அரசுக்கெதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் பொய்ப் பிரசாரங்கள் குறித்து மக்கள் ஏமாந்து விடக்கூடாது என மகிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்துள்ளார்.
பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் அழைப்பிற்கமைய இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் தீவகம் வேலணையில் நடாத்தப்பட்ட பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் இந்தப் பகுதி உள்ளிட்ட யாழ். மாவட்டத்தின் சகல பகுதிகளின் அபிவிருத்தி தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அடிக்கடி என்னுடன் பேசுவார் என்பதுடன் எமது அரசு அது தொடர்பில் மிகுந்த கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
இதனிடையே நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தலின் போது அரசுக்கு ஆதரவளித்ததன் மூலம் தீவக மக்களுக்கும் எமது அரசுக்கும் நெருங்கிய தொடர்புகள் இருப்பதாகவும் அந்த வகையில் அந்த மக்கள் எம்மோடு கைகோர்த்து நிற்பதாகவும் அது எமக்கு மகிழ்ச்சியளிப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
அந்த வகையில் பல அமைச்சர்கள் தற்போது யாழ் குடாநாட்டிற்கு வருகை தந்து மக்களது பிரச்சினைகள் தொடர்பாக கேட்டறிந்து கொண்டதுடன் அதற்குரிய வகையில் அந்த அமைச்சர்களும்இந்த மக்களுக்கான பல்வேறு உதவிகளையும் செய்யவுள்ளனர்.
கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக நாட்டில் நிலவிய யுத்தத்தால் எமது மக்கள் பல்வேறுபட்ட துன்ப துயரங்களுக்குள்ளான நிலையில் தற்போது யுத்தத்திற்கு முடிவு கட்டப்பட்டு ஓர் அமைதிச் சூழல் நிலவுகின்றது.
இந்நிலையினைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எமது மக்களையும் சார்ந்து நிற்கிறது என்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
இந்த நிலையில் எமது அரசுக்கு எதிராக அரசியல் வாதிகளால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற பொய்ப் பிரசாரங்கள் குறித்து மக்கள் மிகக் கவனமாக இருக்க வேண்டுமென்பதுடன் இவ்வாறான பொய்ப் பிரசாரங்களுக்கு மக்கள் ஏமாந்து விடக்கூடாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக