புதன், 28 நவம்பர், 2012

நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்

நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்... 35லிருந்து 155! கடந்த மாதமே வெளியாகவிருந்து, கடைசி நேரத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட படம் நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம். காரணம்... படத்துக்குக் கிடைத்த பாஸிடிவ் விமர்சனங்கள்.அன்றைக்கு இந்தப் படத்தை எப்படியாவது வெளியிட்டுவிட்டால் போதும் என்ற மனநிலையில், கிடைத்த 35 அரங்குகளில் வெளியிடத் தயாராக இருந்தனர். ஆனால் படத்தைப் பார்த்த திரையுலக பிரமுகர்கள், பத்திரிகையாளர்கள், 'நல்ல படத்தை ஏன் கொல்கிறீர்கள்... கொஞ்சம் தள்ளிப் போட்டு பெரிசாக வெளியிடுங்கள்,' என்று அறிவுறுத்த, நிறுத்தி வைத்தார்கள் அது ரொம்ப நல்லதாகப் போயிற்று. படத்தைப் பற்றி கேள்விப்பட்ட ஜேஎஸ்கே பிலிம்ஸ், சதீஷ் குமார், இந்தப் படத்தை நல்ல விலைக்கு வாங்கிக் கொண்டார். நாளை மறுநாள் 155 அரங்குகளில் பிரமாண்டமாக வெளியிடுகிறார்.
இதுகுறித்து இயக்குநர் பாலாதி தரணீதரன் கூறுகையில், "கடவுளுக்கும் பத்திரிகை உலகினருக்கும்தான் நான் நன்றி சொல்ல வேண்டும். சினிமா மீது உண்மையான அக்கறையோடு, இந்தப் படத்தைப் பார்த்தார்கள் பத்திரிகையாளர்கள். அவர்களின் நேர்மையான விமர்சனம் இந்தப் படத்துக்கு நல்ல விலையையும், மிக அருமையான வெளியீட்டுச் சூழலையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. நாங்கள் 35 தியேட்டர் கிடைச்சாலே பெரிய விஷயம்னு நினைச்சோம். ஆனால் இன்னிக்கு பத்திரிகையாளர்கள் யோசனையால், 155 அரங்குகளில் வெளியிடும் நிலை வந்திருக்கிறது. படத்தில் தேவையில்லாத 25 நிமிடக் காட்சிகளைக் குறைத்துவிட்டோம். இன்னும் க்றிஸ்ப்பாக வந்திருக்கிறது படம். நாளை மறுநாள் படம் வெளியாகிறது," என்றார். பீட்சா படத்துக்குப் பிறகு இன்னொரு வெற்றிப்படமாக இந்த நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் அமையும் என நம்புவதாக ஹீரோ விஜய் சேதுபதி சந்தோஷமாகக் குறிப்பிட்டார். படத்தில் அவருக்கு ஜோடியாக காயத்ரி நடித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: