புதன், 7 செப்டம்பர், 2011

மன்னர் குடும்பம் மீது அச்சுதானந்தனுக்கு விரோதம்: ரமேஷ் சென்னிதலா

திருவனந்தபுரம்: திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் மீது அச்சுதானந்தனுக்கு விரோதம் என்று கேரள மாநில காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலா தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலின் ரகசிய அறைகளில் பல கோடி மதிப்புள்ள தங்க, வைர நகைகள் இருந்தன. இந்த நகைகளில் சிலவற்றை கோவிலை நிர்வகித்து வந்த மன்னர் உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா சாமி கும்பிட்டு விட்டு திரும்பும்போது எடுத்து செல்லும் பிரசாத வாளியில் வைத்து திருடிச் சென்றதாக கேரள எதிர்கட்சி தலைவர் அச்சுதானந்தன் புகார் கூறியிருந்தார்.

இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். ஆனால் அச்சுதானந்தன் இந்த எதிர்ப்புகளை பொருட்படுத்தவில்லை. மாறாக தான் கூறியது உண்மை என்றும், இதுபற்றி கோவில் பாதுகாப்பு பணியில் இருந்தவர்கள் தன்னிடம் புகார் கூறியதாகவும் தெரிவித்தார்.

இதற்கு காங்கிரஸ் மூத்த தலைவரும், கேரள முதல்வருமான உம்மன் சாண்டியும் எதிர்ப்பு தெரிவித்தார். மன்னர் குடும்பம் பற்றி அச்சுதானந்தன் இப்படி பேசியிருக்கத் தேவையில்லை என்றும் கூறினார். இந்த நிலையில் கேரள மாநில காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலாவும் அச்சுதானந்தனை கண்டித்து பேசினார். திருவனந்தபுரத்தில் நடந்த பத்மநாப சுவாமி கோவில் ஊழியர் சங்க ஆண்டு விழாவில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது,

இந்தியாவில் மன்னராட்சியை முடிவுக்கு கொண்டு வந்து மக்களாட்சியை மலர செய்தது காங்கிரஸ். இதற்காக மன்னர் குடும்பத்தினருக்கு காங்கிரஸ் அவமரியாதை செய்ததில்லை. கேரளாவில் பத்மநாப சுவாமி கோவில் நகைகள் குறித்து எதிர்கட்சித் தலைவர் அச்சுதானந்தன் கூறியது தவறு. அவருக்கு மன்னர் குடும்பத்தினர் மீது இருந்த விரோதமே இப்படி பேச வைத்துள்ளது. தனிப்பட்ட காரணங்களுக்காக இப்படி யாரையும் குற்றம் சொல்லக் கூடாது என்றார்.

கருத்துகள் இல்லை: