செவ்வாய், 18 அக்டோபர், 2011

சி.பி.ஐ.க்குள் ‘யாரோ’ கனிமொழிக்கு குழி பறித்தாரா? கலைஞர் துப்பறிகிறார்!


கனிமொழி ஜாமீன் மனு விசாரணைக்கு வரும்போது, சி.பி.ஐ. அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காது என்ற கிசுகிசு பற்றி ஊரெல்லாம் கதை அடிபட்டதில், சில திருப்பங்கள் ஏற்பட்டது பற்றி விறுவிறுப்பு.காமில் எழுதியிருந்தோம். அந்தக் கட்டுரையின்   இறுதியில் இப்படி எழுதப்பட்டிருந்தது-
எமக்குக் கிடைத்த சில தகவல்களின்படி, ‘கிசுகிசு’ விஷயம் நிஜம்தான். தயாநிதியை லைம்-லைட்டுக்குள் கொண்டுவந்து, கனிமொழியை ஓசைப்படாமல் மேடையில் இருந்து இறக்குவதே திட்டமாக இருந்தது என்பதை எமது சோர்ஸ்கள் அடித்துச் சொல்கின்றன. ஆனால், அதற்குப்பின் ஏதோ ஒரு அரசியல் நிகழ்வு அல்லது, உள்-குத்து நடந்திருக்கிறது. அதுபற்றிய சில தகவல்களும் கிடைத்துள்ளன. உறுதிப் படுத்திக்கொண்டு,  அதையும் விறுவிறுப்பு.காமில் வெளியிட முயற்சிக்கிறோம்.
இந்த விவகாரத்துக்குப் பின்னால் உள்ளது அரசியல் அல்ல, உள்-குத்து என்பதையே எமக்கு கிடைத்த தகவல்களில் இருந்து ஊகிக்க முடிகின்றது.

எமக்குக் கிடைத்த தகவல்களின்படி, நேற்று (திங்கட்கிழமை) தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும் பரவாயில்லை என்று டில்லிக்குச் செல்ல திட்டமிட்டு இருந்தார் கருணாநிதி. கனிமொழி ஜாமீன் மனு நேற்று விசாரணைக்கு வரும்போது, கோர்ட்டில் கருணாநிதியும் ஆஜராகி இருந்தால், வெயிட் அதிகமாகும் என்று கடந்த வாரமே அவருக்கு அட்வைஸ் கொடுக்கப்பட்டது என்று தெரிகின்றது.
ஆனால், அட்வைஸ் கொடுத்த பார்ட்டியே பின்னர் கலைஞரைத் தொடர்பு கொண்டு, அவர் டில்லிக்கு வர வேண்டியது அவசியம் இல்லை என்று சொல்லி தடுத்ததாகவும் சொல்கிறார்கள்.
“காரியத்தைக் கெடுத்து விட்டார்கள். திங்கட்கிழமை கனிமொழிக்கு ஜாமீன் கிடைப்பது சந்தேகம்தான். தேவையில்லாமல் நீங்கள் வரவேண்டியதில்லை” என்று விரிவாகச் சொல்லப்பட்டதாம், டில்லியில் இருந்து!
இதில், ‘காரியத்தைக் கெடுத்துவிட்டார்கள்’ என்று சொல்லப்பட்டதுதான், நாம் குறிப்பிடும் உள்-குத்து.   நாம் கேள்விப்பட்ட வரை, இது சி.பி.ஐ.க்கு உள்ளேயே நடந்திருக்கின்றது. அது கிட்டத்தட்ட உறுதியான தகவல்தான். அதைச் செய்தது யார் என்பதில்தான் ஒரு குழப்பம் உள்ளது. இது வெளி நபர் ஒருவரது வேலை என்று ஒரு தகவலும், சி.பி.ஐ. அதிகாரிகளே செய்த காரியம் என்று மற்றொரு தகவலும் உள்ளன.
“கனிமொழிக்கு ஜாமீன் வழங்கப்படுவதை சி.பி.ஐ. ஆட்சேபிக்காது” என்ற கிசுகிசு வெளியாகி ஊரெல்லாம் அடிபடாமல் இருந்திருந்தால், நேற்று கனிமொழி விடுதலையாகி இருப்பார் என்பதை இந்த விவகாரத்துடன் தொடர்புடைய பலரும் ஒப்புக் கொள்கின்றனர். எல்லாமே திட்டமிட்டபடி நடந்திருந்தால், கலைஞரே நேரில் டில்லிக்குப் போய், ஜாம்ஜாமென்று கனிமொழியை அழைத்து வந்திருப்பார்.
அதற்கு வில்லனாக வந்ததுதான் குறிப்பிட்ட இந்த கிசுகிசு.
தி.மு.க. தரப்பும் இதைப் புரிந்துகொண்டது. யாரோ பயங்கரமாக ‘விளையாடுகிறார்கள்’ என்பதும் புரிந்து போனது. அடுத்த கட்டமாக, கிசுகிசு எப்படி யாரால் முதலில் வெளியே கொண்டுவரப்பட்டது என்பதை துப்பறிய தி.மு.க. தலைமை முயற்சி செய்தது என்கிறார்கள்.
விஷயத்தை ஓரளவுக்கு பிடித்தும் விட்டார்கள் என்று வைத்துக் கொள்ளுங்களேன்.
ஆனால், அந்த மீடியாவுக்கு தகவல் கொடுத்த சோர்ஸ் யார் என்பதை ஊகிக்க முடியவில்லை. விஷயம் சி.பி.ஐ.க்கு உள்ளே இருந்தே வந்திருப்பது மாத்திரம் புரிந்தது.
யாருக்கும் தெரியாமல் காரியம் செய்வது எப்படி என்பது யாருக்கு தெரிகிறதோ, இல்லையோ, உளவுத் துறைக்கு உள்ளே இருப்பவர்களுக்கு நிச்சயத் தெரிந்திருக்கும் அல்லவா? அதுதான் நடந்திருக்கிறது. ஒரு கட்டத்துக்குமேல், இவர்களால் கிசுகிசு ஒரிஜினேட் பண்ணிய இடத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
இரு கதைகளுக்கான சாத்தியங்கள் உள்ளதாக இப்படியான விஷயங்களில் நன்கு பரிச்சயம் உள்ள எமது சோர்ஸ்கள் தெரிவிக்கின்றன.
முதலாவது கதைக்கான சாத்தியம் – தி.மு.க.வின் நச்சரிப்பு தாங்க முடியாமல் ‘யாரோ’ சி.பி.ஐ.க்கு “ஜாமீன் மனுவை எதிர்க்க வேண்டாம்” என்று கோரிக்கை கொடுக்கிறார்கள். பின்னர் அந்த யாரோவுக்கு மேலேயுள்ள யாரோ அரசியல் ரீதியாக தடுத்து விட்டார். ஆனால், இந்தப் பக்கத்திலும் (தி.மு.க.) நல்ல பெயரை தக்க வைத்துக் கொள்ள, அந்த நபர் விரும்பியிருக்கிறார். இதனால், தொடக்கி வைத்த அதே நபரே, ‘கிசுகிசு’வை அவிழ்த்துவிட்டு, காரியத்தையும் கெடுத்து விட்டார்.
இரண்டாவது கதையில், முதல் கதையின் தொடக்கம் அதேதான். ஆனால், அரசியல் ரீதியாக யாரும் தடுக்கவில்லை. மாறாக திருப்பம், சி.பி.ஐ.க்கு உள்ளேயே நடந்தது. இந்த கேஸில் சின்சியராக ஈடுபட்ட சில சி.பி.ஐ. அதிகாரிகள், கனிமொழி சுலபமாக வெளியே வரப்போவதை புரிந்து கொண்டார்கள். அதனால் வெறுத்துப்போன அவர்கள், தாங்களே இந்த விவகாரத்தை கிசுகிசுவாக மீடியாவுக்குள் கசிய விட்டு, ‘மேலிடத்தின்’ முயற்சியை கெடுத்து விட்டார்கள்!
இந்த இரு கதைகளில் முதலாவது நிஜமாக இருந்தால், மத்திய அரசுக்கு நல்லது. இரண்டாவது நிஜமாக இருந்தால், நாட்டுக்கு நல்லது!
-டில்லியிலிருந்து சம்பத் குமார்,  நர்மதா பானர்ஜி ஆகியோரின் குறிப்புகளுடன், ரிஷி.

“விறுவிறுப்பு.காம்” ஸ்டைல் பிடித்திருக்கிறதா? நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யலாமே!

கருத்துகள் இல்லை: