திங்கள், 26 டிசம்பர், 2011

RSS , ஏஜன்ட் அன்னா ஹசாரே: காங்கிரஸ் பாய்ச்சல்

புதுடில்லி: ஐந்து மாநிலங்களுக்கான சட்டசபைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அன்னா ஹசாரேக்கு எதிரான பிரசாரத்தையும், காங்கிரஸ் கட்சி தீவிரப்படுத்தியுள்ளது. "ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் ஏஜன்ட் ஹசாரே' என்று கடுமையாக விமர்சித்துள்ளது.

வலுவான லோக்பால் மசோதாவை கொண்டு வராவிட்டால், உ.பி., உட்பட ஐந்து மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலின் போது, காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பிரசாரம் செய்வேன் என, சமூக சேவகர் அன்னா ஹசாரே அறிவித்திருந்தார். இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் நானாஜி தேஷ்முக் உடன் அன்னா ஹசாரே இருப்பது போன்ற புகைப்படம், நேற்று இந்தி நாளிதழ் ஒன்றில் வெளியானது. அதில், கடந்த 1983ம் ஆண்டில், நானாஜி தேஷ்முக்கின் தலைமையின் கீழ், அன்னா ஹசாரே பணியாற்றியுள்ளார் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தான் தருணம் என, ஹசாரேக்கு எதிரான பிரசாரத்தை, காங்கிரஸ் கட்சி துவக்கியுள்ளது. இதுதொடர்பாக, காங்கிரஸ் தகவல் தொடர்பாளர், ரஷீத் ஆல்வி கூறியதாவது: ஆர்.எஸ்.எஸ்., அமைப்புடன் தொடர்பு இருந்ததா, இல்லையா, இப்போதும் இருக்கிறதா என்பதை, ஹசாரே தெளிவுபடுத்த வேண்டும். ஹசாரே பின்பற்றும் கொள்கை என்ன? அவரின் கொள்கையை மக்கள் அறிந்து கொள்ளும் உரிமையுள்ளது. எனவே, அவர் அதை வெளியிட வேண்டும். லோக்பால் அமைப்பில், சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு அளித்ததை, அவர் வரவேற்கவில்லை. அதற்குப் பதிலாக, அது அரசின் முடிவு எனக் கூறியுள்ளார். இதிலிருந்தே, அவரின் கொள்கை என்ன என்பதை அறிந்து கொள்ளலாம். காங்கிரஸ் கட்சியை மக்கள் தான் தேர்ந்தெடுத்தனர். அவர்களுக்கு பதிலளிக்க வேண்டியது தான் எங்களின் கடமை. மற்றவர்களுக்கு பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு ரஷீத் ஆல்வி கூறினார்.

மத்திய அமைச்சர் பெனி பிரசாத் வர்மா கூறியதாவது: ஹசாரேயால், காங்கிரஸ் கட்சிக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. அவர் ஒரு ஆர்.எஸ்.எஸ்., ஏஜன்ட். கடந்த 1965ம் ஆண்டில், இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நிகழ்ந்த பின், தலைமறைவான படைவீரர்களில் அவரும் ஒருவர். உள்ளாட்சித் தேர்தலின் போது, பவாரின் கட்சிக்கு எதிராக, ஹசாரே பிரசாரம் செய்தார். அது மக்களிடம் எடுபடவில்லை. பவார் கட்சி அமோக வெற்றி பெற்றது. டில்லியில், நாடகத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கும் ஹசாரேக்கு, இந்திய அரசியலில் அடையாளம் எதுவும் கிடையாது. காங்கிரசையும், ராகுலையும் விமர்சிக்கும் ஹசாரே, பா.ஜ., மற்றும் அந்தக் கட்சியின் தலைவர்களுக்கு எதிராக, வாய் திறக்காதது ஏன்? ஹசாரே குழுவைச் சேர்ந்த அரவிந்த் கெஜ்ரிவால், அமெரிக்காவிடமிருந்து ஒவ்வொரு வருடமும், 20 கோடி ரூபாய் பெறுகிறார். இவ்வாறு பெனிபிரசாத் வர்மா கூறினார்

கருத்துகள் இல்லை: