வெள்ளி, 30 நவம்பர், 2012

Honor killing அமீர்கானின் சத்யமேவ ஜெயதேயில் பங்கேற்றவர் கொலை


காதல் ஜோடியில் கணவன் கவுரவக் கொலை: ‘சத்யமேவ ஜெயதே’ நிகழ்ச்சியில் பங்கேற்றவர்






புதுடெல்லி: மேற்கு உத்தரபிரதேசத்தில் காதல் திருமணம் செய்து கொண்டதற்காக இளம் கணவரை துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ளனர். தங்களின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக அமீர்கான் நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்ற போது இவர்கள் அச்சம் தெரிவித்திருந்தனர்.
தனியார் டிவியில் நடிகர் அமீர்கான் தொகுத்து வழங்கி வந்த 'சத்யமேவ் ஜெயதே' நிகழ்ச்சியில் காதல் திருமணம் செய்பவர்கள் சந்திக்கும் இடர்பாடுகள் பற்றி பேசப்பட்டது. அதில் கவுரவக் கொலைகள் பற்றியும் விவாதிக்கப்பட்டது.
கடந்த ஐந்து மாதத்திற்கு முன்னர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற 28 வயதான அப்துல் ஹக்கீம், 26 வயதான மெவிஷ் ஆகிய திருமண தம்பதியினர் தமது பெற்றோரின் அனுமதியின்றி இரகசிய திருமணம் செய்து கொண்டதால் தமது உயிருக்கு ஆபத்திருப்பதாக கூறியிருந்தனர்.

இவர்கள், கடந்த மே மாதம் முதல் தனியார் தொண்டு நிறுவனம் ஒன்றின் பாதுகாப்பின் கீழ் இருந்தனர். கடந்த 15 நாட்களுக்கு முன்னர், உத்தரபிரதேசத்தின் புலாந்த்ஷாஹ்ர் மாவட்டத்திற்கு ஹக்கீமின் தாயை பார்ப்பதற்காக இருவரும் வந்திருந்தனர். ஹகீமின் மனைவி 9 மாத கர்ப்பமாக இருக்கிறார். ஏற்கனவே இந்த தம்பதியினருக்கு ஒன்றரை வயதில் ஒர் குழந்தை இருக்கிறது.
இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை காவல்நிலையத்திலிருந்து திரும்பிய போது ஹகீம் இனந் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
ஹகீம் தாழ்ந்த ஃபகீர் சமூகத்திலிருந்து வந்தவர் எனக்கூறி அவரை மெவிஷின் குடும்பத்தினர் வெறுத்திருந்தனர். இதனால் மெவிஷின் சகோதரர்களே ஹகீமை சுட்டுக் கொன்றிருக்கலாம் என சந்தேகம் வலுப் பெற்றிருக்கிறது. முன்னதாக ஹகீமின் தந்தையும் கொல்லப்பட்டிருந்தார். ஆனால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளத.
வெட்கக்கேடானது - அமீர்கான்
ஹகீமின் கொலை சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகர் அமீர் கான், இந்த படுகொலைச் சம்பவம் மிக வெட்கக்கேடானதுடன், துரதிஷ்டவ சமானது என்று கூறியுள்ளார். சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சிக்கு வரும் முன்னரே இந்த தம்பதியினர் தமக்கு உயிராபத்து இருப்பதாக அச்சம் வெளியிட்டிருந்தனர். இதனை உத்தரபிரதேச அரசின் கவனத்திற்கு கொண்டுவந்திருக்கிறேன்.
ஹகீமின் குடும்பத்திற்கும் மெவிஷிற்கும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும். இதற்காகவே அந்த இளம் விதவையாகி விட்ட அந்த பெண்ணின் இருப்பிடமான மீரட் போய் காவல்துறையினரிடம் எடுத்துக் கூறி விட்டு வந்துள்ளேன் என்றார்.
எனது கிராம மக்களே எங்களை கொல்ல ஆயுதம் எடுத்திருக்கிறார்கள்.அநேகமாக நான் தான் அவர்களது அடுத்த இலக்காக இருக்கலாம் என்று ஐந்து மாதங்களுக்கு முன் சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சியில் மெவிஷ் கூறியிருந்தார். அந்த அச்சம் இப்போது உண்மையாகிவிட்டது.

கருத்துகள் இல்லை: