புதன், 7 செப்டம்பர், 2011

இலங்கையிலும் ஒரு நானோ கார் தீப்பிடித்து எரிந்தது


Nano Catches Fire
நானோ கார் திடீரென தீப்பிடித்து எரிவது தொடர்கதையாகி உள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன் குஜராத்தில் ஒரு நானோ கார் தீப்பிடித்து எரிந்தது குறித்து செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்த நிலையில், இலங்கையிலும் ஒரு நானோ கார் தீப்பிடித்து எரிந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மேமாதம்தான் இலங்கையில் நானோ கார் அறிமுகம் செய்யப்பட்டது. அதற்குள் அங்குள்ள டாக்ஸி நிறுவனம் ஒன்று நானோ கார்களை வாங்கி வாடகைக்கு விடத்துவங்கியது. குறைந்த கட்டணம் கொண்ட நானோ டாக்ஸி சேவை அங்கு பிரபலமாகியது.

பட்ஜெட் டாக்ஸி என்ற பெயர் கொண்ட அந்த நிறுவனத்தில் தற்போது ஏராளமான நானோ கார்கள் வாடகைக்கு விடப்படுகின்றன. இந்த நிலையில், அந்த நானோ கார்களில் ஒன்று கடந்த 2ந் தேதி திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.

லெய்டன் நாஸ்டியன் மவதா போர்ட் என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சம்பந்தப்பட்ட நானோ காரை டிரைவர் ஸ்டார்ட் செய்ய முயற்சித்தபோது சிறிய சப்தத்துடன் அந்த காரில் திடீரென தீப்பற்றியுள்ளது.

உடனடியாக டிரைவர் காரில் இருந்து இறங்கிவிட்டார். காரில் யாரும் இல்லாததால், அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. இந்த விபத்துக்கான காரணம் இதுவரை முழுமையாக தெரியவில்லை.
இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் தொடர்பாக ஆய்வு செய்வதற்காக டாடா அதிகாரிகள் இலங்கை சென்றுள்ளனர்.

நானோ விற்பனை ஏற்கனவே அதளபாதளத்தை நோக்கி செல்லும் நிலையில், அந்த கார் அடிக்கடி தீப்பிடித்து எரியும் சம்பவங்கள் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு கடும் நெருக்கடியை கொடுத்துள்ளது.

கருத்துகள் இல்லை: