வியாழன், 20 டிசம்பர், 2012

கற்பழிப்பை கண்டித்து போராட்டம்: டில்லி முதல்வர் வீடு முற்றுகை

Samy Chinnathambi rayong,தாய்லாந்து :
குற்றவாளிகள் தண்டிக்க பட வேண்டும். அதுவும் ஆயுள் தண்டனையாகவோ அல்லது தூக்கு தண்டனையாகவோ இருக்க வேண்டும்...ஏனெனில் அவர்கள் செய்த குற்றம் அப்படி. அவர்கள் செய்தது சினிமாவில் பார்க்ககூடிய ரவுடியிசம். அனாயசமாக ஒரு பேருந்தை எடுத்துகொண்டு கண்ணில் பட்டவர்களிடம் வழிப்பறி செய்ததோடு ஒரு பெண்ணையும் பாலியல் பலாத்காரம் செய்து இருக்கிறார்கள். இதில் பெண்ணின் உடை பிரச்சினையோ அல்லது வேறு செய்கைகளோ எதுவும் இல்லை...குற்றவாளிகளின் முழு நோக்கமும் குற்றம் செய்வது மட்டுமே. எனவே ஆயுள் தண்டனை அல்லது தூக்கு தண்டனை கட்டாயமாக கொடுக்க வேண்டும்...அதுவே மற்றவர்களுக்கு குறிப்பாக ரவுடிகளுக்கு பயத்தை கொடுக்கும்.... 
 புதுடில்லி: டில்லியில், மருத்துவக் கல்லூரி மாணவி, வெறிக் கும்பலால் கற்பழிக்கப்பட்டதைக் கண்டித்து, டில்லியில் முதல்வர் ஷீலா தீட்ஷித் இல்லம், போலீஸ் தலைமையகம் ஆகிய இடங்களில், முற்றுகை போராட்டம் நடந்ததால், பரபரப்பு ஏற்பட்டது. போலீசார், தண்ணீரை பீய்சி அடித்து, போராட்டக்காரர்களை கலைத்தனர்.
டில்லியில், கடந்த ஞாயிறன்று இரவு, நண்பருடன் பஸ்சில் பயணித்த, மருத்துவ மாணவி, ஏழு பேர் கும்பலால் கற்பழிக்கப்பட்டு, பஸ்சிலிருந்து தூக்கி வீசப்பட்டார். அவரது நண்பரும், கடுமையாகத் தாக்கப்பட்டு, தூக்கி எறியப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில், அந்த மாணவி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்துக்கு, மாணவர்கள், பெண்கள் நல அமைப்புகள், அரசியல் கட்சியினர் உள்ளிட்ட, பல்வேறு தரப்பினரும், கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்; போராட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.
மாணவர்களின் போராட்டம், நேற்றும் தொடர்ந்தது. டில்லி முதல்வரும், காங்., மூத்த தலைவர்களில் ஒருவருமான, ஷீலா தீட்ஷித் வீட்டின் முன், பெண்கள் நல அமைப்பினரும், மாணவர்களும், அதிக அளவில் திரண்டு, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
"கற்பழிப்பு சம்பவத்துக்கு பொறுப்பேற்று, டில்லி முதல்வர், தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்' என, அவர்கள் கோஷம் எழுப்பினர். இதனால், அங்கு பதற்றமான சூழல் நிலவியது. நேரம் செல்ல செல்ல, போராட்டத்தில் பங்கேற்றவர்
களின் எண்ணிக்கை அதிகரித்ததால், போலீசார், அவர்கள் மீது, தண்ணீரை பீச்சியடித்து,
கலைத்தனர்.இதேபோல், டில்லியில் உள்ள, போலீஸ் தலைமையகமும், போராட்டக்காரர்களின் முற்றுகைக்கு தப்பவில்லை.
"சட்டம் - ஒழுங்கில் கவனம் செலுத்தாத, டில்லி போலீசார் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, போராட்டத்தில் பங்கேற்றவர்கள் வலியுறுத்தினர். அவர்களையும், போலீசார் கலைத்தனர். டில்லி, ஜந்தர் மந்தர் பகுதியில், பா.ஜ.,வைச் சேர்ந்தவர்களும், போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் பங்கேற்ற பெண் ஒருவர் கூறியதாவது:
டில்லியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. நாங்கள், எங்கு வசிப்பது என்றே தெரியவில்லை. இதற்கு, யாருமே பொறுப்பேற்க மறுக்கின்றனர். டில்லி முதல்வரை கேட்டால், "டில்லியில், சட்டம் - ஒழுங்கு, மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது' என்கிறார்.உள்துறை அமைச்சரோ,
"எங்களுக்கும், இதற்கும் சம்பந்தம் இல்லை. டில்லி மாநில அரசிடம் தான், கேட்க வேண்டும்' என்கிறார்.
யாருமே, இதற்கு பொறுப்பேற்காமல், ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டுவது, வேடிக்கையாகவும், வேதனையாகவும் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.டில்லியின் பல இடங்களில், நேற்று போராட்டம் நடந்ததால், நகர் முழுவதும் பதற்றமான சூழல் காணப்பட்டது.

"என்னை தூக்கில் போடுங்கள்' : கற்பழிப்பு குற்றவாளி கதறல்

டில்லியில், மருத்துவ கல்லூரி மாணவி கற்பழிக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட, முக்கிய குற்றவாளி, ""என்னை தூக்கில் போடுங்கள்,'' என, கோர்ட்டில், கோஷமிட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.
டில்லியில், ஓடும் பஸ்சில், மருத்துவ கல்லூரி மாணவி கற்பழிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, ஏற்கனவே, நான்கு பேரை, டில்லி போலீசார் கைது செய்துள்ளனர்.இந்த வழக்கில் தொடர்புடைய, அக்ஷய் குமார் என்ற நபர், பீகார் மாநிலத்தில் பதுங்கியிருந்தபோது, நேற்று கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட குற்றவாளிகளில் ஒருவரான, ராம்சிங், ஏற்கனவே, போலீஸ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், மற்ற குற்றவாளிகளான, டில்லியில் உடற்பயிற்சி நிலையம் வைத்துள்ள, வினய் சர்மா, பழ வியாபாரி பவன் குப்தா, ராம்சிங் சகோதரரும், சம்பவத்தன்று பஸ்சை ஓட்டி வந்தவருமான, முகேஷ் ஆகியோர், டில்லி பெரு நகர மாஜிஸ்திரேட் கோர்ட்டில்,நேற்று ஆஜர் படுத்தப்பட்டனர்.இவர்களில், வினய், பவன் குப்தா ஆகியோரை, நான்கு நாள், போலீஸ் காவலில் விசாரிக்க, கோர்ட், உத்தரவிட்டது. மற்றொரு குற்றவாளியான, முகேஷ், குற்றவாளிகளை அடையாளம் காணும், அடையாள அணிவகுப்பில் பங்கேற்க சம்மதம் தெரிவித்ததை அடுத்து, அவரை, 14 நாட்கள், நீதிமன்ற காவலில் வைக்க, கோர்ட், உத்தரவிட்டது.வினய் சர்மாவும், பவன் குப்தாவும், அடையாள அணிவகுப்பில் பங்கேற்க, மறுத்து விட்டனர். அவர்களை பார்த்து, மாஜிஸ்திரேட் நம்ரிதா அகர்வால், ""அடையாள அணிவகுப்புக்கு செல்ல மறுப்பது ஏன்?''என, கேள்வி எழுப்பினார்.அதற்கு பதில் அளித்த வினய், ""பஸ்சில் வந்த, மருத்துவ கல்லூரி மாணவியின் நண்பரை, தாக்கியது உண்மை தான். ஆனால், அந்த மாணவியை, நான் எதுவுமே செய்யவில்லை. வேண்டுமானால், என்னை தூக்கில் போடுங்கள்,'' என, கோஷம் எழுப்பினார்.பவன் குப்தா கூறுகையில், ""நான் மிகப் பெரிய குற்றத்தை செய்து விட்டேன். அடையாள அணிவகுப்புக்கு செல்ல விரும்பவில்லை,'' என்றார்.இந்த சம்பவத்தால், கோர்ட்டில் பரபரப்பு ஏற்பட்டது. dinamalar.com/

கருத்துகள் இல்லை: