புதன், 28 நவம்பர், 2012

2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனையால் நஷ்டம் எவ்வளவு என்பது சிபிஐக்குத் தெரியாது!

டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தால் நாட்டுக்கு எவ்வளவு நஷ்டம் ஏற்பட்டது என்று எந்த விவரமும் சிபிஐயிடம் இல்லை என்று அந்த அமைப்பின் தலைவர் ஏ.பி.சிங் கூறியுள்ளார்.<br /> நாளை மறுதினம் பதவி ஓய்வு பெறவுள்ள அவர் நிருபர்களிடம் கூறுகையில், 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் 3 ஆண்டுகளாக விசாரணை நடந்துள்ளது. ஆனாலும், 2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனையால் இவ்வளவு நஷ்டம் ஏற்பட்டது என்று எந்த கணக்குக்கும் சிபிஐ வரவில்லை என்றார்.<br /> ஆனால், உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்த அறிக்கையில் 2ஜி விவகாரத்தால் ரூ. 30,000 கோடி நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறப்பட்டுள்ளதே என்று கேட்டதற்கு, அதை நஷ்டம் என்று சிபிஐ குறிப்பிடவே இல்லை. 2001ம் ஆண்டில் ஸ்பெக்ட்ரம் விலை எவ்வளவு இருந்ததோ அதைப் போல 3.5 மடங்கு விலை வைத்து விற்றிருந்தால் ரூ. 30,000 கோடி கூடுதலாகக் கிடைத்திருக்கும் என்று தான் கூறியிருக்கிறோம் என்றார்.

இதன்மூலம் 2ஜி விவகாரத்தில் பாஜக தலைவர் முரளி மனோகர் ஜோஷியின் நெருக்கடியால் சிஏஜி வினோத் ராய் அள்ளிவிட்டதைப் போல ரூ. 1.76 லட்சம் கோடி நஷ்டம் எல்லாம் ஏற்படவில்லை என்பதை சிபிஐ உறுதி செய்துள்ளது.
2ஜி ஆவணங்களை தாக்கல் செய்ய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு:
இந் நிலையில் ஸ்பெக்ட்ரம் உரிமங்கள் தொடர்பாக 2011ம் ஆண்டில் மத்திய தொலைத்தொடர்புத் துறை வெளியிட்ட அரசாணை எந்த விவரங்கள் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது என்பதை விளக்கும் ஆவணங்களைத் தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தை உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி மத்திய அரசு நடத்தவில்லை என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி, பிரசாந்த் பூஷண் மற்றும் தனியார் செல்போன் நிறுவனங்கள் சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. அவற்றை நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி, கே.எஸ். ராதாகிருஷ்ணன் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது.
அப்போது ஆஜரான மத்திய அரசு வழக்குரைஞர் பி.பி. ராவிடம் பேசிய நீதிபதிகள், 2008-ம் ஆண்டில் வழங்கப்பட்ட 122 2ஜி லைசென்ஸ்களை நீதிமன்றம் ரத்து செய்தது. அந்த உரிமங்கள் ஒதுக்கப்பட்ட 22 வட்டாரங்களில் ஏலம் நடத்தவும் உத்தரவிடப்பட்டது.
ஆனால், 800, 1880 மெகா ஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரததை மட்டும் மத்திய அரசு ஏலம் விட்டுள்ளது. 900 மெகா ஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரம் பெற்ற சில நிறுவனங்களின் லைசென்ஸ்கள் அடங்கிய வட்டாரங்களில் ஏலம் நடத்தவில்லை. இந்த தன்னிச்சையான முடிவை மத்திய அரசு எவ்வாறு எடுத்தது? அது தொடர்பான கொள்கை முடிவு ஏதேனும் மத்திய அரசு எடுத்ததா' என்று கேட்டனர்.
அதற்கு பதில் அளித்த மத்திய அரசின் வழக்கறிஞர் ராவ், போதிய போட்டியாளர்கள் இல்லாததால் மறு ஒதுக்கீட்டுக்காக 900 மெகா ஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரம் ஏலம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஏலத்தின்போது லைசென்சும் ஸ்பெக்ட்ரமும் ஒன்றாகக் கருதப்படாது என்று 2011-ம் ஆண்டில் மத்திய தொலைத்தொடர்புத் துறை வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
அதன்படியே 900 மெகா ஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரத்தை மட்டும் நிறுத்தி விட்டு மற்ற இரண்டு ஸ்பெக்ட்ரத்தை ஏலத்தில் விட நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றார்.
இதையடுத்துப் பேசிய நீதிபதிகள் மத்திய அரசுக்குப் பிறப்பித்த உத்தரவில், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தைப் பகுதி பகுதியாக நடத்த மத்திய அரசு எவ்வாறு முடிவு செய்தது?. அந்த அரசாணை எந்த விவரத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது என்பதை விளக்கும் ஆவணங்களை இரு தினங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.
நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ஏன் மத்திய அரசு முழுமையாக நிறைவேற்றவில்லை என்ற விளக்கத்தை மட்டுமே அறிய விரும்புகிறோம். ஸ்பெக்ட்ரம் ஏல விவகாரத்தில் மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அளித்த பரிந்துரைகள் என்ன? இரண்டாவது சுற்று ஏலம் எப்போது நடத்தப்படும்?. இந்த விவரங்களை மத்திய அரசு தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

கருத்துகள் இல்லை: