இந்தியாவோடு ஒப்பிடும்போது நாலில் ஒரு பங்கு மக்கள் தொகை. ஆனால் உலகின் சூப்பர் பவர். பூமிப் பந்தின் மூலை முடுக்குகளில் நடப்பவற்றைக் கழுகுக் கண்களோடு 24 மணிநேரமும் கண்காணிக்கும் தொழில்நுட்ப வசதி. அசுர ராணுவ பலம். எல்லாம் இருந்தும் அமெரிக்கா கடந்த சில வருடங்களாக பல்வேறு முனைகளில் சரிவுகளைச் சந்தித்துவருகிறது. புதிதான சவால்கள் என்று சொல்லிவிடமுடியாது – அமெரிக்கா ஏற்கெனவே சந்தித்தவைதான். எல்லாவற்றையும் சமாளித்து ஃபீனிக்ஸ் பறவைபோல மீண்டெழும் சாமர்த்தியம் அமெரிக்காவுக்கு உண்டு. ஆனால் இப்போது நடப்பதுபோல ஒரே சமயத்தில் பல்முனைச் சவால்களைச் சந்திக்க நேர்வது அமெரிக்காவுக்குச் சற்றே புதிது.
வெள்ளை மாளிகை அதிபர் ஒபாமாவின் அறையில் இருக்கும் ஒரே இந்தியத் தலைவரின் படம் மகாத்மா காந்தி என்று ஒரு தகவல் உண்டு. ஒபாமாவும் அவ்வப்போது மகாத்மாவின் அகிம்சாரீதியான போராட்டங்களைச் சிலாகிப்பது உண்டு. யாருடன் டின்னர் சாப்பிட விரும்புவீர்கள் என்ற கேள்விக்கு காந்தியுடன் என்று அவர் சொல்லியிருக்கிறார். இன்று அவர் காந்தியின் சத்யாகிரகத்தை நியூ யார்க்கின் உலகப்புகழ்பெற்ற வால் ஸ்ட்ரீட்டில் எதிர்கொள்கிறார்.
வால் ஸ்ட்ரீட் பற்றித் தெரியாதவர்களுக்குச் சுருக்கமாக. உலகின் மிகப்பெரிய பங்குச்சந்தையான நியூ யார்க் பங்குச் சந்தையும், நாஸ்டாக், நியூ யார்க் மெர்க்கென்டைல் எக்சேஞ்ச், நியூ யார்க் போர்ட் ஆஃப் ட்ரேட் ஆகியவற்றின் தலைமை அலுவலகங்களும் இருக்கும் இடம். வால் ஸ்ட்ரீட்டில் பங்கு வர்த்தகம் சரிந்தால் உலகளவில் அது எதிரொலிக்கும் என்பதிலிருந்து அதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளலாம். அமெரிக்காவின் அசுர நிறுவனங்களின் பங்குகள் வர்த்தகம் செய்யப்படும் இடம் நியூ யார்க் பங்குச்சந்தை. குறிப்பாக உலகளாவிய நிதி மற்றும் வங்கி நிறுவனங்கள்.
கடந்த நான்கு வாரங்களாக வால் ஸ்ட்ரீட்டை மக்கள் முற்றுகை இட்டிருக்கிறார்கள். நாளுக்கு நாள் கூட்டத்தின் அளவு கூடி, நூற்றுக்கணக்கில் ஆரம்பத்தில் இருந்தது இன்று ஆயிரக்கணக்காக ஆகியுள்ளது. அமெரிக்காவின் மற்ற நகரங்களிலும் மக்கள் கூடி முற்றுகைப் போராட்டத்தை விரிவுபடுத்திக் கொண்டிருப்பது அரசுக்குப் பெரிய தலைவலியாக உருவெடுத்திருக்கிறது.
மக்கள் எதனால் முற்றுகை இடுகிறார்கள்? நம்மூரில் நிலம், கட்டடம் தொடர்பான ரியல் எஸ்டேட்டின் நிலவரம் நாம் அறிந்ததுதான். சென்னையில் நல்ல ஏரியாவில் வசதிகளோடு இரண்டு படுக்கையறை அபார்ட்மெண்ட் ஒன்று வாங்கவேண்டும் என்றால் குறைந்தது ஒரு கோடி ரூபாய் வேண்டும். கட்டுங்கடங்காது அசுரத்தனமாக விலை ஏறிக்கொண்டிருக்கிறது. சாமான்யர்களுக்கு வீடு என்பது எட்டாக்கனி. அமெரிக்காவிலும் 2005,-2006 வரை வீட்டுவிலை படிப்படியாக ஏறிக்கொண்டேபோய் உச்சகட்டத்தில் நின்றது. வாங்குபவர்கள் எல்லாருமே வங்கிகளிடமும் நிதி நிறுவனங்களிடமும்தான் கடன் பெற்று வீட்டை வாங்குவார்கள். கடன் கொடுக்கும் நிதி நிறுவனங்கள் அதைச் சும்மா வைத்திருக்காமல் பத்திரங்களாக அந்தக் கடன்களை மற்ற நிதி நிறுவனங்களுக்கு விற்றுவிடுவார்கள். இப்படிக் கைமாறிக் கைமாறி ஒரு கட்டத்தில் கடன் யாரிடம் இருக்கிறது என்பதே கடன் பெற்றவருக்குத் தெரியாது.
இம்மாதிரி வீட்டுக்கடன்களைக் கையாளும் அலுவலர்களுக்கு கடனையும் வட்டி விகிதத்தையும் பொருத்து கமிஷன் கிடைக்கும். கமிஷன் நிறையப் பெறவேண்டும் என்ற பேராசை கடன் அலுவலர்களை உந்த, இம்மாதிரி கொடுக்கும் கடன்களை உடனடியாகப் பெரிய நிறுவனங்களிடம் விற்றுக் காசு பார்க்கும் பேராசை நிதி நிறுவனங்களை உந்தியது. கடன் பெற்றவர்கள் வீட்டுக் கடன்களைச் செலுத்தத் தொடங்கியதும்தான் பிரச்னைகள் தொடங்கின. கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைத்தமாதிரி கடன் வாங்கத் தகுதி இல்லாதவர்களையெல்லாம் கண்ட இடத்தில் கையெழுத்து போடச்செய்து கண்மண் தெரியாமல் சகட்டுமேனிக்குக் கடன்கொடுத்துத் தள்ளியிருந்தார்கள். இம்மாதிரி கொடுத்த கடன்களையெல்லாம் நிதி நிறுவனங்களும் வங்கிகளும் தங்களது பேலன்ஸ் ஷீட்டில் பெரும் சொத்தாகக் காண்பித்துக்கொண்டிருந்தார்கள்.
ஆளாளுக்கு வீடுகள் வாங்க, வீட்டு விலை ஆகாயத்துக்கு எகிறியது. ஒரு கோடி பெறுமானமுள்ள வீட்டை நான்கு கோடிக்கு வாங்கினார்கள். இப்படி வாங்கியவர்கள் மாதத் தவணையைச் செலுத்தமுடியாமல் திணற, வீடுகள் ஜப்தி செய்யப்பட்டன. பத்து நூறு என்று தொடங்கி ஆயிரம் லட்சம் என்று பெருமளவு கடன்கள் செலுத்த முடியாமல் சொந்தக்காரர்கள் சாவிகளை ஒப்படைத்துவிட்டு வீடுகளைக் காலி செய்ய ஆரம்பித்ததும் பிரச்னை பூதாகாரமானது. சந்தையில் சகட்டுமேனிக்கு வீடுகள் குவிய, விலை பாதாளத்துக்கு விழுந்தது.
நான்கு கோடிக்கு வாங்கிய வீட்டை எழுபது எண்பது லட்சத்திற்குக்கூட விற்க முடியாமல் திணறினால் என்ன ஆகும்? முப்பது வருட காலக் கடன்களைப் பெற்றவர்கள் வாங்கிய முதல் சில வருடங்களில் செலுத்தும் மாதத் தவணைகளில் பெரும்பாலான தொகை வட்டியை அடைக்க மட்டுமே போய்விடும். வாங்கி ஐந்து வருடங்களில் அசல் மிகச் சொற்பமான அளவே குறைந்திருக்கும்.
ஒரு சிறிய கணக்கைப் பார்ப்போம்.
வீடு வாங்கிய விலை: நாலு கோடி. மாதத் தவணை – ஒரு லட்சம் (எண்பதாயிரம் வட்டி, இருபதாயிரம் அசல்). ஒரு வருட முடிவில் 2,40,000 மட்டுமே அசலில் கழிய பாக்கிக் கடன் 3,97,60,000 இருக்கும். விலை விழுந்ததால் வீட்டின் மதிப்பு எண்பது லட்சம்!
மாதத் தவணையைக் கட்ட முடியாமல் வீட்டை விற்றால் கிடைப்பது எண்பது லட்சம். வங்கிக்குக் கட்டவேண்டியது நாலு கோடி. என்ன செய்வார் வாங்கியவர்? சாவியைக் கொடுத்துவிட்டு வீட்டை ஜப்தி செய்ய விட்டுவிடுவார்.
வங்கிகள் வீட்டை ஜப்தி செய்தாலும் என்ன செய்யமுடியும்? அவர்கள் விற்றாலும் கிடைக்கப்போவது 80 லட்சம்தான். ஆனால் வரவேண்டிய தொகை நாலு கோடி. ஆக “வாராக் கடன்” என்று 3 கோடிக்கு மேல் கணக்கு எழுதுவார்கள். இப்படிப் பெருமளவில் எழுதினால் என்ன ஆகும்? லாபம் எதுவும் காட்ட முடியாமல் கடும் நஷ்டத்துக்கு உள்ளாகி, வங்கி திவாலாகிவிடும். வங்கிகளில் பணம் போட்ட வாடிக்கையாளர்களுக்குப் பட்டை நாமமும் ஒரு கை சுண்டலும்தான் மிச்சம்!
இப்படி நூற்றுக் கணக்கில் வங்கிகள் திவாலாகத் தொடங்கியதும்தான் சூழ்நிலையின் விபரீதம் எல்லாருக்கும் உறைக்க ஆரம்பித்தது. வேலையிழப்பு, சேமிப்பு இழப்பு, பங்குகளின் மதிப்பிழப்பு என்று எல்லாப் பக்கமும் அமெரிக்கப் பொது ஜனத்துக்கு அடிமேல் அடி. விழுந்த பொருளாதாரத்தினால் பல வணிக நிறுவனங்கள் திவாலாகத் தொடங்கின. பழம்பெருமை வாய்ந்த அமெரிக்க கார் தயாரிப்பு நிறுவனங்களான க்ரைஸ்லர், ஃபோர்ட் நிறுவனங்களும் திவாலாகும் நிலைக்கு வந்தன. இதன் சங்கிலித் தொடர் விளைவுகள் புரிகிறதா?
அவசர அவசரமாக அமெரிக்க அரசு தாற்காலிகக் கடனாக பல பில்லியன் டாலர்களை இந்த நிறுவனங்களுக்குக் கொடுத்துச் சமாளித்தது. (அவர்கள் அதை ஒன்றிரண்டு வருடங்களில் ஒழுங்காகத் திருப்பிக் கட்டியது வேறு விஷயம்.) சிட்டி பேங்க் உள்ளிட்ட உலகளாவிய பெரும் வங்கிகளும் திவாலாகும் நிலைக்குத் தள்ளப்பட்டவுடன் அமெரிக்க அரசு அதிரடியாக அரசு நிதியிலிருந்து பல பில்லியன் டாலர் தாற்காலிகக் கடனாக வழங்கி முட்டுக்கொடுத்தது. இது இப்படி இருக்க, இப்படி அரசுப் பணத்தில் (அதாவது மக்கள் பணத்தில்) மீட்டெடுக்கப்பட்ட நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் பலரும் மில்லியன் டாலர் கணக்கில் சம்பளம், படி, போனஸ் எல்லாவற்றையும் பெற்றுக்கொண்டு நிறுவனத்தைவிட்டு வெளியேறினர்.
இதற்கு “கோல்டன் பாராசூட்” என்றொரு சொலவடை இருக்கிறது. அதாவது விமானம் விழுந்து காலியாக எல்லாப் பயணிகளும் சிவலோகம் போகும் தருணத்தில் பைலட் மட்டும் பிரத்யேகமான பாராசூட்டைக் கட்டிக்கொண்டு எல்லாரையும் அம்போவென்று விட்டுவிட்டுத் தான்மட்டும் குதித்துத் தப்பிப்பதைப் போல! எல்லாப் பக்கங்களிலும் விழுந்த அடிகளால் நொந்துபோயிருந்த அமெரிக்கர்களுக்கு இந்த நடவடிக்கைகள் எல்லாம், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல இருந்தது. அவ்வளவுதான்! “உங்களது பேராசைக்கு எல்லையே இல்லையா?“ என்று கொதித்து எழுந்தார்கள் அமெரிக்கர்கள்.
இதன் விளைவுதான் கடந்த ஒரு மாதமாகச் செய்திகளில் அடிபட்டுக்கொண்டிருக்கும் வால் ஸ்ட்ரீட் முற்றுகை! இப்போராட்டங்கள் நியூ யார்க் நகரோடு நிற்காமல் இப்போது நாட்டின் பல்வேறு நகரங்களுக்கும் பரவ ஆரம்பித்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாக “பாஸ்டன் முற்றுகைப் போராட்ட”த்தைத் தொடங்கி நூற்றுக்கணக்கானோர் கைதாகியிருக்கிறார்கள். அரசுக்குப் பெரிய தர்மசங்கடமான நிலை. இந்த நிலையில் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடக்க இருக்கிறது. ரிபப்ளிகன் கட்சி சார்பான வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதற்காக நடைபெறும் விவாதங்களில் போட்டியிடும் ஆசாமிகள் ஒபாமாவைக் கிழிகிழியென்று கிழித்துக்கொண்டிருக்கிறார்கள்.
இனிமேல் தாங்க முடியாது என்ற நிலைக்கு அமெரிக்கர்கள் வந்துவிட்டார்கள். யானை தன் தலையில் மண்ணை வாரிப் போட்டுக்கொள்வது என்று சொல்வார்களே, – அதுதான் அமெரிக்கா விஷயத்தில் இப்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஒருபக்கம் பொருளாதாரச் சரிவு, வேலையில்லாத் திண்டாட்டம், திவாலாகும் பெரும் நிறுவனங்கள், நிதியிருப்புக் குறைவு (ஒரு கட்டத்தில் ஆப்பிள் நிறுவனம் அமெரிக்க கஜானாவைவிட அதிக ரொக்கக் கையிருப்பு வைத்திருந்தது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்!), டாலர் மதிப்பு சரிவு, வங்கிகளின் ஊதாரித்தனம், பேராசை, பங்குச் சந்தைச் சரிவு என்று உள்நாட்டுப் பிரச்னைகள். இன்னொரு பக்கம் வேலியில் போகும் ஓணானை மடியில் கட்டிக்கொண்ட கதையாக ஆக்கிரமிப்பு செய்துள்ள ஈராக், ஆஃப்கானிஸ்தான் நாடுகளில் படைகளுக்காக ஒவ்வொரு நாளும் செலவாகும் பில்லியன் டாலர்கள்.
ஈராக்கிலிருந்து படிப்படியாக படைகளை விலக்கிக்கொண்டிருக்கும் இந்நேரத்தில் அங்கு இதுவரை நிர்மாணித்திருந்த ராணுவத் தளங்கள், சாதனங்கள், ஆயுதங்கள், டாங்குகள், வண்டிகள் என்று கிட்டத்தட்ட முந்நூறு மில்லியன் டாலர்கள் பெறுமானமுள்ளவற்றைத் திரும்ப அமெரிக்கா கொண்டுவர அதைவிட அதிகச் செலவாகும் என்பதால் அங்கேயே ஈராக்கியர்களுக்கு “தானமாக” கொடுக்க முடிவெடுத்த செய்தியும் சில வாரங்களுக்கு முன்பு வெளிவந்தது. இதையெல்லாம் பார்த்த அமெரிக்கர்கள், தெருவில் இறங்கிப் போராட ஆரம்பித்துவிட்டார்கள்.
இம்முற்றுகைப் போராட்டங்களில் விநோதமானது என்னவென்றால், அண்ணா ஹசாரே போன்று தலைவர் என்று யாரும் இல்லாமல் மக்களாகவே கூட்டம் கூடிப் போராட்டம் நடத்துவதுதான். தலைவன் இல்லாத மக்களின் சுயப் போராட்டம்! கிட்டத்தட்ட எகிப்து அல்லது சில அரபு நாடுகளில் நடைபெறும் மக்களின் தன்னெழுச்சிப் போராட்டம் போன்றது என்றும் சொல்லலாம்.
இப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பதா, எதிர்ப்பதா என்று ஆளுங்கட்சிக்காரர்களான டெமாக்ரடிக் கட்சியினர் கையைப் பிசைந்துகொண்டிருக்கிறார்கள். எதிர்த்தால் அதிபர் தேர்தலின்போது, மக்கள் ஒபாமாவுக்கு எதிராகத் திரும்பிவிடுவார்கள். ஆதரித்தால் எதிர்க்கட்சியினரோடு சேர்ந்ததுபோல ஆகிவிடும். சும்மா இருந்தால் எதிர்க்கட்சியினர் கேள்வி கேட்கிறார்கள். இருதலைக்கொள்ளி உள்ளிட்ட எறும்பு நிலை!
இது பிசுபிசுத்துப் போகிற போராட்டமாகத் தெரியவல்லை. வடகிழக்கு மாகாணங்கள் தவிர இப்போது மற்ற நகரங்களிலும் சிறு குழுக்களாக மக்கள் கூட ஆரம்பித்துவிட்டார்கள். இது எந்நேரமும் பெரிய அளவில் வெடிக்கலாம். இப்படி வங்கி, நிதி நிறுவனங்கள், பெரும் முதலைகளான எண்ணெய் நிறுவனங்கள் என்று அசுர முதலாளிகளை எதிர்த்து நடைபெறும் இம்முற்றுகைப் போராட்டங்களுக்கு மக்களிடம் அபார ஆதரவு இருக்கிறது என்றும் சொல்ல முடியாது. அபிப்ராய பேதங்களும் இருக்கின்றன.
போன வாரம் ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் மறைந்ததால் உலகமே துக்கம் அனுசரித்துக்கொண்டிருக்கிறது. “ஆப்பிளின் லாப சதவிகிதம் கிட்டத்தட்ட 25%. ஆப்பிளின் கையிருப்பு 80 பில்லியன் டாலர்கள். இதுவரை நன்கொடை என்று ஒரு நயாபைசாகூட அவர்கள் செலவழித்ததில்லை. ஆனால் லட்சக்கணக்கான தொழிலாளர்களுடன், பெரும் கட்டுமானங்களுடன், ஏராளமான முதலீடுகளுடன் பெரும் தொழில் அமைப்பை நடத்திக்கொண்டிருக்கும் – எல்லார் வாயிலும் விழும் – எண்ணெய் நிறுவனங்களின் (இதயம் நல்லெண்ணை இல்லை – பெட்ரோல், கேஸ், இத்யாதி இத்யாதி) லாப சதவிகிதம் 5 அல்லது 6 சதவிகிதம்தான். இதில் யாரை எதிர்த்து மக்கள் போராடவேண்டும்?” என்றார் என் பக்கத்து சீட்டில் உட்கார்ந்திருக்கும் ஒரு அமெரிக்கர்.
யோசிக்கவேண்டிய விஷயம்!
- வற்றாயிருப்பு சுந்தர்
www.tamilpaper.net
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக