வெள்ளி, 22 ஜூலை, 2011

தமிழ் மக்களின் உரிமைகளை எவரும் தட்டிப்பறிக்க முடியாது-ஜனாதிபதி!

தமிழ் மக்களின் உரிமைகள் அவர்களிடமே இருக்க வேண்டும். அதனை எவரும் தட்டிப்பறித்துக்கொள்ள முடியாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று முன்தினம் 20 ஆம் திகதி கிளிநொச்சியில் தமிழ் மக்கள் மத்தியில் உரையாற்றுகையில் தெரிவித்தார்.

கடந்த முப்பது வருடகாலம் அவர்கள் இழந்த ஜனநாயகத்தையும் பாதுகாப்பையும் நாம் மீளப்பெற்றுக்கொடுத்துள்ளோம். தொடர்ந்தும் அதனைப் பாதுகாப்போம் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
முப்பது வருடகாலம் தமிழ் மக்கள் பட்ட கஷ்டத்திற்கு முடிவுகட்டப்பட்டுள்ளது. இனி அத்தகைய நிலை வராது. இனி அம்மக்கள் நிம்மதியாகவும் கெளரவமாகவும் வாழ முடியும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
325 மில்லியன் ரூபா செலவில் கிளிநொச்சி நகரில் அமைக்கப்படவுள்ள சர்வதேச விளையாட்டரங்கிற்கான அடிக் கல் நாட்டும் வைபவத்தில் கலந்து கொண்ட பின் அங்கு நடைபெற்ற மக்கள் பேரணிக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
பிரதமர் டி.எம். ஜயரட்ன, அமைச்சர்கள் டக்ளஸ் தேவானந்தா, மஹிந்தானந்த அலுத்கமகே, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உட்பட அமைச்சர்கள், அரச அதிகாரிகள், முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது;
அரசாங்கம் ஏனைய மாகாணங்களைவிட வடக்கிற்கே அதிக நிதியினை செலவிட்டு வருகிறது. வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் பாரிய அபிவிருத்திகள் முன் னெடுக்கப்பட்டுள்ளதுடன் மேலும் பல அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட வுள்ளன.
தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள் ளவர்கள் காருண்யம் பெறுவார்கள். அத்துடன் முன்பள்ளி ஆசிரியர்களை நியமித்துள்ள நாம் வடக்கிற்கு பல ஆசிரியர் நியமனங்களை நாம் வழங்கியுள்ளோம்.
மேலும் பல ஆசிரியர் நியமனங்களை வழங்கவும் பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முப்பது வருடமாக பாழடைந்து போய் கிடந்து விவசாய நிலங்களை நாம் அரச செலவில் சுத்திகரிப்புச் செய்து வழங்கியுள்ளோம். அது விவசாயிகளுக்குப் பெரும் நன்மையாக அமைந்துள்ளது.
முப்பது வருட பின்னடைவைச் சரி செய்யும் வகையில் பல செயற்றிட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. கடந்த மாதம் கொக்காவில் கோபுரத்தை நாம் அமைத்ததன் மூலம் இப்பகுதி மக்கள் சர்வதேசத்துடனான தொடர்புகளை மேற்கொள்ள வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
தொழில்நுட்ப ஆய்வு கூட வசதிகளும் இப்பிரதேசங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இப்பிரதேசத்தின் 16 பாடசாலைகளுக்கு கணனிகளை நாம் வழங்கியுள்ளோம்.
இப்பகுதி மக்கள் முகங்கொடுக்கும் காணிப் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வுகாணப்படும். அது தொடர்பில் சிறந்த தீர்மானம் எடுக்கப்படும். இனி இந்தப் பிரதேசங்கள் கஷ்டப் பிரதேசங்களாக இருக்காது எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: