திங்கள், 26 டிசம்பர், 2011

(Sasi-Jeya) ஆட்சியை கைப்பற்ற எதிரிகளை வீழ்த்த சுதர்சன ஹோமம்

திருச்சி: ஸ்ரீரங்கத்தில் சசிகலா கோஷ்டியினர் சனிப் பெயர்ச்சியன்று ஹோமம் நடத்திய விவகாரம் குறித்து, இந்து சமய அறநிலையத் துறை கமிஷனருக்கு, ஸ்ரீரங்கம் கோவில் இணை கமிஷனர் விளக்க அறிக்கை அனுப்பியுள்ளார்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலின் உப கோவிலான, ஜெயலலிதாவின் ஆஸ்தான பட்டரான சுந்தர்பட்டர் நிர்வகிக்கும், வேணுகோபாலன் சன்னிதியில், சனிப்பெயர்ச்சி முன்னிட்டு, கடந்த 21ம் தேதி, சிறப்பு "சுதர்சன ஹோமம்' நடந்தது. சசிகலாவின் அண்ணன் வினோதகனின் மகன் டி.வி.மகாதேவன் மற்றும் அவரது குடும்பத்தினர் ஹோமத்தில் பங்கேற்றனர். பல லட்ச ரூபாய் செலவில் செய்யப்பட்ட ஹோமம், மதியம் 12 மணி வரை நீடித்தது. எதிரிகளை வீழ்த்தவும், நோய்களை நீக்கவும் செய்யப்படும் சுதர்சன ஹோமத்துடன், இழந்த சக்தியை மீட்டெடுத்து, மகிழ்ச்சி மற்றும் செல்வத்தை வாரி வழங்கும், நரசிம்ம மற்றும் லட்சுமி பூஜைகள் சேர்த்து செய்யப்பட்டது. சசிகலா, சசிகலாவின் கணவர் நடராஜன் உள்ளிட்ட சசிகலாவின் உறவினர்கள், ஆட்சியை கைப்பற்ற முயல்வதாக கருதி, அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட பின், அவசர கதியில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஹோமம், கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த 22ம் தேதி, "தினமலர் ' நாளிதழில் விரிவான செய்தி வெளியானது.
இச்சம்பவம் குறித்து, இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் மூலம் தமிழக அரசு விளக்கம் கேட்டது. அதையடுத்து, கோவில் இணை கமிஷனர் ஜெயராமன், எழுத்துப்பூர்வமாக அறநிலையத்துறை கமிஷனருக்கு விளக்க அறிக்கை அனுப்பியுள்ளார்.

இதுகுறித்து இணை கமிஷனர் ஜெயராமன் கூறுகையில், ""ஸ்ரீரங்கம் கோவிலின் உபகோவிலான வேணுகோபால் சன்னிதி உட்பட நான்கு சன்னிதிகளில் நடக்கும் பூஜை, புனஸ்காரங்களை தடுக்க எனக்கு அதிகாரம் இல்லை. சம்பவத்தன்று ஹோமம் நடந்தது குறித்து எனக்கு தெரியாது. இதுகுறித்து நான் விளக்க அறிக்கை அனுப்பியது உண்மை தான்,'' என்றார்.

இந்து மகா சபா கட்சி டெல்டா மாவட்டத் தலைவர் ராஜசேகரன், திருச்சி மாவட்டத் தலைவர் ராகவன் கூறுகையில், ""நான்கு சன்னிதிகளில் பாரம்பரிய பணி என்பதால், வேறு ஒருவரை நியமனம் செய்ய முடியாது. மற்றபடி, நான்கு சன்னிதிகள் உட்பட ஸ்ரீரங்கம் கோவில் முழுவதும் இணை கமிஷனர் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. தான் தப்பித்து கொள்ள அக்கோவில்களை தனிநபர் சொத்து என்கிறார்,'' என்றனர்.

உபகோவில்கள் வரலாறு: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், மொத்தம் 54 சன்னிதிகள் உள்ளன. மூலவர், தாயார், சக்கரத்தாழ்வார், உடையவர் சன்னிதிகள் மட்டுமே இந்து சமய அறநிலையத் துறையின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது. மற்ற 50 கோவில்களும் தனியார் வசம் உள்ளன. மேல பட்டாபிராமர் சன்னிதியை முதல் தீர்த்தங்கரும், வேணுகோபால் சன்னிதியை சுந்தர் பட்டரும், சீனிவாசப் பெருமாள் சன்னிதியை கோவிந்த பட்டாச்சார்யரும், கீழ பட்டாபிராமர் சன்னிதியை நந்து, முரளி பட்டரும் நிர்வகிக்கின்றனர். ஸ்ரீரங்கம் கோவிலின் நான்கு முக்கிய சன்னிதிகளில் கருவறை வரை சென்று திரும்பக்கூடிய அர்ச்சகர்களான இவர்கள், ஆதிகாலத்தில் இருந்து பரம்பரை பரம்பரையாக இச்சன்னிதிகளை நிர்வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஜெ.,வுக்கு நல்லதா? ஸ்ரீரங்கம் கோவிலில் சசிகலா சார்பில் செய்யப்பட்ட ஹோமம், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நல்லதா, கெட்டதா என்பது தான் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. இதுகுறித்து உளவுத்துறையினர் விசாரித்தபோது, 10 லட்ச ரூபாய் செலவில் ஹோமம் செய்யப்பட்டதும், பட்டர்களுடன் சேர்ந்து டி.வி.மகாதேவன், "சத்ரு சம்ஹார நாசனம்... நாசையா... நாசையா' என்று எதிரிகளை அழிக்கும் மந்திரங்களை வாய்விட்டு கூறியதாகவும் தெரியவந்துள்ளது. ஹோமத்தை ஏற்பாடு செய்த சுந்தர்பட்டரோ, "ஹோமம் நடந்தது தெரியாது' என்று முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதால், ஸ்ரீரங்கத்தில் நடந்தது சுதர்சன ஹோமம் தானா என, உளவுத்துறையினர் குழம்பி போயுள்ளனர்.

கருத்துகள் இல்லை: