செவ்வாய், 27 டிசம்பர், 2011

முல்லைப் பெரியாறு அணையை பாதுகாக்க மத்திய படையை நிறுத்த பரிசீலனை


சென்னை : முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பை மத்திய அரசே மேற்கொள்ளுவது குறித்து பரிசீலிப்போம் என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.   முல்லைப் பெரியாறு விவகாரத்தில் கடந்த சில நாளாக பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன.
குமுளி எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தாலும், தொடர்ந்து பஸ்கள் உட்பட வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இப்போது ஓரளவு நிலைமை சீராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்புக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையை நிறுத்த வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி உட்பட பல தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை வந்த பிரதமர் மன்மோகனிடமும் இதுபற்றி திமுக தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்தார். நேற்று காலை 9 மணி அளவில் சென்னை, ஆளுநர் மாளிகையில் பிரதமர் மன்மோகன் சிங்கை திமுக தலைவர் கருணாநிதி, சந்தித்து முல்லைப் பெரியாறு அணை பிரச்னை சம்பந்தமாக விவாதித்தார்.  முல்லைப் பெரியாறு அணை பிரச்னை குறித்து விரிவான மனு ஒன்றையும் பிரதமரிடம் அளித்தார். மனுவை பிரதமர் கவனமாக படித்துப் பார்த்தார். இந்த சந்திப்பு சுமார் 20 நிமிடங்கள் வரை நீடித்தது.

முல்லைப் பெரியாறு அணை பிரச்னையில் தமிழகத்தின் பக்கம் உள்ள நியாயத்தையும், 2006ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய ஆணையையும், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு மாறாக கேரள அரசு தொடர்ந்து கடைபிடித்து வரும் அணுகுமுறையையும், அணையின் நீர் அளவை 120 அடிக்கு குறைப்பதற்கும், புதிய அணை ஒன்றை கட்ட கேரள அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளையும், தற்போது உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வரும் வழக்கு பற்றியும் திமுக தலைவர் விளக்கினார்.

அனைத்தையும் கேட்டுக் கொண்ட பிரதமர், இரு மாநிலங்கள் இடையே நீண்ட காலமாக நிலவும் உறவும், நட்பும் எந்த விதத்திலும் பாதிக்கப்படக் கூடாது, இரு மாநிலங்களிலும் அமைதியும் சுமூகமான வாழ்க்கை முறைகளும் திரும்ப வேண்டும், அதற்காக மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் உறுதியாக மேற்கொள்ளும். முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பை மத்திய அரசே மேற்கொள்வது குறித்து பரிசீலிப்பது அவசியம் என்றும் பிரதமர் தெரிவித்ததாக திமுக வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை: