tamilpaper.net
ஒழிமுறி (டாக்குமெண்ட் ஆஃப் செப்பரேஷன்). தாணுபிள்ளை : லால்
/ மீனாட்சியம்மா : மல்லிகா / காளி பிள்ளை : ஸ்வேதா மேனன் / பாலா : பாவனா / சரத் சந்திரன் : அசிஃப் அலிபாதி மலையாளியான எனக்கு மலையாளப்படங்கள்மீது எப்போதுமே ஒரு மென் சாய்வு உண்டு. போதாதகுறையாக நம் ஜெயமோகனின் கதை திரைக்கதை வசனத்தில் வெளிவந்த படம். ஏற்கெனவே அது பற்றி மிகவும் நேர்மறையான விமர்சனங்களையும் படித்திருந்தேன். எனவே, மிகுந்த நம்பிக்கையுடன் படத்தைப் பார்க்க ஆரம்பித்தேன். ஆனால், படம் மிகப் பெரிய ஏமாற்றத்தையே தந்தது. அதிகம் எதிர்பார்த்ததால் வந்த ஏமாற்றம் அல்ல. காரணம் என்ன என்பதை எனக்கு நானே அலசிப் பார்க்கிறேன்.
படத்தின் மிகப் பெரிய குறை அதன் சிக்கலான திரைக்கதை.
நிகழ்காலத்துக்கும் கடந்த காலத்துக்கும் இடையிலான ஊசலாட்டமாகப் பயணிக்கும் கதையானது மிகுந்த மனச் சோர்வையே தந்தது. உண்மையில் கடந்த காலம் தொடர்பான காட்சிகள் தனியாகவும் நிகழ்காலக் காட்சிகள் தனியாகவும் எழுதப்பட்டு ஒவ்வொன்றும் சிறு சிறு இணைப்புக் காட்சிகள் வாயிலாக இடையிடையே பின்னல் போல் தொகுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், பத்துநிமிடம் நிகழ்காலம் பத்து நிமிடம் இறந்த காலம் என முன்னும் பின்னுமான இத்தகைய நகர்வு எந்தவொரு உணர்வுடனும் அழுத்தமான உறவை உருவாக்கிக் கொள்ளமுடியாமல் தடுக்கவே செய்கிறது. மிக எளிய நேர்கோட்டுப் பாணியில் சொல்லப்பட்டிருக்க வேண்டிய கதை. வேறு பல விஷயங்களில் பார்வையாளர்களின் புத்திசாலித்தனத்துக்கு ஏற்ப பல மாறுதல்களைச் செய்யும்நிலையில் இந்த விஷயத்தையும் சராசரி பார்வையாளரின் கோணத்திலேயே சிந்தித்து அமைத்திருக்கலாம். அடுத்ததாக பெண் மலையாளம். அதாவது கேரள நாயர் பெண்கள் ராணிகளாக வாழ்ந்த காலகட்டம். படமானது இதைத்தான் பிரதானப்படுத்தியிருக்க வேண்டும். ஒழிமுறி என விவாகரத்து அம்சத்தை எதற்காகப் படமாக்கியிருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. அதிலும் விவாகரத்தைப் படத்தின் தலைப்பாக வைத்தவர்கள் அதைப் பெண்களுக்கான விடுதலைச் செயல்பாடாகவோ குடும்ப உறவுகளில் அது ஏற்படுத்தும் தாக்கத்தைப் பற்றியதாகவோ படத்தை உருவாக்கியிருக்கவில்லை. விவாகரத்து கேட்டு விண்ணப்பிக்கும்போது படத்தின் நாயகிக்கு வயது 55. அவருடைய கணவருக்கு வயது 71. இதனால் விவாகரத்தின் சோகமோ, தேவையோ துளிகூட பார்வையாளர்களால் உணரமுடிந்திருக்கவில்லை. 55 வயதுப் பெண் எதற்காக விவாகரத்து கேட்கிறார் என்ற வெறும் க்யூரியாசிட்டி மட்டுமே உருவாகிறது. ஆனால், படம் முழுக்க அந்த விவாகரத்தையே மையமாகக் கொண்டு நகர்கிறது. இதுபோதாதென்று பெரும்பாடுபட்டு விவாகரத்தை வாங்கிவிட்டு அந்தக் கதாநாயகி செய்யும் முதல் வேலை என்ன தெரியுமா? விவாகரத்து செய்த கணவருக்கு சேவை செய்வதற்காக அவருடைய வீட்டுக்கு அவருக்கு முன்பாகவே போய் பால் பாயாசம் செய்துவைத்துக் காத்துக் கொண்டிருப்பதுதான்! அம்மா காளி பிள்ளை, மனைவி மீனாட்சியம்மா, மருமகள் பாலா என படமானது நாயகன் தாணுபிள்ளையின் வாழ்க்கையில் குறுக்கிடும் மூன்று பெண்களை மையமாகக்கொண்டு நகர்கிறது. காளி பிள்ளை பெண்களுக்கு சொத்துரிமை இருந்த காலகட்டத்து மனுஷி. ராணியாக வாழ்ந்தவள். மனைவி மீனாட்சியம்மா மக்கத்தாயம் பிரிவைச் சேர்ந்தவர். கணவன் எவ்வளவு அடித்தாலும் திட்டினாலும் பொறுமையாக சகித்துக் கொண்டு வாழ்பவள். இவர்தான் 55 வயதில் விவாகரத்து கேட்டு விண்ணப்பிக்கிறார். மருமகள் பாலா இன்றைய காலகட்டத்தைச் சேர்ந்தவள். நாயகன் தாணுபிள்ளை சார்பில் வாதாடும் வழக்கறிஞர். தாணுபிள்ளையின் மகன் சரத் சந்திரனை காதலிக்கவும் செய்கிறார்.
காளி பிள்ளையின் வாழ்க்கையும் மீனாட்சியம்மாவின் வாழ்க்கையும் ஃபிளாஷ் பேக் காட்சிகளாக விரிகின்றன. கடந்த காலத்துக்கும் நிகழ்காலத்துக்குமாக கதை போய்ப் போய் வருவது நீங்கலாக இன்னொரு நிரடும் அம்சமும் இருக்கிறது. தாணுபிள்ளை கதாபாத்திரத்தின் மிகையான நடிப்பு. அதிலும் அவர் முன்கோபக்காரர் என்பதைக் காட்சிப்படுத்தியிருக்கும் விதம் துளியும் மலையாளத்தன்மையோ ஜெயமோகனின் கலையழகோ எதுவுமே இல்லாமல் படு மோசமாக இருக்கிறது. தபால் அலுவலகத்தில் ஒருவரிடம் பேனா கேட்கிறார். அது எழுதாமல் போகவே கோபத்தில் அந்த நபரை அடித்து துரத்துகிறார். போதாதகுறையாக தன் குடையால் சுவரில் படார் படாரென்று அடிக்கிறார். மனைவியை பளார் பளார் என்று சகட்டு மேனிக்கு அடிக்கிறார். ஏனோ தெரியவில்லை… இதுபோல் பெண்களை அடிக்கும் காட்சிகளைக் காட்டுவதை தவிர்க்கவேண்டும் என்றுதான் தோன்றுகிறது. என்னதான் அந்தக் கதாபாத்திரம் தமிழக கேரள எல்லையைச் சேர்ந்தது என்றாலும் தமிழர்கள் என்றால் கொஞ்சம் மிகை இருக்கத்தான் செய்யும் என்று அப்படி கதாபாத்திரத்தை வார்த்திருக்கிறார் போலிருக்கிறது. திரைப்படம் என்பது கொஞ்சம் மிகை தேவைப்படும் ஊடகம் என்ற நியாயம்கூட எடுபடமுடியாத அளவுக்கே இந்தக் காட்சிகள் செயற்கையாக இருக்கின்றன.
தாணுபிள்ளை தன் மகனுக்கு உடல் நிலை சரியில்லாமல் போகும்போது காட்டும் அதீத உணர்ச்சிகளும் இதுபோல் எல்லை மீறியவையாகவே இருக்கின்றன. படத்தின் ஒட்டு மொத்த கதாபாத்திரங்களும் மிகவும் இயல்பாக தங்கள் சோகத்தையும் சந்தோஷத்தையும் வெளிப்படுத்த தாணுபிள்ளை கதாபாத்திரம் மட்டும் ஓவர் ஆக்டிங்கில் ஈடுபடுகிறது. தமிழர்கள் குறித்த க்ளிஷேயின்படி வார்க்கப்பட்டிருக்கும் இந்தக் காட்சிகள் படத்தோடு ஒன்றவிடாமல் தடுக்கின்றன.
இதைக்கூட ஆண்களில் இப்படிச் சிலர் இருக்கக்கூடும் என ஏற்றுக்கொண்டுவிடமுடியும். ஆனால், தாணுபிள்ளை தன் மனைவியைப் போட்டு அடி அடியென்று அடிப்பதற்குக் காரணமாகச் சொல்லப்படும் விஷயம் சிறிதும் ஏற்க முடியாததாக இருக்கிறது. பெண் மீதான பயம்தான் அவளை அடிக்கவைக்கிறது. மனைவியைப் போட்டு அடிக்கும் ஒவ்வொரு ஆணும் அவளைக் கண்டு பயந்துதான் அடிக்கிறான் என்று சொல்லப்படுகிறது. போதாதகுறையாக பயம்தான் ஒருவர் இன்னொருவரைத் தாக்குவதற்குக் காரணம் என்று விவேகானந்தர் சொன்னதாகவும் சொல்லப்படுகிறது. உண்மையில் விவேகானந்தர் எந்த இடத்தில் அப்படிச் சொன்னார் என்று தெரியவில்லை. ஒருவேளை சம பலம் உள்ள இருவருக்கு இடையே நடக்கும் தாக்குதலுக்கு பயத்தைக் காரணமாகச் சொல்லியிருக்கக்கூடும். நிச்சயமாக ஆண் பெண் வன்முறைக்கு அதை அவர் காரணமாகச் சொல்லியிருக்க முடியாது. ஏனென்றால், ஒரு ஆண் பெண்ணைத் தாக்குகிறான் என்பது புலி மானை வேட்டையாடுவது போன்றது. இங்கு புலிக்கு மான் மீது பயம் இருக்க வாய்ப்பே இல்லை.
மருமகள் கதாபாத்திரமும் கதாநாயகன் கதாபாத்திரமும் ஜெயமோகனின் இந்த வசனத்தைச் சொல்லிவைத்தாற்போல் பேசும்போது மிகவும் செயற்கையாகவே இருக்கிறது. கதாநாயகனின் ஆதார குணத்தை நியாயப்படுத்த படத்தில் இது பயன்படுத்தப்பட்டிருக்கும் விதம் மிகவும் பலவீனமாகவே இருக்கிறது.
படத்தின் சிறிய பிழைகள் என்று பார்த்தால், காளி பிள்ளை பிறந்தது எப்போது என்பதில் குழப்பம் காணப்படுகிறது. படத்தில் ஒரு காட்சியில் ஜனாதிபதி சங்கர்தயாள் சர்மாவின் புகைப்படம் காவல் நிலையத்தில் மாட்டப்பட்டிருக்கிறது. ஒரு வழக்கு விஷயமாக அங்குவரும் காளி பிள்ளை, சென்ற முறை வந்தபோது இருந்த இந்திரா காந்தியின் படம் எங்கே என்று கேட்கிறார். இது 1987-ல் நடக்கும் சம்பவம். அப்போது காளி பிள்ளைக்கு வயது சுமார் 60 இருக்கும். அப்படியானால் அவர் பிறந்தது 1927 வாக்கில்தான் என்று ஆகும். அப்படியே எழுபது வயது என்று வைத்துக் கொண்டாலும் 1917-ல் பிறந்திருப்பார். ஆனால், பெண்களுக்கு இருந்த முழு சொத்துரிமை 1912-லேயே பறிக்கப்பட்டுவிட்டது. அப்படியானால் 1917-ல் பிறந்த காளி பிள்ளை ராணிபோல் வாழ்ந்திருக்க வாய்ப்புகள் மிகவும் குறைவு. 1912-ல் அவருக்கு சுமார் 25-30 வயது ஆகியிருந்தால்தான் அது சாத்தியம். அப்படியானால் அவர் 1880களில் பிறந்திருக்க வேண்டும். படத்தின் பிற சம்பவங்கள் நடக்கும் காலத்தை வைத்துப் பார்க்கும்போது அதுவும் சாத்தியமில்லை. அப்படியானால், அவர் எப்போதுதான் பிறந்தார்?
படத்தில் இன்னொரு காட்சியில் தாணுபிள்ளையின் மகனுக்கு வாதக் காய்ச்சல் வருகிறது. 41 நாட்கள் முருங்கை இலையும் சாதமும் மட்டுமே சாப்பிடவேண்டும். தண்ணீரே குடிக்கக்கூடாது. உப்பு புளி கூடாது என்று நாட்டு வைத்தியர் பெருவட்டார் சொல்கிறார். அதுபோலவே அவனுக்கு பத்திய உணவு தரப்படுகிறது. தாணு பிள்ளையும் தன் மகனுடைய உடல் குணமாகும்வரை அதே பத்திய உணவை உண்டதாக ஒரு இடத்தில் சொல்லப்படுகிறது. ஆனால், வேடிக்கை என்னவென்றால், அதற்கு முந்தின காட்சியில் தாணுபிள்ளை சாப்பிட உட்காரும்போது மீன் குழம்பு, ரசம் என எல்லாமே பாத்திரத்தில் வைத்துக்கொண்டுதான் மனைவி பரிமாறுகிறார். தாணுபிள்ளை தன் மகன் வேதனையில் முனகுவதைக் கேட்டு கோபத்தில் சாப்பாட்டைத் தூக்கி எறிந்துவிட்டுப் போகிறார் என்றாலும் அவர் தினமும் பத்திய உணவை உண்டு வந்தது உண்மையென்றால் மனைவி மீன் குழம்பு பரிமாறவா என்று கேட்க வாய்ப்பே இல்லை. அடுத்தடுத்த காட்சிகளாக இவை வருவது மிகவும் நிரடலாகவே இருக்கிறது. தந்தை மகனுக்காக பத்திய உணவு உண்டார் என்பதை மிகவும் நுட்பமாக, இவரும் முருங்கைக் கீரையை சாதத்தில் பிசைந்து சாப்பிடுவதாக ஒரு ஷாட்டில் காட்டியிருந்தாலே போதுமானதாக இருக்கும்.
அதோடு தாணுபிள்ளை கோபம் நிறைந்தவர்தான். அதே நேரம் அவருடைய மனதில் மனைவி மீதும் குழந்தை மீதும் ஸ்நேகமும் உண்டு. அன்பை வெளிப்படையாகக் காட்ட அவருடைய ஈகோ இடம் தருவதில்லை என்ற விஷயத்தை ஓரிரு காட்சிகளில் காட்டியிருக்க வேண்டும். வெறும் வசனங்களாலேயே அனைத்தையும் சொல்வது மனதில் பதியவில்லை. அதோடு, மகன் மீது தந்தை அன்போடு இருக்கிறார். ஆனால், அதை ஆக்ரோஷமாக வெளிப்படுத்துகிறார் என்பதைச் சித்திரிக்கும்வகையில் வாதம் வந்த மகனைப் போட்டு அடி அடியென்று அடிப்பதைக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். அதாவது, கையை அசைக்க முடியவில்லை என்று மகன் சோர்ந்துபோகும்போது அவனை உற்சாகமூட்டி கைக்கு வலுவைக் கொடுக்க அவர் கைக்கொள்ளும் வழிமுறையாம் அது. மகன் அதை நினைத்துப் பார்த்து அழுத ஆரம்பகட்டக் காட்சிகளில் தந்தை மீது நமக்கு மிகுந்த வெறுப்புதான் வருகிறது. ஆனால், அப்பாவின் நல்ல மனசை அம்மா சொல்லிக் காட்டிய பிறகு இந்தக் காட்சி மீண்டும் நினைத்துப் பார்க்கப்படுகிறது. அப்போதும் அப்பாவின் மீது அதே வெறுப்புதான் பார்வையாளர்களுக்கு வருகிறது. அந்த ஆக்ரோஷ அடிகளை அன்பின் வெளிப்பாடாக எடுத்துக்கொள்ளவே முடியவில்லை.
பழங்காலத்து விஷயங்கள் எல்லாவற்றையும் வெறும் காட்சியாக காட்டுவதோடு நிறுத்தாமல் யாராவது ஒரு கதாபாத்திரம் அதை விவரித்துச் சொல்வது கொஞ்சம் கலை அமைதியைக் குலைப்பதாகவே இருக்கின்றன. அந்த விஷயங்களை போகிற போக்கில் காட்டிப் புரியவைக்க முடியாது என்பது உண்மைதான். அதற்காக யாராவது ஒரு கதாபாத்திரத்தைவிட்டு பொழிப்புரை ஆற்றி அதைக் காட்சிப்படுத்தியிருக்கக்கூடாது. கொஞ்சம் மெனக்கெடல் தேவைப்படும் இடம்தான் அவை எல்லாமே. காட்சி ஊடகம் பலதரப்பட்ட பார்வையாளர்களைக் கொண்டது என்பதால் கலை நுட்பம் புரியாமல் போய்விடும் என்று நினைத்திருக்கக்கூடும். ஆனால், நுட்பமான பார்வையாளர்களுக்கு இது நிரடலையே தரும்.
அப்பறம் 55 வயது நாயகியைப் பார்த்து அவருடைய வக்கீல் பக்கத்தில் ஒரு வீடு இருக்கிறது வாருங்கள்… தனியாக நாம் போய்ப் பேசலாம் என்று அழைப்பதாகவெல்லாம் காட்டியிருக்க வேண்டாம். படத்தில் பாண்டிக்காரர்கள் (தமிழர்கள்) வெகு நுட்பமாக பரிகசிக்கப்படுகிறார்கள். தமிழ் கேரளத்தின் ஆட்சிமொழியாக இருந்த விவரமும் சொல்லப்படுகிறது. ஒரு இடத்தில் தமிழர்களை விமர்சிக்கும் நாயகன் வேறொரு இடத்தில் தமிழ் பாடலைப் பாடி ஆடவும் செய்கிறான். ஆனால், இவையெல்லாம் செயற்கையாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன.
ஆனால், இந்த இடத்தில் ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்லவேண்டும். தமிழர்களைவிட நாயர்கள் கூடுதலாகவே நக்கலடிக்கப்படுகிறார்கள். தமிழ் திரையுலகில் அப்படி ஏதாவது ஒரு இடைநிலைச் சாதி கிண்டல் செய்யப்படுவதை நினைத்தே பார்க்க முடியாது. அந்தவகையில் மலையாள சமூகம் மேலான நிலையில் இருப்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். நாராயண குருவின் தாக்கத்துக்கும் பெரியாரின் தாக்கத்துக்கும் இடையிலான வித்தியாசமாகவும் இதைப் பார்க்கலாம்.
கேரளத்தில் நாயர் குடும்பங்களில் சொத்துரிமை பெண் வழியில்தான் தீர்மானிக்கப்பட்டு வந்திருக்கிறது. ஒரு பெண்ணின் சொத்து அவருடைய கணவனுக்குப் போகாது. அந்தப் பெண்ணின் வாரிசுக்குத்தான் வரும். மருமக்கத்தாயம் எனப்படும் வழிமுறை. ஆனால், அதில் இன்னொரு முக்கிய விஷயம் என்னவென்றால், அந்த சொத்தானது பெண்ணின் சகோதரரால்தான் நிர்வகிக்கப்படும். அவரை காரணவர் என அழைப்பார்கள். அந்தவகையில் கணவன் என்ற ‘வெளியாளு’க்குச் சொத்து போகாமல் பெண்ணின் சகோதரரின் நிர்வாகத்தில் பெண்ணின் வாரிசுகளுக்கு சொத்துரிமை கைமாற்றித் தரப்படுவதுதான் வழக்கம். மருமக்கத்தாயம் என்பதே மருமகன்களின் வழி அதாவது மாமாவை மையமாகக் கொண்டுதான் மருமகன்கள் என்பதே தீர்மானமாகிறது. ஒரு பெண்ணின் வாரிசுகளுக்கு சொத்து என அது தீர்மானமாகவில்லை. நிர்வாக அதிகாரம் உள்ள மாமனிடமிருந்து மருமக்களுக்குக் கைமாறப்படுவதால் அது மருமக்கத்தாயம் என்று அழைக்கப்படுகிறது. அந்த வகையில் அங்கு நிலவும் பெண்ணுரிமை முழுமையானது அல்ல. பிற சமுதாயங்களில் பெண் கணவனுக்கு கட்டுப்பட்டுக் கிடந்தாள் என்றால் மருமக்கத்தாயத்தில் சகோதரனுக்குக் கட்டுப்பட்டு நடக்கிறாள். ஆனால், இந்தப் படத்தில் நாயர் பெண் ராணியாகவே சித்திரிக்கப்படுகிறார். படத்தில் வரும் அந்தக் கதாபாத்திரம் யானைபோல் தனக்கான வழியைத் தானே உருவாக்கிக் கொள்ள முடிந்ததற்கு அவருக்கு ஒரு சகோதரன் இல்லை என்பதுதான் காரணமாக இருந்திருக்கிறது. படத்தில் அந்த அம்சம் வேறு கோணத்திலேயே முன்னிறுத்தப்பட்டிருக்கிறது.
கதை என்று பார்த்தால், கதாநாயகன் தாணு பிள்ளைக்கு முதல் ஹார்ட் அட்டாக் வருகிறது. மகனுடன் தனியாக வசிக்கும் நாயகி மருத்துவமனைக்குச் சென்று பணிவிடை புரிகிறார். நினைவுதிரும்பும் தாணுபிள்ளை, தன் தாய் இறந்து போவதற்கு முன் வீட்டை விட்டுக் கோபித்துக் கொண்டு போனதற்கு தன் மனைவிதான் காரணம் என்று நினைத்துக் கொண்டு அவளைத் திட்டுகிறார். உண்மையில் அவள் காரணமல்ல. எத்தனையோ துன்பங்களுக்குப் பிறகு பிரிந்து வாழும் நிலையிலும் தன்னைப் பற்றி தன் கணவன் இப்படி நினைத்தது குறித்து மனைவிக்குக் கடும் கோபம் வருகிறது. அந்த 55 வயதில் விவாகரத்து நோட்டீஸ் அனுப்புகிறார். பிரிந்துதான் வாழ்கிறார்கள் என்றாலும் சட்டப்படி பிரிந்தாக வேண்டும் என்ற வைராக்கியம் (இப்படியான கோபம் ஒருவர் மீது வரவேண்டுமானால் அவர் மீது அந்த அளவுக்கு வெறுப்பு இருந்தாக வேண்டியிருக்கும். ஆனால், படத்திலோ அது சுத்தமாக இல்லை. யார் மீது அதிக வெறுப்பு இருக்கிறதோ அவர் மீதுதான் அதிக அன்பும் இருக்கும் என்ற விசித்திரமான மனோதத்துவ நிலை இங்கு விவரிக்கப்படுகிறது).
கணவனும் விவாகரத்துக்கு சம்மதம் தெரிவிக்கிறார். மனைவியோ பல வருடங்களுக்கு முன்னால் கணவனுக்கு எழுதிக் கொடுத்த தன் சொத்து முழுவதையும் திருப்பித் தரும்படியும் கேட்கிறார். நீதிமன்றத்தில் அது தொடர்பாக விசாரணை ஆரம்பிக்கிறது.
தாணு பிள்ளையின் சார்பாக வழக்கில் ஆஜராகும் ஜூனியர் வக்கீலான பாலா, தாணு பிள்ளையின் மகனைப் பார்த்து விஷயத்தைச் சுமுகமாக முடித்துக் கொள்ளச் சொல்கிறார். என் அப்பா எவ்வளவு கொடூரமானவர் என்பது உங்களுக்குத் தெரியாது. என் அம்மா இத்தனை வயதில் விவாகரத்து கேட்கிறார் என்றால் அதில் ஒரு காரணம் இல்லாமல் இருக்காது என்று சொல்கிறான். பாலாவோ விவாகரத்து எப்போதும் பிரச்னைக்கு தீர்வு ஆக முடியாது. சமாதானமாகப் போக முயற்சி செய்யுங்கள். இல்லையென்றால் உங்கள் சொத்து முழுவதையும் வக்கீல்களே சுருட்டிக் கொண்டு போய்விடுவார்கள் என்று சொல்கிறாள்.
தாணு பிள்ளையின் மகன் தன் தந்தையின் ஆணாதிக்க வெறி பற்றிச் சொல்கிறான். மனைவியைப் பிறர் முன்னிலையில் பளர் பளார் என்று அடித்ததையும் சாப்பாட்டுத் தட்டைத் தூக்கி எறிந்ததையும் தன்னைப் போட்டு விளாசியதையும் சொல்கிறான்.
இதையெல்லாம் கேட்கும் பாலா, உன் அப்பாவும் அம்மாவும் நீ நினைப்பதுபோல் ஒருவரை ஒருவர் வெறுக்கவில்லை. இவ்வளவு கொடூரமானவருடன் மீனாட்சியம்மா எதற்காக வசித்தார்? 1987-ல் ஒரு முறை இதுபோல் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிவிட்டு கடைசியில் அதை வேண்டாமென்று முடிவெடுத்திருக்கிறார். போதாத குறையாக சொத்து முழுவதையும் கணவர் பெயருக்கு எழுதியும் தந்திருக்கிறார். ஏன் இதையெல்லாம் செய்தார் என்று யோசித்துப் பார் என்கிறாள்.
மகன் சரத் சந்திரன் தன் தாயிடம் சென்று, நீங்கள் அப்பாவை நேசிக்கிறீர்களா… விவாகரத்து நோட்டீஸை ஏன் வாபஸ் வாங்கினீர்கள்… ஏன் சொத்து முழுவதையும் எழுதிக் கொடுத்தீர்கள் என்று கேட்கிறான். 1987-ல் வக்கீல் நோட்டீஸ் கொடுத்தது உண்மைதான். ஆனால், அப்போது உனக்கு மிகவும் உடம்புக்கு முடியாமல் போய்விட்டது. உயிர் பிழைப்பதே கஷ்டம் என்று சொல்லிவிட்டார்கள். ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டுக்கு பஸ்ஸில் வரும்போது வழியில் உன் தந்தை யதேச்சையாக உன்னுடைய நிலையைப் பார்த்து துடிதுடித்துப் போய்விட்டார். அவர்தான் உன் உயிரைக் காப்பாற்றினார். உனக்கு அப்படியான அன்பான அப்பாவின் அரவணைப்பு தேவை என்று கருதித்தான் விவாகரத்தை வாபஸ் வாங்கினேன் என்று அம்மா சொல்கிறார்.
அதுவரை தன் தந்தையை ஒரு வில்லன் போல் நினைத்து வெறுத்துவந்த மகனுக்கு அப்பாவின் இன்னொரு முகம் தெரியவருகிறது. அவர் மீது பாசமும் மரியாதையும் வருகிறது. அவரிடம் சென்று தனக்கு மகன் பிறந்தால் உங்கள் பெயரைத்தான் வைப்பேன் என்று சொல்லிவிட்டுச் செல்கிறான்.
இதன் பிறகு தாணுபிள்ளைக்கு இரண்டாவது அட்டாக் வருகிறது. விவாகரத்து வழக்கு நடந்துகொண்டிருக்கும் நிலையிலும் மீனாட்சியே அருகில் இருந்து எல்லா பணிவிடைகளும் செய்கிறாள். உடல்நிலை சரியான பிறகு வழக்கு தொடர்கிறது. மீனாட்சி வழக்கை வாபஸ் பெற்றுவிடுவார் என்று எல்லாரும் நினைக்கும்போது அவரோ விவாகரத்து வேண்டும் என்று உறுதியாக நிற்கிறார். அதன்படியே விவாகரத்து வழங்கப்படுகிறது. தாணுபிள்ளை சொத்து முழுவதையும் மீனாட்சிக்குக் கொடுத்துவிடுகிறார்.
நீதிமன்றத்தின் முன்பாக தளர்ந்து விழப்போகும் தாணுபிள்ளையை மகன் கைத்தாங்கலாகப் பிடித்துக்கொண்டு வீட்டுக்குக்கொண்டு செல்கிறார். அங்கோ அவர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது. மீனாட்சியம்மா தாணுபிள்ளைக்கு முன்பாகவே வீடு திரும்பிவிட்டிருக்கிறார். பால் பாயாசம் வைத்து கணவருக்குக் கொடுக்கிறார். அவரும் மனநிறைவுடன் அதைச் சாப்பிடுகிறார். தன் மகனை அப்பாவைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு தன் வீட்டில் தனியே வாழ்கிறார் மீனாட்சியம்மா என்பதாகப் படம் முடிகிறது.
அப்படியாக விவாகரத்து என்பது கணவனுக்கும் மனைவிக்கும் இடையிலான ஈகோ க்ளாஷைத் தீர்ப்பதற்கான ஒன்றாகச் சுருங்கிப்போகிறது.
படத்தின் இசை மிகவும் அருமையாக வந்திருக்கிறது. அதிலும் தீம் மியூசிக் மனதை உருக்குகிறது. ஜெயமோகன் ஒரு பாடல்கூட எழுதியிருக்கிறார். வசனங்களில் ஜெயமோகன் துருத்திக் கொண்டு தெரிகிறார் என்றாலும் சில இடங்களில் போகிற போக்கில் மனதைத் தைத்தும்விடுகிறார்.
தாணுபிள்ளையின் பணிக்காரராக வருபவர் மிக அருமையாக நடித்திருக்கிறார். அவருக்கான வசனங்களை ஜெயமோகன் அற்புதமாக எழுதியிருக்கிறார். கதாநாயகனின் மகனுக்கு வைத்தியம் பார்க்க நாட்டு வைத்தியரை அழைத்து வருவதாகச் சொல்லும் இடத்தில், நாயகன் முதலில் வேண்டாம் என்று மறுக்கிறார். பணிக்காரரோ, நோய்வாய்ப்பட்டுக் கிடப்பது என்னுடைய கொச்சு ஏமானாக்கும் (சின்ன மொதலாளியாக்கும்) என்று சொல்லும் இடத்தில் எஜமானுக்கும் பணிக்காரருக்கும் இடையிலான அன்பான உறவை சிறப்பாக வெளிப்படுத்துகிறார். அந்தப் பணிக்காரர் பாத்திரம் படம் முழுவதுமே எஜமான் மீதான ஆத்மார்த்தமான பாசத்துடன் உரிமையுடன் நடந்துகொள்கிறது.
நாயர் குடும்பத்தில் பெண்கள் கணவனைப் பிடிக்கவில்லையென்றால், வெறும் ஒரு வெற்றிலைச் செல்லத்தை எடுத்து வீட்டு வாசலில் கணவனின் முன்னால் வைத்துவிட்டால் விவாகரத்து செய்ததாக அர்த்தம். படத்தில் காளி பிள்ளை மல்லனான தன் கணவன் சிவன் பிள்ளையை அப்படித்தான் விவாகரத்து செய்கிறார். அதற்கு முந்தின காட்சியில் வெளியூரில் இருந்து வீடு திரும்புகிறார் சிவன் பிள்ளை. வீட்டினுள்ளே கர்நாடக சங்கீதம் கேட்கிறது. மல்லனான சிவன் பிள்ளைக்கு ஏதோ அசம்பாவிதம் நடந்துவிட்டது புரிகிறது. காளிபிள்ளை வேறொரு ஆடவனைத் தன் ஆசை நாயகனாகத் தேர்ந்தெடுத்துவிட்டிருக்கிறாள். வீட்டு வேலைக்காரி வெற்றிலைச் செல்லத்தை எடுத்துவந்து திண்ணையில் வைக்கிறாள். இனி மல்லனுக்கு அந்த வீட்டில் வேலை இல்லை. நீதிமன்றமோ, சண்டையோ சச்சரவோ எதுவும் இல்லாமல் ஒரு பெண் மனதுக்குப் பிடிக்காதவனை வெகு எளிதில் விவாகரத்து செய்துவிடுகிறாள். வெகு நுட்பமாக இது காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.
அதுபோல் நீதிமன்றக் காட்சிகள் வெகு யதார்த்தமாகச் சித்திரிக்கப்பட்டிருக்கின்றன. நீதிபதி என்பவர் ஏதோ ஆகாயத்தில் இருந்து வந்து குதித்த, சர்வ அதிகாரம் படைத்தவராகவெல்லாம் காட்டப்படவில்லை. சாட்சி முதல் கீழ்நிலைப் பணியாளர்கள் வரை அனைவரும் சகஜமாக அவருடன் உரையாடுகிறார்கள். அவரும் மிகவும் இலகுவானவராக, நகைச்சுவை உணர்வு மிகுந்தவராகவே இருக்கிறார். கேரள நீதிமன்றக் கட்டடத்தைப் பார்த்தால் ஒரு அதிகார மையம் போன்ற மிரட்டலோ பிரமாண்டமோ எதுவும் இருக்காது. ஏதோ சாதாரண ஒரு வீடு போலத்தான் இருக்கும். அங்கு உலவும் மனிதர்களும் அதிகாரத்தின் போதை தலைக்கு ஏறாதவர்களாகவே இருக்கிறார்கள் என்பதை திரைக்கதை – வசனத்தின் மூலம் ஜெயமோகன் நன்கு சித்திரித்திருக்கிறார்.
இப்படிப் படத்தில் பல சிறப்பான அம்சங்கள் இருக்கின்றன.ஆனால், உண்மையில் இந்தக் கதை வேறொரு விஷயத்தை மையமாகக் கொண்டு வந்திருக்கவேண்டியது. ஒரு பெண் ராணிபோல் வாழ்ந்துவருகிறாள். நவீன அரசு இயற்றும் சட்டமானது அவளுடைய அதிகாரத்தைப் பிடுங்கிவிடுகிறது. தன் எஞ்சிய காலத்திலும் யாருக்கும் தலை வணங்காமல் பழைய மிடுக்கோடு வாழ முயற்சி செய்து முடிவில் பரிதாபமாகத் தோற்று அநாதையாக நடுத்தெருவில் இறக்கிறாள்.
இப்படியாக, படத்தை காளி பிள்ளையை மையமாக வைத்துக் கொண்டு சென்றிருந்தால் லாஸ்ட் எம்பரர் படத்தைப்போல் ஒரு மிகப் பெரிய காவிய சோகத்தை படம் வெளிப்படுத்தியிருக்கும். ஆனால், மூன்று தலைமுறை பெண்கள், விவாகரத்து என படம் எங்கெல்லாமோ அலைந்து வெறும் ஒரு சராசரி மலையாளப் படமாக மட்டுமே தேங்கிவிட்டது.
0
BR. மகாதேவன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக