சனி, 23 ஜூலை, 2011

ரகசிய அறையில் மன்னர் தங்க கட்டில்?பத்மநாப சுவாமி கோயில் ‘பி’

திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலில் திறக்கப்படாமல் இருக்கும் ‘பி’ அறையில், மன்னர் பயன்படுத்திய தங்க கட்டில் இருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயிலில் உள்ள 6 ரகசிய அறைகளில் ‘பி’ அறை மட்டுமே இன்னும் திறக்கப்படாமல் உள்ளது. இந்த அறையை திறப்பது குறித்து உச்ச நீதிமன்றம் இன்னும் முடிவை அறிவிக்கவில்லை. இதுவரை திறக்கப்பட்ட 5 அறைகளில் ‘ஏ’ அறையில்தான் மிக அதிகளவில் தங்கம், வெள்ளி, ரத்னம், வைரம், வைடூரியம் உட்பட ரூ.1 லட்சம் கோடிக்கு அதிக மதிப்புள்ள பொக்கிஷங்கள் கண்டு பிடிக்கப்பட்டன.

ஆனால், ‘பி’ அறையில் இதை விட பல மடங்கு அதிகமாக பொக்கிஷம் இருக்கும்  என்று பரபரப்பாக பேசப்படுகிறது. அதனால்தான் திருவிதாங்கூர் மன்னர் இந்த அறையை அதிக பாதுகாப்புடன் பூட்டி வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த அறையின் கதவில் நாக பாம்பின் அடையாளம் பொறிக்கப்பட்டு உள்ளது. இதற்கு பலரும் பல அர்த்தங்களை கூறுகிறார்கள்.

இந்த அறையில் மன்னர் பயன்படுத்திய தங்க கட்டில் உட்பட விலை மதிக்க முடியாத ஆபரணங்கள், அரிய வகை பொருட்கள் இருப்பதாக கூறுகின்றனர்.
மன்னர் காலத்தில் அவர் பயன்படுத்திய ஏராளமான பூஜை பொருட்களும் இந்த அறையில் இருக்கலாம் என்று தெரிகிறது. இந்த அறையை திறந்தால் உலகுக்கு ஆபத்து ஏற்படும் என்று மன்னர் குடும்பத்தினர் உட்பட சிலர் கூறுகின்றனர். இவற்றில் எது உண்மை என்பது அறையை திறந்த பிறகே தெரியும்.

கருத்துகள் இல்லை: