புதன், 7 செப்டம்பர், 2011

ஆபீஸ் போட்டு லஞ்சம் வாங்கிய 'கோடீஸ்வரன்' கைது!

சென்னை: லஞ்சம் வாங்குவதற்காக தனி அலுவலகமே போட்டு லஞ்சம் வாங்கிக் குவித்த மத்தியஅரசு ஊழியரையும், அந்த அலுவலகத்தில் பொறுப்பாளராக இருந்த பெண்ணையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை சாஸ்திரி பவனில் தொழிற்சாலைகளின் பெயர்களை பதிவு செய்யும் மத்திய அரசின் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் பணியாற்றியவர் கோடீஸ்வரன் (50). தொழிற்சாலைகளின் பெயர்களை பதிவு செய்ய வருவோரிடம், கோடீஸ்வரன் அதிகளவில் லஞ்சம் வாங்குவதாக சி.பி.ஐ.,போலீசாரிடம் ஏராளமான புகார்கள் வந்தன.

இந்நிலையில், கோடீஸ்வரன் தன்னிடம் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்பதாக, சி.பி.ஐ., போலீசாரிடம் ஒருவர் புகார் அளித்தார். இதை வழக்கு பதிந்த சி.பி.ஐ., போலீசார் விசாரித்து வந்தனர். விசாரணையில், ஆயிரம் விளக்கு பகுதியில், கோடீஸ்வரன் லஞ்சம் வாங்குவதற்கென தனி அலுவலகம் ஒன்றை நடத்தி வந்தது தெரிந்தது.

மேலும், தொழிற்சாலைகளை பதிவு செய்ய வருவோரை, தனது ஆயிரம் விளக்கு அலுவலகத்திற்கு அனுப்பி வைப்பார். அங்கு பணியாற்றிய ஜெயராணி என்பவரிடம், கோடீஸ்வரன் குறிப்பிடும் லஞ்சப் பணத்தை கொடுத்தால் மட்டுமே பெயர் பதிவு செய்யப்படும்.

இந்நிலையில் போலீசாரின் அறிவுரைக்கேற்ப, புகார் அளிக்க வந்தவர் கோடீஸ்வரனின் தனி அலுவலகத்தில் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் அளித்தார். அப்போது மறைந்திருந்த போலீசார், அந்த பணத்தை வாங்கிய ஜெயராணியை கையும், களவுமாக கைது செய்தனர்.

பின்னர் அவர் அளித்த தகவலின் பேரில், கோடீஸ்வரனும் கைது செய்யப்பட்டார். 2 பேரும் சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

கருத்துகள் இல்லை: