செவ்வாய், 27 டிசம்பர், 2011

சசிகலாவின் பெங்களூரு வழக்கில், பாஸ்கரனின் ஆந்திரா ஸ்பெஷல் டீல்!


Viruvirupu

சசிகலா உறவினர்கள் பலரும் கட்டம் கட்டப்பட்டு பட்டியல் வெளியானபோது, அதிலிருந்த ஒரு பெயர் சிலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. முன்பு ஜெ.ஜெ. டி.வி-யின் நிர்வாக இயக்குனராக இருந்த பாஸ்கரன்தான் அவர். ஆச்சரியத்துக்கு காரணம், பாஸ்கரன் கார்டன் விவகாரங்களில் இருந்து சமீபகாலமாக ஒதுங்கியே இருந்தார். அவரது அரசியல் தலையீடுகளும் அதிகமாக இல்லை.
அப்படியிருந்தும் ஏன் அவருக்கும் வெட்டு விழுந்தது?
நாம் விசாரித்தவரை, பாஸ்கரன் மீது கார்டனுக்கு ஏற்பட்டுள்ள சந்தேகம், லோக்கல் விவகாரம் அல்ல. தற்போது பெங்களூருவில் நடைபெற்று வரும் சொத்துக் குவிப்பு வழக்கில், சசிகலாவை மட்டும் காப்பாற்றும் முயற்சிகளில் வெளி மாநிலம் ஒன்றில் வைத்து ஏதோ டீலிங் செய்கிறார் என்ற தகவல் கார்டனுக்கு கிடைத்த காரணத்தால்தான் இவர் கட்டம் கட்டப்பட்டார் என்கிறார்கள்.
சொத்து குவிப்பு வழக்கில் சகிகலா குடும்பத்தினரை மட்டும் காப்பாற்றுவதற்காக, முன்னாள் நீதிபதி ஒருவரை வெளி மாநில சட்ட நிபுணர் ஒருவர் மூலம் அணுகியதாக ஒரு கதை சசிகலா வெளியேற்றத்துக்கு முன்னரே கசிந்திருந்தது. குறிப்பிட்ட வழக்கில் சொத்து சேர்த்ததற்கு ஆதாரங்கள் காண்பிக்கப்பட்டாலும், அவை ஜெயலலிதாவின் சொத்துக்கள்தான் என்றும், அவற்றைப் பெறுவதற்கு சசிகலா எந்த அரசுப் பதவியிலும் இருந்திருக்கவில்லை என்றும் கேஸை திசை திருப்ப முடியுமா என்று ஆலோசனை நடத்தப்பட்டதாக சொல்கிறார்கள்.

அந்தக் கூற்றில் உண்மை இல்லாமல் இல்லை. அது தொடர்பான சில தகவல்களை சேகரித்திருக்கிறோம். அவற்றை மற்றொரு கட்டுரையில் பார்க்கலாம். இங்கு சொல்ல வருவது, மேற்படி முயற்சியின் பின்னணியில் பாஸ்கரன் இருந்தார் என்ற சந்தேகம் கார்டனுக்கு ஏற்பட்டது என்பதைத்தான்.
பாஸ்கரனுக்கு ஆந்திராவில் மிக பவர்ஃபுல்லான வர்த்தக தொடர்புகள் உள்ளன. சசிகலா குடும்பத்தின் மற்றைய நபர்கள் அனைவரும் தமது மெயின் பிசினெஸ்ஸை தமிழகத்தில் வைத்திருக்க, இவர் தனது மெயின் வியாபாரத்தை ஆந்திராவில்தான் வைத்திருந்தார். ஆந்திராவில் கல்குவாரி ஒன்றை நடத்தத் தொடங்கியபின் ஏற்பட்ட தொடர்புகள் அவை.
சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக ரகசிய பேரங்களை ஜெயலலிதாவுக்கு தெரியாமல் நடத்த வேண்டியிருந்தது. இவர்கள் என்னதான் பரமசிவன் கழுத்து பாம்பாக இருந்தாலும், தமிழகத்தில் செய்யப்படும் எந்த நகர்வும் தமிழக உளவுத்துறையின் கண்களில் பட்டுவிடலாம் என்ற பாஸிபிளிட்டி ஒன்றும் இருந்தது. அதனால் தமிழக உளவுத்துறையின் ரீச்சபிள் ஏரியாவுக்கு வெளியே இதையெல்லாம் நடத்த விரும்பினார்கள்.
அதற்கு வசதியாக இருந்தது பாஸ்கரனின் ஆந்திரா சாம்ராஜ்யம் என்கிறார்கள்.
வழக்கில் சசிகலா குடும்பத்துக்கு ஆபத்து ஏதும் வராமல் செய்வதற்கான பேச்சுக்கள் ஆந்திராவில்தான் நடந்தன என்று தெரியவருகிறது. சென்னையில் இருந்து சென்றவர்கள் பாஸ்கரனுக்கு சொந்தமான கெஸ்ட் ஹவுஸில் தங்கியிருந்துதான் பேச்சுவார்த்தைகளை நடத்தினார்கள். அது கிட்டத்தட்ட உறுதியான தகவல்தான். ஆனால், அதில் பாஸ்கரன் நேரடியாக தொடர்பு கொண்டிருந்தாரா என்று சரியாகத் தெரியவில்லை.
இந்த விவகாரம் ஆந்திராவில் சீரியசாக நடைபெற்ற நேரத்தில் பாஸ்கரன், “சினிமாவில் நடிக்கப் போகின்றேன்” என்று தமிழக மீடியாக்களுக்கு செய்தி கொடுத்துக் கொண்டு இருந்தார். இந்த சினிமா டாபிக் நிஜமா அல்லது, ஆந்திராவில் நடந்துகொண்டிருந்த விஷயங்களுக்கு ஒரு கவர்-அப் கதையா என்பதும் தெரியவில்லை.

கருத்துகள் இல்லை: