சனி, 23 ஜூலை, 2011

நார்வேயில் பயங்கரம்: குண்டு வெடிப்பு, துப்பாக்கி சூட்டில் 87 பேர் பலி!

ஆஸ்லோ: நார்வே நாட்டின் தலைநகர் ஆஸ்லோவில் நேற்று தீவிரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கி்ச் சூடு சம்பவங்களில் 87 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர்.

முதலில் ஆஸ்லோவில் உள்ள பிரதமர் அலுவலகத்தை குறிவைத்து தீவிரவாதிகள் குண்டுவெடிப்பை நடத்தினர். இந்த சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். குண்டுவெடிப்பு நடந்தபோது, அங்கு பிரதமர் ஸ்டோல்ட்பெர்க் அலுவலகத்தில் இல்லாததால், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இதைத்தொடர்ந்து, அடுத்த சில மணிநேரங்களில் ஆளுங்கட்சி சார்பில் ஆஸ்லோவின் புறநகர் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இளைஞர் பாசறை கூட்டத்தில் மர்ம மனிதன் ஒருவன் கூட்டத்திற்குள் புகுந்து சரமாரியாக துப்பாக்கியால் சுட்டான். இதில், 70க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்த நிகழ்ச்சியிலும் பிரதமர் ஸ்டோல்ட்பெர்க் கலந்துகொள்ள இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் தொடர்பாக 32 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவனை போலீசார் கைது செய்துள்ளனர். போலீஸ் சீருடையில் வந்து அவன்தான் துப்பாக்கிச்சூட்டை நடத்தியதாக கருதப்படுகிறது. அவனிடம் தீவிர விசாரணை நடந்து வருவதாக ஆஸ்லோ போலீஸ் கமிஷனர் கூறினார்.

இந்த தாக்குதல்களுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இந்த சம்பவங்களில் 80 பேர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அடுத்தடுத்த தாக்குதல்களால் தலைநகர் ஆஸ்லோ மக்கள் மத்தியில் பீதியும், பதட்டமும் சூழ்நிலை நிலவுகிறது. ஆஸ்லோ முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல்களுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதள்களுக்கு அந்நாட்டு பிரதமர் ஸ்டோல்ட்பெர்க் அதிர்ச்சியும், கண்டனமும் தெரிவித்துள்ளார்.


கருத்துகள் இல்லை: