ஞாயிறு, 25 நவம்பர், 2012

மத்திய அரசின் மானியத்தை நேரடியாக ரொக்கமாக வழங்கும் நடைமுறை

புனே:மத்திய அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் வழங்கப்படும் மானியத்தை, பயனாளிகளுக்கு நேரடியாக ரொக்கமாக வழங்கும் நடைமுறை, அடுத்த ஆண்டு, ஜனவரி, 1ம் தேதி அமலுக்கு வருகிறது. இதன்மூலம், ஒவ்வொரு குடும்பத்தினரும், ஆண்டு ஒன்றுக்கு, 32 ஆயிரம் ரூபாய் கிடைக்கும்.வரும், 2014ம் ஆண்டில் நடைபெற உள்ள பொதுத் தேர்தலை கருத்தில் கொண்டு, மக்களை கவரும் வகையில், இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது.
சமையல் காஸ் மற்றும் மண்ணெண்ணெய்க்கு வழங்கப்படும் மானியம், மத்திய அரசின் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தொகை, ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணிபுரிவோருக்கு வழங்கப்படும் சம்பளம் போன்றவை, தற்போது, பயனாளிகளுக்கு நேரடியாக வழங்கப்படுவதில்லை. மறைமுகமாக, பல்வேறு வழிகளில் வழங்கப்படுகின்றன.இதை மாற்றி, ஒவ்வொரு குடிமகனுக்கும், பிரத்யேக அடையாள எண்ணுடன் வழங்கப்பட உள்ள, "ஆதார்' அடையாள அட்டை மூலம், மானியத்தையும், பண பலன்களையும், பயனாளிகளுக்கு நேரடியாக வழங்கும் நடைமுறையை அறிமுகப்படுத்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. http://www.dinamalar.com/
இதன் மூலம், ஒவ்வொரு குடும்பத்திற்கும், பல்வேறு திட்டங்களின் கீழ் வழங்கப்படும் மானியம் மற்றும் பணப் பலன்கள், அவர்களின் வங்கிக் கணக்கிற்கே நேரடியாக சென்று விடும்.இது தொடர்பாக, மகாராஷ்டிரா மாநிலம், புனேயில், நேற்று நிருபர்களிடம் பேசிய, மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் கூறியதாவது:மத்திய அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் வழங்கப்படும் மானியத்தை, நேரடியாக ரொக்கமாக வழங்கும் நடைமுறை, அடுத்த ஆண்டு, ஜனவரி, 1ம் தேதி அமலுக்கு வருகிறது. இப்புதிய முறை, ஆதார் அட்டையை அடிப்படையாக கொண்டு, 15 மாநிலங்களில் உள்ள, 51 மாவட்டங்களில், முதல் கட்டமாக அமலுக்கு வரும். அடுத்த ஆண்டு இறுதிக்குள், நாடு முழுவதும் இந்தத் திட்டம் அமலாகும்.

இந்த நேரடி பண பரிமாற்ற திட்டம் மூலம், ஆண்டு ஒன்றுக்கு, 3.2 லட்சம் கோடி ரூபாய், 10 கோடி ஏழை குடும்பங்களுக்கு பகிர்ந்து வழங்கப்படும். சராசரியாக, ஒவ்வொரு குடும்பமும், ஆண்டு ஒன்றுக்கு, 32 ஆயிரம் ரூபாய் பெறலாம். இது வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்களின், சராசரி ஆண்டு வருவாயை விட, இது, மூன்று மடங்கு அதிகம்.
இந்த நேரடி பண பரிமாற்ற திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக, நியமிக்கப்பட்டுள்ள, தேசிய குழுவின் கூட்டம், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நாளை நடக்கிறது.

இந்த தேசிய குழுவில், நிதி, ஊரக மேம்பாடு, மனிதவள மேம்பாடு, தொழிலாளர் நலம், பெட்ரோலியம், உரம், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறையின் அமைச்சர்கள், திட்ட கமிஷன் துணைத் தலைவர், மான்டேக் சிங் அலுவாலியா, "ஆதார்' அடையாள திட்டத்தின் தலைவர், நந்தன் நிலேகனி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.கூட்டத்திற்குப் பின், திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பான முறையான அறிவிப்பை, பிரதமர் மன்மோகன் சிங் வெளியிடுவார்.இவ்வாறு அமைச்சர் சிதம்பரம் கூறினார்.

தற்போது மத்தியில் ஆட்சியில் உள்ள, பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான, ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, பல்வேறு ஊழல் புகார்களுக்கு ஆளாகியுள்ளது. இதனால், அடுத்த தேர்தலில், கூட்டணி அரசுக்கு தலைமை வகிக்கும் காங்கிரஸ் கட்சியின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.அதனால், மானியங்களை, ஊரக வேலை திட்டங் களுக்கான சம்பளத்தை நேரடியாக வழங்கும் பண பரிமாற்ற திட்டத்தை அமல்படுத்துவதன் மூலம், மக்களை கவர, காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ் தலைவர், சோனியாவும் முழு ஆதரவு தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: