1980களில் ஆரம்பித்த இந்த ஏகபோக போக்குகளுக்கு எதிராக மக்கள் நலன் நோக்கில் சுதந்திரச் சிந்தனை கொண்ட மென்பொருள் வல்லுனர்கள் ஆரம்பித்த முயற்சிகளின் ஒரு பகுதிதான் லினக்ஸ் என்ற இயங்குதளம். இந்த முறையில் மென்பொருள் மூலநிரல் எல்லோருக்கும் கிடைக்கும்படி பொதுவில் (இணையத்தில்) வெளியிடப்படுகிறது. இங்கே யாரும் மூலநிரலுக்கு உரிமை பாராட்டுவதில்லை – சொந்தம் கொண்டாடுவதில்லை – அறிவுச் சொத்தை பணம் காய்ச்சி மரமாக நினைப்பதில்லை – ஏகபோகத்தை நிலைநாட்ட வேண்டும் என்று கருதுவதில்லை. உலகெங்கிலும் உள்ள மென்பொருள் தன்னார்வ வல்லுனர்கள் மூலநிரலை எடுத்துத் தமக்குத் தேவையான வசதிகளைச் சேர்த்து இணையத்தில் எல்லோருக்கும் இலவசமாக பகிர்ந்தளிக்கின்றனர்.
இவ்வகையான மென்பொருட்களில் ஏற்படும் பிழைகளை உடனுக்குடன் சரிசெய்து மேம்படுத்திக் கொள்கின்றனர். இதற்காகவே உலகெங்கும் உள்ள லட்சக்கணக்கான இலவச மென்பொருள் தன்னார்வலர்கள் லாப நோக்கமற்று தங்கள் உழைப்பைச் செலுத்தி வருகிறார்கள். விற்பனையின் மூலம் கொள்ளை லாபம் என்ற நோக்கம் இல்லாமல் தமது தேவைகளுக்காக உழைத்து அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது என்ற அடிப்படையில் இத்தகைய மென்பொருட்கள் உருவாக்கப்பட்டு, பராமரிக்கப்படவும், வளர்க்கப்படவும் செய்யப்படுகின்றன.
இந்த முறையில் உருவாகும் ஆயிரக்கணக்கான மென்பொருட்களில் முக்கியமான சில – லினக்சு இயங்குதளம், பயர்பாக்ஸ், குரோமியம் போன்ற இணைய உலாவிகள், மைஎஸ்கியூஎல் டேடாபேஸ், அப்பச்சே வெப்சர்வர், சாம்பா போன்றவை.
ஒரு முதலாளி இருக்க வேண்டும். அவருக்கு தொழிலாளிகள் இருக்க வேண்டும். அவர்களுக்குள் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற போன்ற போட்டிகள் இருக்க வேண்டும். இப்படி இருந்தால் தானே உற்பத்தி செய்வதற்கு ஊக்கம் இருக்கும்? இதன் மூலம் தானே தரமான பொருட்கள் உருவாக முடியும்? என்று நீட்டி முழக்கும் முதலாளித்துவ ஆதரவாளர்களுக்கு சமூகம் அளித்த பதில் தான் லினக்ஸ் உள்ளிட்ட இலவச மென்பொருட்கள். இப்படி எந்த லாப நோக்குமே இல்லாமல் வெறும் சமூக நோக்கில் உருவாக்கியளிக்கப்படும் இந்த மென்பொருட்கள், மைக்ரோசாப்ட் போன்ற கார்பப்ரேட்டுகள் வழங்கும் மென்பொருட்களை விட பன்மடங்கு மேம்பட்ட தரத்தில் இருக்கிறது. மைக்ரோசாப்டின் மென்பொருட்களுக்கு ஏற்படும் வைரஸ் தாக்குதல் போன்ற அசம்பாவிதங்கள் லினக்ஸில் ஏற்படுவதில்லை. அதற்காக தனியே ஆயிரக்கணக்கில் தண்டம் அழவும் தேவையில்லை.
1991-ல் வெளியிடப்பட்ட லினக்சு 20 ஆண்டுகளில் இயங்குதள பயன்பாடுகளில் பெரிய அளவு இடத்தைப் பிடித்திருக்கிறது. பழைய யூனிக்சு இயங்கு தளங்கள், சன் சோலாரிஸ் இயங்கு தளம் இவற்றிற்கான மாற்று சந்தையில் மைக்ரோசாப்டு விண்டோசுக்கு போட்டியாக லினக்ஸ் முந்துகிறது.
இப்படி சரிந்து வரும் தனது ஏகபோகச் சந்தையைத் தக்க வைத்துக் கொள்ள மைக்ரோசாப்டு சட்டரீதியாகவும் சட்ட விரோதமாகவும் தொடர்ந்து முயன்று வருகிறது. இது ஒரு எல்லையைக் கடந்து, மேற்கத்திய ஏகாபதிபத்திய நாடுகளிலேயே சகிக்க முடியாத கட்டத்தை அடைந்துள்ளது. அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நீதிமன்றங்கள் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சந்தை ஏகபோகத்தை எதிர்த்து தீர்ப்பு அளித்துள்ளன. மறுபுறம் லினக்ஸ் மேலே சொன்ன திறந்த முறையில் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு இன்று முழுமையான ஒரு பயனர் இயங்கு தளமாகவும் கிடைக்கிறது.
டிவிடி எழுதும் செலவை மட்டும் கொடுத்து லினக்சு வாங்கிக் கொண்டால் அதில் இயங்குதளம் மட்டுமின்றி, அலுவலக மென்பொருள், மென்பொருள் நிரலாக்கக் கருவிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான கட்டற்ற மென்பொருட்கள் மூலநிரலுடன் நிறுவிக் கொள்ளலாம். பொதுவான பயன்பாடுகளான இணைய பயன்பாடு, மின்னஞ்சல் அனுப்புதல், அலுவலக ஆவணங்கள் தயாரித்தல் போன்ற பணிகளில் லினக்சு விண்டோசை விட சிறப்பாக செயல்படுகிறது. கூடவே, விண்டோஸின் சாபமான வைரஸ் தாக்குதல் போன்ற நச்சுநிரல்களின் தொல்லையும் இல்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக