உண்மையில் அந்த வெற்றி மக்கள் தேடித்தந்த சீதனமாகும். ஏனெனில் வெறும் இரண்டு லட்சம் ரூபாயோடு அமரர் எம்.ஜி.ஆர். தேர்தல் பிரச்சாரத்தைத் துவக்கினார். சேலம் வந்தபோது அவரது கையில் இருந்தது எவ்வளவு?
"60 ஆயிரம்தான் இருப்பு' என்றார். சிலரிடம் தேர்தல் நிதி எதிர்பார்த்தார். அவர்கள் தலைமறை வாகிவிட்டனர். நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி வாய்ப்பை இழந்தது. காரணம் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி. அடுத்து அ.தி.மு.க. அரசு டிஸ்மிஸ் செய்யப் பட்டது. இனி அந்தக் கழகம் மங்கிவிடும் என்று எண்ணினர். காங்கிரஸ்-தி.மு.க. அணியே தொடர்ந்தது. ஆனால் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி தேடித்தராத மக்கள், சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.விற்கு அமோக வெற்றி தேடித்தந்தனர். அவர்கள் தெளிவாக இருக்கின்றனர்.
முந்தைய ஆட்சியின்போது நாம் செய்த தவறுகள் என்ன என்பது பற்றியே எம்.ஜி.ஆர். சிந்தித்தார். இனி அத்தகைய தவறுகள் நிகழக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். அனுபவம்தானே சிறந்த ஆசான்?
கலைஞர் ஆட்சியில் பொறுப்பான பதவிகளில் இருந்த பலர் திறமைசாலிகள். ஆனால் அந்த அதிகாரிகள் தி.மு.க.வினர் என்றும் அவர்கள் எம்.ஜி.ஆருக்கு விசுவாசமாக இருக்கமாட்டார்கள் என்றும் உளவுத்துறையின் பெரிய அதிகாரி அவரைக் குழப்பிவிட்டார். அதனால் முதன்முறையாக பதவி ஏற்றபோது அந்த அதிகாரிகளை எம்.ஜி.ஆர். பயன்படுத்த வில்லை. ஆனால் எவ்வளவு பெரிய தவறு செய்துவிட்டோம் என்பதனை ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்ட பின்னர்தான் உணர முடிந்தது. ஏனெனில் திறமைசாலிகள்தான் விசுவாசி களாகவும் இருப்பார்கள் என்பதனைக் காலம் கற்றுக் கொடுத்தது.
புதிய ஆட்சியின் காவல்துறை தலைமை அதிகாரியாக (டி.ஜி.பி.) பொன்.பரமகுருவை நியமிப்பது என்று எம்.ஜி.ஆர். முடிவு செய்தார். ஏற்கனவே பரமகுரு அந்த பதவியில் அமர்ந்திருக்க வேண்டும்.
எம்.ஜி.ஆர். பதவியேற்ற இரண்டாம் நாள் காலையிலும் அதிகாரிகள் நியமனம் பற்றி தோட்டத்தில் ஆலோசனை நடந்தது. பொன்.பரமகுரு நியமனத்தில் மாறுதல் இல்லை.
"மக்கள் செய்தி' நாளிதழ் அலுவலகப் பணியில் இருந்தோம். அதிகாரிகள் நியமனம் பற்றி நிருபர் தொலைபேசியில் தகவல் தெரி வித்தார். டி.ஜி.பி.யாக ராதாகிருஷ்ணன் நியமனம் என்று அவர் சொன்னார். அதிர்ச்சி.
உடனடியாக முதல்வரின் முதன்மைச் செயலாளர் பரமசிவம் அவர்களைத் தொடர்பு கொண்டோம். காலையில் எடுத்த முடிவுக்கு மாறாக டி.ஜி.பி. ராதாகிருஷ்ணன் என்று செய்தி வந்திருக்கிறதே என்றோம். அவரும் பதறிப் போனார். தமக்கே தெரியாது என்றார். முதல்வர் அறைக்குச் சென்று அழைக்கிறேன் என்றார்.
சில விநாடிகளில் தொலைபேசி அலறியது. முதல்வரே பேசினார். "உங்களுக்கு யார் சொன்னது? ராதாகிருஷ்ணனா அவர் யார்' என்றார். அவருக்கும் தெரியாது உளவுத்துறை பெரிய அதிகாரி விளையாடிவிட்டார். காவல் துறை அதிகாரிகளின் மாறுதல் ஆணைகளில் முதல்வரிடம் கையெழுத்து பெற்றதும் டி.ஜி.பி.யையே மாற்றிவிட்டார். அவர் உளவுத்துறைக்குத்தான் தலைவர். ஆனால் ஒட்டுமொத்த காவல்துறை யையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நினைத்தார். முந்தைய ஆட்சியில் அவர் அப்படிச் செயல் பட்டவரும்கூட. ஆனால் இப்போது டி.ஜி.பி.யாக பரமகுரு நியமனம் பெற்றதால் அவருடைய கனவுக் கோட்டை தகர்ந்தது. அரைமணி நேரத்தில் பொன்.பரமகுரு டி.ஜி.பி. என்ற ஆணை பறந்து வந்தது.
"இந்தத் தவறை ஏன் செய்தீர்கள்' என்று அந்த அதிகாரியை எம்.ஜி.ஆர். கடிந்துகொண்டார். அதற்கு அவர் என்ன சொன்னார் தெரியுமா?
"பரமகுரு தி.மு.க.காரர். கலைஞருக்கு வேண்டியவர். முன்னதாகவே இந்தத் தகவலைச் சொல்ல நினைத் தேன். வேலைப்பளுவில் மறந்துவிட் டேன்' என்று அந்த அதிகாரி சொன் னார்.
""சில ஆண்டுகளுக்கு முன்னர் நான்கூட தி.மு.க.காரன்தான். முந்தைய ஆட்சியின்போதும் இப்படிப் பல தவறுகள் செய்தீர்கள். எந்த அதி காரிக்கும் அரசியல் சாயம் பூசவேண்டாம். எனக்குத் திறமைசாலிகள்தான் வேண்டும்'' என்றார் எம்.ஜி.ஆர்.
ஆனாலும் அந்த அதி காரி திருந்துவதாக இல்லை.
அப்போது சென்னை ஆலிவர் சாலை வீட்டுவசதி வாரியக் குடியிருப் பில் தங்கியிருந்தோம். அந்த உளவுத் துறை அதிகாரி தொலைபேசியில் அழைத்தார். நீங்கள் நிர்வாகத்தில் தலையிடுகிறீர்கள். ஜாக்கிரதை என்றார். நான் சாமானியன் எப்படி தலையிட முடியும் என்றோம். அவர் தொலை பேசியை துண்டித்துவிட்டார்.
தேர்தல் பிரச்சாரத்தின்போது கரிவலம்வந்தநல்லூரைக் கடந்து சென்றோம். அப்போது பொன்.பரமகுருவைப் பற்றி வேறு கருத்துப் பரிமாற்றங்கள் நடந்தன. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அவர் ஓரம்கட்டப்பட்ட விபரங்களைச் சொன்னோம். பரமகுரு ஓர் மனிதாபிமானி என்றோம். எம்ஜி.ஆர். நிமிர்ந்து அமர்ந்தார்.
1962-ஆம் ஆண்டு இந்திய-சீன எல்லைப் பிரச்சினையைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். திரிபுரா மாநில மார்க்சிஸ்ட் தலைவர் நிருபன் சக்கரவர்த்தி கைது செய்யப்பட்டார். வேலூர் சிறைக்கு அனுப்பப்பட்டார். அப்போது பரமகுரு சிறைத்துறை தலைமை அதிகாரி. நிருபன் சக்கரவர்த்தியை தனது தந்தையைப்போல் பார்த்துக்கொண்டார்.
நிருபன் சக்கரவர்த்தி விடுதலையாகி ஹவுரா எக்ஸ்பிரஸில் கல்கத்தா பயணமானார். தான் காவல்துறை அதிகாரி என்பதனையே மறந்து பரமகுரு சென்ட்ரல் ரயில் நிலையம் சென்றார். நிருபன் சக்கரவர்த்தியை வழியனுப்பி வைத்தார். அதற்காக அன்றைய முதல்வரின் கண்டனத்திற்கு ஆளானார் என்றோம்.
நிருபன் சக்கரவர்த்தி 1967-ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று திரிபுரா முதலமைச்சரானார். தனது பதவியேற்பு விழாவுக்கு அவர் பரமகுருவை அழைத்தார்.
எம்.ஜி.ஆர். பதவியேற்ற இரண்டாவது வாரம். ஒருநாள் மாலையில் ""தோட்டத்திற்கு வாருங்கள்'' என்றார். அப்படி அபூர்வமாகத்தான் அழைப்பார். காரணம் இருக்கும்.
மாலை 5.30 மணி. ராமாவரம் தோட்டம் அமைதியில் இளைப்பாறிக்கொண்டிருந்தது. மாமரத்தின் கீழ் காவல்துறை அதிகாரி நின்றுகொண்டிருந்தார். நெருங்கிப் பார்த்தோம். அவர் சென்னை மாநகரக் காவல் துணை ஆணையர் மரியாதைக்குரிய ஸ்ரீபால் அவர்கள்.
""ஏன் இங்கே நிற்கிறீர்கள்? தாங்கள் வந்திருப்பது தலைவருக்குத் தெரியுமா?''
புதிய முதல்வரின் ஆசி பெற அவர் இப்படி பலநாள் வந்து இருட்டியதும் திரும்பிச் சென் றிருக்கிறார்.
அப்போது முதல்வரின் மெய்க்காப்பாளராக அந்த உளவுத்துறை அதிகாரி தமது சீடர்களையே நியமித்திருந்தார். ஸ்ரீபால் வருகை பற்றி அவர்கள் முதல்வருக்குத் தெரிவிக்கவில்லை. அந்த உளவுத்துறை அதிகாரியின் கட்டளை.
ஸ்ரீபாலை அழைத்துக்கொண்டு முதல்வரின் இல்லத்தில் நுழைந்தோம். இன்டர்காம் மூலம் முதல்வருக்கு தகவல் தந்தோம். "நீங்கள் மாடிக்கு வாருங்கள்' என்றார். அழைத்த காரணத்தைச் சொன்னார்.
அதன்பின்னர் அவரே மாடியிலிருந்து இறங்கி வந்து ஸ்ரீபால் சாரை வரவேற்றார். ""நீங்கள் என்னை எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம். இப் போதுபோல் சென்னை நகரின் சட்டம்-ஒழுங்கு சரியாக இருக்க வேண்டும்'' என்றார்.
ஸ்ரீபால் சாரை மாறுதல் செய்யவே அந்த உளவுத்துறை அதிகாரி துடித்துக்கொண்டிருந்தார். இப்போது அந்தக் கனவும் கலைந்தது.
அன்று இரவு அந்த உளவுத்துறை அதிகாரி தொலைபேசியில் தொடர்புகொண்டார்.
"ஸ்ரீபால் தி.மு.க.காரர். உங்களுக்குத் தெரியாதா? அநாவசியமாக தலையிடுகிறீர்கள்' என்றார். இரண்டாவது மிரட்டல்.
போடி அருகே தலித் மக்கள் மதமாற்றம் செய்யப்பட்டனர். பெரும் பிரச்சினையானது.
""ஸ்ரீபால் சார் கலைக்களஞ்சியம். அவர் மதம் மாற்றப் பிரச்சினை-பின்னணிகளை நன்கு அறிவார். எனவே நீங்கள் அவரை அழைத்துப் பேசலாம்'' என்று எம்.ஜி.ஆரிடம் தெரிவித்தேன்.
""அப்படியா?'' என்றார்.
அடுத்த நிமிடம் சென்னை மாநகரக் காவல் துறை ஆணையர் ஸ்ரீபால் அவர்களுக்கு அழைப்பு. அவரோடு முதல்வர் விரிவாக ஆராய்ந்தார். ஸ்ரீபால் சார் சொன்ன ஆலோசனைகள் எம்.ஜி.ஆருக்குப் பிடித்துப்போய்விட்டது. தி.மு.க. என்று உளவுத்துறை தலைவரால் அழுத்தமாக முத்திரை குத்தப்பட்ட ஸ்ரீபால் சார் அவர் களை ஐந்து ஆண்டுகள் சென்னை மாநகர ஆணையராக அமர்த்தி அழகுபார்த்தார். அமரர் எம்.ஜி.ஆரின் பதவி காலத்திலேயே பரமகுருவிற்குப் பின்னால் ஸ்ரீபால் சார் டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்றார்.
அவர் டி.ஜி.பி.யாக பதவியேற்ற இரவு அந்த உளவுத்துறை அதிகாரி தொலைபேசியில் அழைத்தார். "நீ நக்ஸலைட்டாமே?' என்றார். "ஆம்' என்றோம். தொலைபேசியைத் துண் டித்துவிட்டோம்.
அடுத்த இருநாட்களில் "மக்கள் செய்தி' அலுவலக வாசலை மத்திய போலீஸ் லாரிகள் முற்றுகையிட்டன. ராமநாதன், அய்யா சாமி என்ற காவல்துறை அதிகாரிகள் வாசலில் நின்றனர்.
வாசலில் நின்ற காவல்துறை அதிகாரி களைச் சந்தித் தோம். "ரெய்டு நடத்தச் சொல்லி எங்களுக்கு மேலிட உத்தரவு' என்றார் ராமநாதன்.
"பத்திரிகை அலுவலகத்தையா? தொழிற் சங்கத்தையா?'
"மக்கள் செய்தி அலுவலகத்தை' என்றார் அந்த அதிகாரி. இத்தனைக்கும் நாம் தினமும் சந்திக்கும் எம்.ஜி.ஆர்.தான் முதல்வர்.
""சரி, வாருங்கள்'' என்று அழைத்தோம். "மக்கள் செய்தி' அலுவலகத்தைச் சுற்றிப் பார்த்தனர். அப்போது குசேலரும் இருந்தார்.
""சோதனை முடிந்ததா?''
முடிந்தது. சோதனையில் ""எதனையும் கைப்பற்றவில்லை'' என்று அதிகாரிகள் எழுதித் தந்தனர்.
அந்தச் சோதனையின் பின்னணி அந்த உளவுத்துறை பெரிய அதிகாரிதான் என்பது தெரிந்தது. சோதனைச் செய்தியை முதல் பக்கத்தில் வெளியிட்டோம். அந்த உளவுத்துறை அதிகாரியை அழைத்து வாங்கு வாங்கென்று வாங்கிவிட்டார் எம்.ஜி.ஆர். எப்படியாவது எமக்கு நக்ஸலைட் முத்திரை குத்த அவர் அரும்பாடுபட்டார். காலத்தை வீணாக்குவது தன்னைத்தானே கொள்ளையடித்துக்கொள்வதற்குச் சமம். அதனைத்தான் அந்த அதிகாரி செய்துகொண் டிருந்தார்.
காவல்துறை தலைமை அதிகாரிகள் கூட்டம். அந்தக் கூட்டம் எமக்காகவே கூட்டப்பட்டது என்பது தெரிந்தது. "சோலை நக்ஸலைட் என்பதற்கு போதிய ஆதாரங்கள் கிடைத்துவிட்டன. எனவே அவரை கைது செய்ய வேண்டும்' என்று டி.ஜி.பி. பொன்.பரமகுருவை கோரினார். அவர் மறுத்துவிட்டார்.
"சென்னை மாநகர ஆணையர் என்ற முறையில் நீங்கள் கைது செய்யலாம்' என்று ஸ்ரீபாலை கோரினார்.
""அந்த அதிகாரம் உமக்கே உண்டு, நீங்களே கைது செய்யுங்கள்'' என்றார் ஸ்ரீபால்.
அய்யா பரமகுரு இன்று நம்மிடையே இல்லை. ஆனால் மரியாதைக் குரிய ஸ்ரீபால் அவர் கள் இன்றும் இருக்கிறார். அவர்கள் மூன்றுமுறை அந்த உளவுத்துறை அதிகாரி வைத்த கண்ணியிலிருந்து காப்பாற்றினார். நன்றியோடு நினைத்துப் பார்க்கிறோம்.
காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் அந்த உளவுத்துறை அதிகாரி பேசிய விபரங்களை பொன்.பரம குரு அவர்களே முதல்வர் எம்.ஜி.ஆரிடம் தெரிவித்தார். அவர் கோபத்தின்குன்றேறி நின்றார்.
அந்த அதிகாரியை தோட்டத்திற்கு அழைத்தார். எமக்கும் அழைப்பு.
""மிஸ்டர் மோகன்தாஸ் நீங்கள் சோலையைத் தொடுகின்ற அன்று நான் முதலமைச்சராக இருக்க மாட்டேன்'' என்று உரத்த குரலில் எச்சரித்தார். எம்மைப் பொறுத்த வரையில் இன்றைக்கும் அமரர் எம்.ஜி.ஆர். மனித தெய்வம்தான்.
thanks nakkeeran +raj trichy
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக