செவ்வாய், 18 டிசம்பர், 2012

5D Camera குறைந்த பட்ஜெட்டில் படம் எடுக்கலாம். பாண்டியராஜன் பேச்சு

மருத்துவமனையில் நகைச்சுவை மன்றம் : நடிகர் பாண்டியராஜன் பேச்சு மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் செயல்பட்டு வரும் நகைச்சுவை மன்றத்தின் 22-ம் ஆண்டு தொடக்க விழா மருத்துவமனையில் நடை பெற்றது. மன்ற தலைவர் பேராசிரியர் ஞானசம்பந்தன் தலைமை தாங்கினார். விழாவில் சிறப்பு விருந்தினராக திரைப்பட நடிகர் மற்றும் இயக்குனருமான பாண்டியராஜன் கலந்து கொண்டார். அவர் பேசியபோது, ‘’நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து நோயாளிகளை சிரிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் மருத்துவ மனையில் நகைச்சுவை மன்றம் தொடங்கியிருப்பது உலகத்திலேயே இங்குதான் நடக்கிறது. சினிமாத்துறையில் தொழில் நுட்ப வளர்ச்சியின் காரணமாக பல முன்னேற்றங்கள் நடந்துள்ளன. புதிதாக அறிமுகமான 5டி கேமரா புதிய தலைமுறை கலைஞர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
இதனை வைத்து குறைந்த பட்ஜெட்டில் படம் எடுக்கலாம். பட்ஜெட் குறைந்த அளவில் இருந்தாலும், அதிக கற்பனை வளங்களும், கதைகள் நேர்த்தியும் இருந்தால்தான் படம் ஜெயிக்கும். நேர்மையும், தொழில் பக்தியும் கலைஞர்களுக்கு வேண்டும். சாதனையாளர்கள், மூத்த கலைஞர்களுக்கு வளரும் கலைஞர்கள் மரியாதை கொடுக்க வேண்டும். தொழில் தெரிந்த மாதிரி நடித்து உங்களை நீங்களே ஏமாற்றக்கூடாது. சினிமாத்துறை என்பது ஒரு திறந்த வெளி மைதானம். கால்பந்தாட்ட வீரன்போல் அங்கும், இங்கும் ஓடினால்தான் கோல் போட்டு ஜெயிக்க முடியும். அதேபோல் திறமையும், கடின உழைப்பும் இருந்தால் ஜெயிக்கலாம். நல்ல கதையம்சம் உள்ள படங்களை மக்கள் கட்டி தழுவி கொள்கிறார்கள். கமர்சியல் படங்களே ஜெயிக்கும் என்ற நிலை மாறி நல்ல கதை, தரம் உள்ள படங்களும் வெற்றியடைகின்றன.வரும் காலங்களில் சிறிய அறையிலேயே 3 மணி நேரம் படம் எடுக்கும் நிலை வெகு தொலைவில் இல்லை. ஆட்டோ டியூனர் என்ற தொழில் நுட்பம், கதை, பாட்டு, இசை போன்றவைகளுக்கு உதவியாக உள்ளது. திருட்டு வி.சி.டி. தயாரிப்பவர்கள் தாங்களாக திருந்தாவிட்டால் இதனை ஒழிக்க முடியாது’’என்று கூறினார்<

கருத்துகள் இல்லை: