புதன், 28 நவம்பர், 2012

மத்திய அரசு மானிய தொகை: ஜனவரியில்‌ வங்கியில் வரவு

புதுடில்லி :""அரசு வழங்கும் மானிய தொகையை, நேரடியாக பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்தும் திட்டம், ஜனவரி, 1ம் தேதியிலிருந்து, 51 மாவட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது,'' என, மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் கூறினார்.உரம், சமையல் காஸ், டீசல், உணவு தானிய பொருட்கள் போன்றவற்றுக்கு, அரசு சார்பில் மானியம் வழங்கப்படுகிறது. இந்த மானிய தொகை, சம்பந்தபட்ட மக்களை நேரடியாக சென்றடைவது இல்லை என்ற புகார் எழுந்தது. இதில், முறைகேடு நடப்பதாகவும் புகார் கூறப்பட்டது.இதையடுத்து, பயனாளிகளுக்கான மானிய தொகையை நேரடியாக, அவர்களின் வங்கி கணக்குகளிலேயே, செலுத்தும் திட்டத்தை அறிமுகப்படுத்தப் போவதாக, மத்திய அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.
பிரதமர் மன்மோகன் சிங், இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டார்.இதுகுறித்து, மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் நேற்று கூறியதாவது:பயனாளிகளுக்கான மானியம், "ஆதார்' அடையாள திட்டத்தில் உள்ள வங்கி கணக்குகள் மூலமாக நேரடியாக செலுத்தப்பட உள்ளது. அடுத்தாண்டு, ஜனவரி, 1ம் தேதியிலிருந்து, முதல் கட்டமாக, நாடு முழுவதும் உள்ள, 16 மாநிலங்களை சேர்ந்த, 51 மாவட்டங்களில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப் படவுள்ளது.
அரசின், 29 நலத் திட்டங்களுக்கான மானிய தொகையை, சம்பந்தபட்ட பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்துவதற்கான திட்டம், தயார் நிலையில் உள்ளது. இரண்டாம் கட்ட திட்டம், அடுத்தாண்டு, ஏப்ரலில் துவக்கப்படும்.
பயனாளிகளின் வங்கி கணக்குகளில் நேரடியாக, மானிய தொகை செலுத்தப்படுவதால், இதில், இனி முறைகேடுகள் நடக்க வாய்ப்பு இல்லை; இந்த திட்டத்தில் போலிகள் பயன் பெற முடியாது. அரசின் செலவும் குறையும்.இவ்வாறு அமைச்சர் சிதம்பரம் கூறினார்.

கருத்துகள் இல்லை: