ஞாயிறு, 30 அக்டோபர், 2011

கலைஞர் விட்டுச் செல்ல, ஹோட்டல் காபி ஷாப்பில் தவிப்புடன் தயாநிதி!

Viruvirupu
புதுடில்லி, இந்தியா: சில ‘சக்திகள்’, தயாநிதி மாறனை ஓரம் கட்டும் முயற்சியில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கியுள்ளதாக தெரிய வருகின்றது. கனிமொழிக்கு ஜாமீன் கிடைக்கலாம் என்பது போன்ற ஒரு தோற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக கூறுகிறார்கள்.
ஸ்பெக்ட்ரம் ஊழல் குற்றச்சாட்டில் சி.பி.ஐ. தயாநிதியை என்ன செய்யப் போகின்றது என்பது இன்னமும் குழப்பமாகவே உள்ளது. மிக விரைவில் அவர் கடுமையான விசாரணைக்கு உட்படுத்தப் படலாம், அதையடுத்து ‘உள்ளே’ அனுப்பப்படலாம் என்ற பேச்சுக்கள் டில்லியில் அடிபட்டுக் கொண்டிருக்கின்றன.
இப்படியான நிலையில், தயாநிதியை சற்று தள்ளி நிற்க வைப்பது நல்லது என்ற ரீதியில் தி.மு.க. தலைமைக்கு ஒரு காங்கிரஸ் ‘நலம் விரும்பி’  அட்வைஸ் கொடுத்ததாக சொல்கிறார்கள். சமீபத்தில் கலைஞர் டில்லி சென்றபோது அவரை நேரில் சந்தித்த இந்த காங்கிரஸ்காரர், இதுபற்றி பக்குவமாக எடுத்துச் சொன்னாராம்.
“தற்போதுள்ள சூழ்நிலையில் உங்களது மிகப் பெரிய கன்சர்ன், கனிமொழிக்கு ஜாமீன் கிடைப்பதுதான் என்றால், தேவையற்ற சிக்கல்கள் எதிலும் மாட்டிக் கொள்ளாதீர்கள். தயாநிதி தற்போது இருப்பது ஒருவகையான சிக்கலில்தான். நான் என்ன சொல்ல வருகின்றேன் என்பது உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்” என்றாராம் அவர்.

கலைஞர் டில்லி வந்தபோது, ஏர்போர்ட்டுக்கு அழகிரியே வராத நிலையிலும் நேரில் வரவேற்க வந்திருந்தார் தயாநிதி மாறன். ஏர்போர்ட்டில் இருந்து கருணாநிதி தங்கிய ஹோட்டலுக்கும் சென்றார். அதுவரை எல்லாமே சுமுகமாக இருந்தன.
அதன்பின் கருணாநிதி தங்கியிருந்த ஹோட்டல் அறையிலேயே காங்கிரஸ் பிரமுகரின் சந்திப்பு இடம்பெற்றது. அப்போது தயாநிதி அங்கே இல்லை. தனது வீட்டுக்கு சென்றிருந்தார்.
மீண்டும் மறுநாள் தயாநிதி ஹோட்டலுக்கு வந்தபோது, சோனியா காந்தியைச் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு முடிந்து விட்டன. வழமையாக தயாநிதியே சோனியாவுடனான கலைஞரின் சந்திப்புக்கான ஏற்பாடுகளை முன்னின்று செய்து கொடுப்பார். தயாநிதி டில்லியில் இல்லாவிட்டால், டி.ஆர்.பாலு செய்து கொடுப்பார்.
இம்முறை தயாநிதி வரும் முன்னரே ஏற்பாடுகள் செய்யப்பட்டு, கருணாநிதி செல்வதற்கு தயாராக இருந்தார்.
சோனியாவைச் சந்திக்கச் சென்றபோது, தமது கட்சி எம்.பி. டி.ஆர்.பாலுவை அழைத்துச் சென்ற கலைஞர், பேரனை தவிர்த்து விட்டு சென்றார். பிரதமரை சந்திக்க சென்றபோதும் நிலைமை அதுவேதான்.
கருணாநிதி கிளம்பிச் சென்ற உடனேயே வெளியே செல்லாத தயாநிதி, ஹோட்டல் லாபியில் இருந்த காபி ஷாப்பில் சிறிது நேரம் அமர்ந்திருந்து விட்டு, அதன் பின்னர் புறப்பட்டுச் சென்றார். அதன்பின் அவரை ஹோட்டல் பக்கமே காண முடியவில்லை.
இனியும் தாத்தா வண்டியில் பேராண்டிக்கு இடம் கியாரண்டி கிடையாது என்கிறார்கள்.
-டில்லியிலிருந்து நர்மதா பானர்ஜியின் குறிப்புகளுடன், ரிஷி.

கருத்துகள் இல்லை: