செவ்வாய், 19 மார்ச், 2013

அதிகரிக்கும் ஆதிதிராவிட பெண்கள் மீதான வன்கொடுமைகள்

தமிழகத்தில், கடந்த நான்கு ஆண்டுகளில், கலப்பு திருமணம் செய்ததால், அதிக அளவில் பாதிக்கப்பட்டவர்கள், ஆதிதிராவிட பெண்கள் என்பது, ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.
தமிழகத்தில், 2009-2012 ஆண்டுகளில், கலப்பு திருமணம் செய்து பாதிக்கப்பட்ட பெண்கள் குறித்து, மதுரையைச் சேர்ந்த, "சாட்சியம்' என்ற நிறுவனம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலிருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் ஆய்வு செய்தது. அதில், கலப்பு திருமணம் செய்து கொண்டு, கணவரால் பாதிக்கப்பட்டவர்கள், கணவரின் குடும்ப உறுப்பினர்களால், சித்திரவதைக்கு உள்ளானோர், திருமணம் செய்து, பின் சேர்ந்து வாழ மறுத்து, கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, ஏமாற்றி, பாலியல் வன்புணர்ச்சியால் பாதிக்கப்பட்ட பெண்கள் ஆகிய, நான்கு வன்கொடுமை நிலைகளின் அடிப்படையில், பாதிக்கப்பட்டவர்கள் குறித்து ஆய்வு செய்தது. அவற்றில், அதிக அளவில் பாதிக்கப்பட்டது, ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்த பெண்களே என்பது, ஆய்வில் தெரியவந்தது.
84 கலப்பு திருமணங்கள்: மொத்தம், 17 மாவட்டங்களில், கடந்த நான்கு ஆண்டுகளில், 84 பெண்கள் கலப்புத் திருமணம் செய்துள்ளனர். இவர்களில், 67 பேர், ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்த பெண்களும், பிற சமூகத்தைச் சேர்ந்த, 17 பெண்களும், வன்கொடுமைகளில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆசை வார்த்தை கூறி: உயர் ஜாதிப் பெண்களை, கலப்புத் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, வன்கொடுமைகளில் ஈடுபட்ட வகையில், 17 சம்பவங்கள் நடந்துள்ளன. இவர்களில், நான்கு பேர், ஆதி திராவிட சமூகத்தைச் சேர்ந்தவர்கள்; 13 பேர், உயர் ஜாதியைச் சேர்ந்தவர்கள். நான்கு ஆண்டுகளில், பதிவு செய்யப்பட்ட, 84 வழக்குகளில், கலப்பு திருமணம் செய்து கொண்டு கணவனாலும், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, ஆண்களால் ஏமாற்றப்பட்டவர்களில், 96.4 சதவீத பெண்கள், ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்தவர்கள்; மற்ற பெண்கள், 3.6 சதவீதத்தினர்.
பாலியல் வன்புணர்ச்சி: பாதிக்கப்பட்ட, 67 ஆதிதிராவிட பெண்களில், நான்கு பெண்கள், கணவரின் வன்முறையாலும்; ஐந்து பெண்கள், கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் வன்முறையாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். அது மட்டுமின்றி, ஆறு பெண்கள், திருமணத்திற்கு பின், கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரால் விரட்டியடிக்கப்பட்டு, கைவிடப்பட்டுள்ளனர். மற்ற, 52 ஆதிதிராவிட பெண்கள், உயர் ஜாதி ஆண்களால், திருமணம் செய்து கொள்வதாக, ஆசை வார்த்தை கூறி, ஏமாற்றப்பட்டு, பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
கணவரின் வன்கொடுமை: பாதிக்கப்பட்ட, 17 உயர் ஜாதிப் பெண்களில், 13 பேர், ஜாதி இந்து கணவர்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில், ஆறு பேர் கணவரின் வன்முறையாலும்; மூன்று பேர், கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் வன்முறையாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். அது மட்டுமில்லாமல், எட்டு பெண்கள் திருமணம் செய்து கொள்வதாக, ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி, பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டவர்கள். உயர் ஜாதி பெண்களை பாதிப்புக்குள்ளாக்கிய, ஆதிதிராவிட ஆண்கள் மீது, நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில், இரண்டு பெண்கள், கணவரின் வன்முறையாலும், இரண்டு பெண்கள் கணவரின் குடும்பத்தினராலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- நமது நிருபர் - dinamalar.com

கருத்துகள் இல்லை: