வியாழன், 8 செப்டம்பர், 2011

மங்காத்தா. உலகமே பிழைப்புவாதத்தை நோக்கிச் செல்கிறது

ஹாலிவுட் ரேஞ்சுக்குத் தமிழில் படங்களே இல்லையே என்ற ரசிகர்களின் குறையைப் போக்க வந்துள்ளது மங்காத்தா. பாடல்களில் பின்னிப் பெடலெடுத்திருக்கிறார் யுவன் ஷங்கர் ராஜா. விளையாடு மங்காத்தா பாடலுக்கு அஜித் தொப்பையைக் குலுக்கி ஆடுவதைவிட தியேட்டரில் இருக்கும் தாத்தா பாட்டிகள் அதிகமாக ஆடுகிறார்கள்.
ஒளிப்பதிவு அபாரம். அதுவும் முக்கியமாக கோவா காட்சிகள் எங்கேயோ போய்விடுகின்றன.

ஒரு சிக்கலான கதையை எப்படி எடுத்துக்கொண்டு போகப்போகிறார் வெங்கட் பிரபு என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் சீட் நுனிக்கே வந்துவிடுகிறார்கள். மக்கு ரசிகர்களுக்குக் கதை புரியாமல் போய்விட்டால் என்ன ஆவது என்பதால் ஆங்காங்கே ஃபிளாஷ்பேக், கதை நாயகர்களே கதையை அவ்வப்போது விளக்கிச் சொல்வது, கடைசி சீனில் வெகுநேரம் அர்ஜுனும் அஜீத்தும் போனில் பேசி விளங்கவைப்பது போன்ற தைரியமான சில முயற்சிகளை வெங்கட் பிரபு கையாண்டுள்ளார்.

பிரேம்ஜி அமரனின் நகைச்சுவை வசனங்கள் அருமை. ஐஐடி கோல்ட் மெடலிஸ்ட் என்றால் சும்மாவா. ஒவ்வொருமுறை அவர் வயிறு கலங்கும்போதும் நம் வயிறு குலுங்குகிறது. ‘நூடுல்ஸ் தலையா’ என்பது கவுண்டமணி-செந்தில் ஜோடி தமிழுக்கு வழங்கிய பல சொற்களுக்குப் பிறகு இப்போது கிடைத்திருக்கும் அருமையான வசைச் சொல்.

குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது லட்சுமி ராயை. சும்மா குலுக்கித் தளுக்கி நடனம் மட்டும் ஆடிவிட்டுப் போய்விடுவார் என்று நீங்கள் எதிர்பார்த்தால் அந்த எதிர்பார்ப்பில் மண். கதையின் மிக முக்கியமான திருப்பமே இவரிடமிருந்துதான் வருகிறது. அதைச் சூசகமாக உணர்த்துவதற்காகவே, ஆரம்பத்திலேயே ரயில் நிலையத்தில் ஒரு காட்சியை ஏற்பாடு செய்கிறார் வெங்கட் பிரபு. அந்தக் காட்சி மட்டும் இல்லையென்றால் ரசிகர்கள் குழம்பிப் போய்விடுவார்கள்.

அர்ஜுன் வேடம் மிக முக்கியமானது. அவர் கடைசிவரையில் வேடம் போடுகிறார் என்பதை யாராலும் கண்டுபிடித்திருக்கவே முடியாது.

திரிஷா குடும்பப் பாங்குள்ள பெண்ணாக நடித்திருக்கிறார். ஒரேயொரு முறை கொஞ்சமாக தண்ணி போடுகிறார் என்றாலும் அது தவிர பாந்தமாக உடையுடுத்தி நடிக்கிறார். இனி குணசித்திர வேடங்களாக அவருக்கு வந்து குவியும் என்பதில் ஐயமே இல்லை.

பணம் என்பது பேய்; அது மனிதர்களுக்கு இடையிலான அன்பை முறித்து, கொலையில் கொண்டுபோய்ச் சேர்க்கும் என்ற அற்புதமான தத்துவம் படத்தில் ஊடுபாவாகச் சொல்லிக்காட்டப்படுகிறது. நண்பனே நண்பனைக் கொல்வது, காதலித்து ஏமாற்றுவது, காதலியின் தந்தையிடமிருந்தே கொள்ளையடிப்பது, தேசத் துரோகி ஆவது, காவல்துறையின் உள்ளேயே இருந்து ஏமாற்றுவது, பத்துப் பதினைந்து ஆண்டுகளாகச் சோறு போட்டு வேலை கொடுத்திருக்கும் முதலாளியின் பணத்தை ஆட்டையைப் போடுவது - இத்தனையும் எதற்காக? பணத்துக்காக. இந்த உலகமே பிழைப்புவாதத்தை நோக்கிச் செல்கிறது, இல்லையில்லை சென்றுவிட்டது, இனி இந்த உலகத்துக்கு விடிவே இல்லை என்பதை முகத்தில் அறைந்தார்போலச் சொல்கிறார் இயக்குனர் வெங்கட் பிரபு.

கடைசியாக நம்ம தல. இது அவருக்கு ஐம்பதாவது படம் என்றதிலிருந்தே நாடே உணர்ச்சிக் கொந்தளிப்பில் மூழ்கியிருந்தது. பட ஆரம்பத்தில் அவர் நடித்த ஐம்பது படங்களிலிருந்தும் ஸ்டில்ஸ் காட்டப்படுகின்றன. மீசைகூட முளைக்காத இளம் பருவத்திலிருந்து தாடி, நரை, தொப்பை வரை அஜீத் அடைந்திருக்கும் பரிணாம வளர்ச்சியை மிக அழகாகக் காட்டியுள்ளனர்.

படத்தில் சில குறைகள் இல்லாமல் இல்லை. நாட்டில் குடியரசுத்தலைவர் ஒரு டம்மி, ஏன், பிரதமரே ஒரு டம்மி என்பது சிறு குழந்தைக்குக்கூடத் தெரியும். இருந்தும் குடியரசுத் தலைவரிடம் நேரடியாக ரிப்போர்ட் செய்யக்கூடிய ஒரு காவலர் குழு - அதன் தலைவர் ஒரு ஏ.சி.பி (அசிஸ்டண்ட் கமிஷனர் ஆஃப் போலீஸ்) என்பது கொஞ்சம் நெருடுகிறது. அதேபோல துப்பாக்கி கிராஸ்ஃபயரில் வயிற்றில் மட்டும் ஒரு தாமிரத் தகடை வைத்துக்கொண்டால் எளிதில் உயிர் தப்பிவிடலாம் என்று சொல்வதை ஒருவித கவித்துவ பீலா என்று எடுத்துக்கொள்ளலாம். இதற்குமேல் லாஜிக்கை ஆராய்ந்தால் ஹாலிவுட் படங்கள்கூட ஊத்திக்கொள்ளும்; ஐவரி மெர்ச்சண்ட் படங்களும் சத்யஜித் ரே படங்களும் மட்டுமே பிழைக்கும் என்பதால் விட்டுவிடுவோம்.

சென்சாரில் U/A சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள். படம் பார்க்க ஏகப்பட்ட சிறுவர் சிறுமியர் வந்திருந்தனர். படத்தில் ஓரிடத்தில் ஆண்-பெண் ஜோடி உடையில்லாமல் மெத்தையில் புரளுவதை (சிறிது நேரம்தான்!) காட்டுகிறார்கள். அது தவிர கோவா குலுக்கு டான்ஸ், டப்பாங்குத்து டான்ஸ், ஆரம்ப நைட்கிளப் டான்ஸ், அஜீத்துக்குமுன் லட்சுமி ராய் உடையை அவிழ்த்துப்போட்டு மாற்றிக்கொள்வது என்று கலக்கலாகப் பல காட்சிகள் உள்ளன. மேலும் கெட்ட வார்த்தைகள் நிரம்பி வழிகின்றன. இதற்கு U/A என்பது, தமிழகம் எந்த அளவுக்கு முன்னேறி அமெரிக்காவின் தரத்தை அடைந்துவிட்டது என்பதையே காட்டுகிறது.

மங்காத்தா: பாருங்க, பாருங்க, பார்த்துக்கிட்டே இருங்க

கருத்துகள் இல்லை: