கூடலூர்: முல்லைப் பெரியாறு அணை உரிமைக்காக போராடிய, தமிழக மக்கள் மீது தடியடி, கண்ணீர் புகைக் குண்டு வீசப்பட்டு, போர்க்களமாக மாறிய நிலையிலும், மத்திய அரசு மவுனமாக இருப்பது, தமிழக விவசாயிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
முல்லைப் பெரியாறு அணை பலமிழந்து விட்டதாக, 1979ல் கேரளா புகார் கூறியபின், பல கோடி ரூபாய் மதிப்பீட்டில், தமிழக அரசு அணையைப் பலப்படுத்தியது. இப்பணி முடிவடைந்தவுடன், பல்வேறு நிபுணர் குழுக்கள் அணையை ஆய்வு செய்த பின், அணை பலமாக உள்ளது என அறிக்கை தாக்கல் செய்தனர். அதனடிப்படையில் சுப்ரீம் கோர்ட், 2006 பிப்., 27ல், அணையின் நீர்மட்டத்தை, 142 அடியாக உயர்த்தலாம் என தீர்ப்பு வழங்கியது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பையும் அமல்படுத்த விடாமல் தடுக்க, கேரளா பல்வேறு இடைஞ்சல்களை செய்தது. அதன்பின், சுப்ரீம் கோர்ட் பரிந்துரையின்படி, மத்திய அரசால் நியமிக்கப்பட்ட, ஐவர் குழுவினர் கடந்த ஓராண்டாக, அணையின் பலம் குறித்து, பல வகையான ஆய்வுகளை நடத்தி வருகின்றனர்.
அணையில் நில அதிர்வுச் சோதனை (சோனிக் லாஜிக் டெஸ்ட்), அணையின் நீர்த் தேக்க சுவரை, நீர் மூழ்கி வீரர்கள் மூலம் படம் எடுத்து சோதனை, நீரின் அடியில் தங்கியிருக்கும் மண்படிவங்கள் குறித்த சோதனை ஆகியவை முடிந்துள்ளன. இதற்கான அறிக்கைகளை நிபுணர் குழுவினர் தயார் செய்து வைத்துள்ளனர். இறுதிகட்டமாக அணையின் மேல்பகுதியில், நவீன டிரில்லிங் மெஷின் மூலம் துளையிட்டு, அதிலிருந்து எடுக்கப்படும் சாம்பிளை வைத்து, பலம் குறித்து ஆய்வும் நடைபெற்றது. இந்த ஆய்வை முடித்து, அனைத்து அறிக்கைகளையும், ஐவர் குழு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தபின், தீர்ப்பு வழங்கப்படும்.
இரண்டாவது முறையாக வெளிவர உள்ள சுப்ரீம் கோர்ட் தீர்ப்பும், தமிழகத்திற்கு சாதகமாக அமைந்து விட்டால், கேரள அரசியலில் குழப்பம் ஏற்பட்டு விடும் என்பதற்காக, அண்மைக்காலமாக நிலநடுக்க புகாரை முன்வைத்து, கேரளா பொய்யான பிரசாரங்களை செய்து வருகிறது. அணை அருகே, புதிய அணை கட்டியே தீர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, அதை செயல்படுத்துவதில் மிக உறுதியாகவும் உள்ளது. கடந்த, 1979க்குப் பின் அணையின் நீர்மட்டத்தை, 136 அடியாக நிலைநிறுத்திய பின், தென் தமிழகத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்கள் தரிசு நிலங்களாக மாறின. இரண்டு போகமாக நடந்து வந்த நெல் விவசாயம், ஒரு போகமாக மாறியது. இந்நிலையில், பெரியாறு அணை நீர்மட்டத்தை, 120 அடியாகக் குறைக்க வேண்டும் என, கேரள சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியதால், தமிழக விவசாயிகள் வெகுண்டு எழுந்தனர். தமிழக விவசாயிகளுக்கு எதிராக உள்ள, கேரள அரசின் செயல்பாடுகளைக் கண்டித்து, டிச., 5ல் தமிழக மக்களும், விவசாயிகளும் போராட்டத்தை துவக்கினர். இது மேலும் வலுவடைந்த நிலையில், கேரள எல்லைப்பகுதியை முற்றுகையிட்டனர். குமுளியில் இரண்டு முறையும், கம்பம்மெட்டில் ஒரு முறையும், முற்றுகை போராட்டம் நடத்தியதில், போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். அதன்பின், போராட்டம் மேலும் தீவிரமடைந்தது.
கடந்த டிச., 21ல், குமுளியை முற்றுகையிட சென்ற, தமிழக விவசாயிகள் மற்றும் பொதுமக்களை லோயர்கேம்பில், போலீசார் தடுத்தனர். இதனால் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில், போலீசார் தடியடி நடத்தியும், கல்வீசி தாக்கிய சம்பவம் நடந்தது. இதில், ஏராளமான பொதுமக்கள் காயமடைந்தனர். போலீசாரின் இச்செயலை கண்டித்து, கூடலூரில் கலவரம் வெடித்து. பொதுமக்கள் மீது மூன்று முறை தடியடி நடத்தி, கூட்டத்தைக் கலைக்க கண்ணீர் புகைக் குண்டும் வீசப்பட்டது. இதனால், லோயர்கேம்ப் கூடலூர் பகுதி போர்க்களம் போல் ஆனது. முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையில், இதுவரை அமைதியாக இருந்த, தமிழக விவசாயிகளும், பொதுமக்களும், கேரளா செய்து வரும் செயல்களைக் கண்டித்து வெகுண்டு எழத் துவங்கியுள்ளனர். தண்ணீருக்காக நடந்த இந்தப் போராட்டத்தில், தமிழக விவசாயிகள் பலரும், பொதுமக்களும் காயமடைந்துள்ளனர். கடந்த, 20 தினங்களாக நடந்த இப்போராட்டத்தில் லோயர்கேம்ப், கூடலூர், கம்பம் உள்ளிட்ட பகுதிகள் போராட்டக்களமாக மாறியுள் ளன. இப்போராட்டங்கள் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், மத்திய அரசு இதுவரை மவுனம் காப்பதால், தமிழக விவசாயிகள் பெரும் கலக்கம் அடைந்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக