செவ்வாய், 27 டிசம்பர், 2011

தமிழக அரசின் கல்வித் திட்டம் இந்த ரணகளத்திலேயும் உனக்கொரு கிளுகிளுப்பு கேட்குது’


முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு, கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போன்ற போராட்டங்களை ‘தமிழன்’ என்ற அடையாளாத்தோடு தமிழர்கள் தீவிரமாக போராடிக் கொண்டிருக்கும்போது, ஜாதி ரீதியான பிரிவினையோடு, தமிழக அரசால் பார்ப்பனரல்லாத குறிப்பாக, பிற்படுத்தப்பட்ட மிக குறிப்பாக தாழ்த்தப்பட்ட தமிழர்ளுக்கு எதிராக ‘கல்வியில் சீர்திருத்தம்’ என்ற பெயரில் பார்ப்பன ஆப்பு சொருகப்பட்டிருக்கிறது.
இதுதொடர்பாக, தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள அரசாணை:

மாணவர்கள் ஓராண்டு முழுவதற்கும் தேவையான புத்தகங்களைப் பள்ளிகளுக்கு எடுத்துச் செல்கின்றனர். புதிய பாடத் திட்டங்கள் காரணமாக புத்தகங்களின் அளவும் அதிகரித்துள்ளது. எனவே, புத்தகச் சுமையின் காரணமாக மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புத்தகச் சுமையிலிருந்து மாணவர்களை விடுவிப்பதற்காக முப்பருவ முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த மூன்று பருவங்களுக்கு ஏற்றவாறு புத்தகங்கள் மூன்றாகப் பிரிக்கப்படும். சிறிய புத்தகங்களின் மூலம் பாடத் திட்டத்தை மேலும் செழுமையானதாக மாற்றலாம்.
 இந்த முறையின் மூலம் ஒவ்வொரு பாட வேளையும் கலந்துரையாடலுடன் கூடிய சிறந்த கற்கும் அனுபவத்தை வழங்கும். மாணவர்களின் இடைநிற்றலும் குறையும்.
ஒவ்வொரு பருவத்தின் முடிவிலும் மேற்கொள்ளப்படும் தொடர் மதிப்பீடு மாணவ, மாணவியர் தங்களை மதிப்பீடு செய்துகொள்ள உதவும். அதேபோல், அவர்களுக்குள் ஆரோக்கியமான போட்டியை உருவாக்கும்; என்கிறது அந்த அரசாணை.
ஓப்பனிங் எல்லாம் நல்லாதான் இருக்கு. ஆனால், பினிசிங்குலதான் ஆப்பு, சார்ப்பா இருக்கு.
‘முப்பருவ முறையும், தொடர் மதிப்பீட்டு முறையும் கல்வியில் பெரிய மாறுதல்களை ஏற்படுத்தும். என்கிறது அந்த அறிக்கை.
உண்மைதான். ஆனால், அந்த மாறுதல் யாருக்கு லாபமானதாக யாருக்கு இழப்பாக இருக்கும் என்பதுதான் கேள்வி. ஏனென்றால் கடந்த செப்டம்பர் மாதம், இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில்:
பருவ இறுதியில் நடைபெறும் தேர்வில் 55 முதல் 60 மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்களுக்கு ஏ1 கிரேடு அளிக்கப்பட்டு 10 புள்ளிகள் வழங்கப்படும். இதுபோல் 49-54 (ஏ2), 43-48 (பி1), 37-42 (பி2), 31-36 (சி1), 25-30 (சி2) என்ற வரிசையில் கிரேடு அளிக்கப்பட்டு, புள்ளிகள் வழங்கப்படும். இதில், 12 மதிப்பெண்களுக்கு கீழே எடுத்திருந்தால் இ2 கிரேடு மட்டும் வழங்கப்படும். புள்ளிகள் அளிக்கப்படாது. இதே முறை, பருவம் முழுவதும் நடைபெறும் வகுப்பறை தேர்வுகளுக்கும் பின்பற்றப்படும்.
இதில், ஏ கிரேடு எடுத்தால் மிக மிக சிறந்த மாணவன், (பி) கிரேடு மிக சிறந்த மாணவன், (சி) கிரேடு சிறந்த மாணவன், (டி) கிரேடு திருப்திகரம், (இ) கிரேடு திருப்தி இல்லை; என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதுபோன்ற சி.பி.எஸ்.இ., தேர்வு முறையின் அடிப்படையில் அமைந்தால், கிராமப்புற மாணவர்களுக்கும். இடஒதுக்கிட்டிற்கும் எதிர்ப்பாகத்தான் அமையும். இந்த முறை இன்னும் இரண்டு ஆண்டுகளில் பனிரெண்டாம் வகுப்பிற்கும் அமல் செய்ப்பட்டால், 4 அல்லது 5 மதிப்பெண்கள் வித்தியாசத்தில் இடஒதுக்கீட்டில் கடைப்பிடிக்கிற கட் ஆப் மார்க் ஒழிக்கப்பட்டு கிரேடுகள் வழங்கப்படும்.
இது இடஒதுக்கிடு எதிர்ப்பின் நவீன வடிவம். மருத்துவம், பொறியியல் கல்விக்கு எளிய மக்களின் குழந்தைகள், இடஒதுக்கிட்டின் மூலம் போவது முற்றிலுமாக தடுத்து நிறுத்தப்படும். மாறாக இடஒதுக்கீடு இல்லாத ஆதிக்க ஜாதிகள் குறிப்பாக பார்ப்பனர்களுக்கு இது மிக மிக நன்மையாக, அவர்களுக்கான இடஒதுக்கிடு போலவே இது மாறிவிடும்.
மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்கள், ஒட்டுமொத்தமாக, கும்பலில் கோவிந்தா… கோவிந்தா… போட வேண்டியதுதான்.
**
‘இந்த ரணகளத்திலேயும் உனக்கொரு கிளுகிளுப்பு கேட்குது’ என்று வடிவேலு வின்னர் படத்தில் பேசியது போல், தமிழர்கள் முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு, கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு என்று தங்கள் வாழ்வாதரங்களுக்காக போராடிக் கொண்டிருக்கும்போது, பார்ப்பனிய கிளுகிளுப்போடு அவர்களின் எதிர்கால வாழ்க்கையை கேள்வி குறி ஆக்கயிருக்கிறது தமிழ அரசின் இந்தக் கல்வித் திட்டம். தமிழகத் தமிழர்களின் எதிர்காலத்தை புரட்சித் தலைவியின் பொற்பாதங்களில் சமர்பித்தவர்களும், அருந்ததிய மக்களின் உள் ஒதுக்கீடை எதிர்த்து தீவிரமாக இயங்குகிற புரட்சித் தலைவியின் ஆதரவு பெற்ற ‘தலித்’ தலைவர்களும், சுத்தியலையும், அருவாளையும் தமிழர்களை ஒடுக்குவதற்கான ஆயுதமாக புரட்சித் தலைவியிடம் கொடுத்த கம்யுனிஸ்டுகளும் என்ன சொல்லப் போகிறார்கள்?
என்னத்த சொல்றது?

கருத்துகள் இல்லை: