளை அமல்படுத்த விதிவிலக்கு அளிப்பதாக அறிவித்தார்கள்.
இப்படி விதிவிலக்கு அளிக்கப்படாமல் இருந்திருந்தால் கேரளத்தின் விளிம்பில் தேனி மாவட்டம் பொட்டிபுரத்தில் இப்போது நியூட்ரினோ ஆய்வு மையம் வந்திருக்காது. இதன் பின்னணியிலும் உள்ளார்ந்த சதி இருக்கிறது. நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க கேரளத்தில் எத்தனையோ இடங்கள் இருக்கும்போது தமிழகத்தை தேர்வு செய்திருக்கிறார்கள்.
நியூட்ரினோ ஆய்வு மையத்தை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆதரிக்கிறது. ஆனால், கேரள அறிவியல் இயக்கம் எதிர்க்கிறது. நியூட்ரினோவுக்காக வெடிவைக்கப்பட்டால் கேரளத்தில் உள்ள முல்லைப் பெரியாறு உள்ளிட்ட 22 அணைகளுக்கு பாதிப்பு வரலாம் என்பது கேரள அறிவியல் இயக்கத்தின் அச்சம். அப்படி எதாவது விபரீதம் நடந்தால் அதையே காரணம் காட்டி முல்லைப் பெரியாறு அணையை உடைக்க வேண்டும் என்ற கோஷத்தை மீண்டும் கையிலெடுப்பார்கள். இப்படியெல்லாம் நடக்கும் என்று எதிர்பார்த்துத்தான் தனது நிலையில் உறுதியாக இருந்தார் ஜெயந்தி. ஆனால், அவரது அமைச்சர் பதவியை பறிகொடுக்கச் செய்து நினைத்ததை சாதித்து விட்டார்கள். இவ்வாறு தெரிவித்தார் அன்வர் பாலசிங்கம்tamil.hindu.com