புதன், 20 ஜூலை, 2011

சாய்பாபா அறையில் 34 கிலோ தங்கம்

புட்டபர்த்தி
சாய்பாபா தங்கியிருந்த அறைகளில் நேற்று நடத்தப்பட்ட சோதனையில் குவியல் குவியலாக தங்கமும், பணமும் கிடைத்திருப்பதால் புட்டபர்த்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 2வது நாளாக இன்றும் சோதனை நடந்து வருகிறது.

பாபா தங்கியிருந்த யஜூர்மந்திர் அறை கடந்த ஜூன் 16ம் தேதி திறக்கப்பட்டது.

அப்போது, 98 கிலோ அளவில் தங்க பிஸ்கட்டுகள் மற்றும் தங்க நகைகள், 307 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.11.5 கோடி பணம் ஆகியவை அறையில் இருந்ததாக அறிவிக்கப்பட்டது. இவை அனைத்தும் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டது.

இந்நிலையில், சாய்பாபா தங்கியிருந்த அறைகளில் அனந்தபூர் கலெக்டர் துர்காதாஸ் தலைமையில் வருவாய் துறையினர் நேற்று காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை சோதனை நடத்தினர். அறக்கட்டளை உறுப்பினர்களும் அப்போது இருந்தனர்.

முதல் மாடியில் மூடப்பட்டு கிடந்த முக்கிய அறை திறக்கப்பட்டது. அதில் விலை உயர்ந்த நூற்றுக்கணக்கான பட்டுப்புடவைகள், தங்க ஜரிகையால் நெய்யப்பட்ட ஏராளமான வேட்டிகள் இருந்தன. மேலும் ரூ.1.92 கோடி ரொக்கமும், 34.438 கிலோ தங்க நகைகளும், 342 கிலோ வெள்ளி பொருட்களும் இருந்தது. மற்றொரு அறையில் தங்க முலாம் பூசப்பட்ட ராமர் சிலை இருந்தது. விலை மதிப்பில்லாத வைரம், வைடூரியம், மரகத கற்கள் பதிக்கப்பட்ட ஆபரணங்களும் இருந்தன.

3வது அறையில் வெளிநாட்டு சாக்லெட் பாக்கெட்டுகள், மாணவர்களுக்கு வழங்க பரிசு மற்றும் கேடயங்களும் ஏராளமாக இருந்தன. குவியல், குவியலாக நகைகள் மற்றும் கட்டுக்கட்டாக பணம் இருந்ததால் இவற்றை கணக்கிட முடியாமல் அதிகாரிகள் திணறினர்.

இதையடுத்து 2 மற்றும் 3வது மாடியில் உள்ள அறைகளில் இன்று சோதனை நடத்தப்படுகிறது. மேலும் 3 நாட்கள் சோதனை நடக்கும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: