செவ்வாய், 6 செப்டம்பர், 2011

பத்மநாப சுவாமி பொக்கிஷங்கள் கொள்ளை 3 ஆண்டுக்கு முன்பே நீதிமன்றத்தில் அறிக்கை


திருவனந்தபுரம் : பத்மநாப சுவாமி கோயிலில் ரகசிய அறைகளில் வைக்கப்பட்டிருந்த பொக்கிஷங்கள் மாயமானதாக கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பே திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலில் 5 ரகசிய அறைகளில் விலைமதிக்க முடியாத பொக்கிஷங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றை மதிப்பிடும் பணியை தொடங்குவதில் உச்சநீதிமன்றத்தால் நியமித்த குழுவினர் தீவிரமாக உள்ளனர். இன்னும் சில வாரங்களில் மதிப்பிடும் பணி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, கேரள எதிர்கட்சி தலைவர் அச்சுதானந்தன் சொன்ன தகவல், மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. கோயில் ரகசிய அறைகளில் இருந்த பொக்கிஷங்கள் கொஞ்சம், கொஞ்சமாக பல முறை திருடப்பட்டுள்ளது. உத்திராடம் திருநாள் மார்த்தாண்டவர்மா கோயிலுக்கு சென்று திரும்பும் போது பாயாச வாளியில் நகைகளை மறைத்து எடுத்து சென்றார் என்று அச்சுதானந்தன் கூறினார். அச்சுதானந்தன் பேட்டிக்கு, இந்து அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். ஆனால் அச்சுதானந்தன் தனது கருத்தை மாற்றி கொள்ளவில்லை.

இந்நிலையில், இன்னொரு திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2008ம் ஆண்டு பத்மநாப சுவாமி கோயிலில் ஐப்பசி திருவிழாவுக்காக நகைகளை ரகசிய அறையில் இருந்து எடுப்பதற்காக சாம், சுரேஷ்குமார் ஆகியோரை  கொண்ட வக்கீல்கள் குழுவை திருவனந்தபுரம் மாவட்ட முதன்மை துணை நீதிமன்றம் நியமித்தது. இக்குழுவினர் நீதிமன்றத்தில் ஒரு அறிக்கை தாக்கல் செய்தனர். அதில் கூறப்பட்ட தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன. அவை வருமாறு:

கோயிலில் உள்ள யாசர்கோண் அறையிலும், நித்யாதி அறையிலும் உள்ள நகைகள் பரிசோதிக்கப்பட்டன. அறையில் இருந்த தங்கக் குடை, கம்பீயம் என்ற ஆபரணத்திலும் சில பகுதிகள் பெயர்த்து எடுக்கப்பட்டுள்ளது. தங்கக் குடத்தில் 14 மரகத கற்கள் மாயமாகி உள்ளன. இதில் கட்டப்பட்டிருந்த தங்க நூல்களையும் காணவில்லை. தங்கக் குடையில் உள்ள 44 இணைப்பு வளையங்களை காணவில்லை. இதற்கு பதிலாக இரும்பு, செம்பால் ஆன வளையங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

கம்பியத்தில் 2 வெள்ளி மணிகளையும் காணவில்லை. தங்கக் குடம், தங்கக் குடை, கம்பியம் ஆகியவை 3ம் நூற்றாண்டு பழமை வாய்ந்ததாகும். பொக்கிஷங்களை கையாள்வதில் கோயில் நிர்வாகத்தினர் மிகவும் அலட்சியமாக இருந்துள்ளனர். மேலும், பொக்கிஷங்கள் குறித்த முழுபட்டியல் தயாரிக்க மன்னர் குடும்பத்தினரிடம் கேட்டபோது அவர்கள் மறுத்து விட்டனர்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரகசிய அறையில் உள்ள பொக்கிஷங்கள் மாயமானதாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டிருக்கும் தகவல், கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால், அச்சுதானந்தன் கூறிய கருத்துக்கள் உண்மையாக இருக்கலாம் என்றும் பேசப்படுகிறது.

கருத்துகள் இல்லை: