வெள்ளி, 22 ஜூலை, 2011

கோமாவில் நடிகர் ரவிச்சந்திரன்- உயிரைக் காக்க டாக்டர்கள் போராட்டம்

பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரன் உடல் நலம் மிகவும் மோசமடைந்துள்ளது. அவர் தற்போது கோமாவுக்குப் போய் விட்டார். அவரது உயிரைக் காக்க டாக்டர்கள் கடுமையாக போராடி வருகின்றனர்.

இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில், நடிகர் ரவிச்சந்திரன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது. அவர் கோமாவுக்குப் போய் விட்டதாக அவரது மகனும், நடிகருமான அம்சவிர்தன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், எனது தந்தைக்கு சர்க்கரை வியாதி இருந்து வந்தது. இருப்பினும் அதைக் கட்டுக்குள் வைத்திருந்தார். சில நாட்களுக்கு முன்பு திடீரென நுரையீரல் பிரச்சினை வந்து அது செயலிழக்கத் தொடங்கியது. இதையடுத்து மருத்துவமனையில் சேர்த்தோம். தற்போது அவர் கோமா நிலைக்குப் போய் விட்டார். டாக்டர்கள் கடுமையாக போராடி வருகின்றனர் என்றார்.

71 வயதாகும் ரவிச்சந்திரனுக்கு விமலா என்ற மனைவியும், இரு மகன்கள்,ஒரு மகள் உள்ளனர். அனைவரும் அருகில் இருந்து கவனித்தபடி உள்ளனர்.

100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ரவிச்சந்திரன் ஸ்டைல் நடிப்பை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய முதல் ஹீரோ. காதலிக்க நேரமில்லை படத்திலேயே அந்தக் காலத்து இளைய தலைமுறையைக் கவர்ந்தவர் ரவிச்சந்திரன். தொடர்ந்து பல்வேறு ஹிட் படங்களில் நடித்தவர். ஊமை விழிகள் படத்தில் வில்லனாக கலக்கிய அவர், அருணாச்சல் படத்தில் ரஜினிக்கு தந்தையாகவும், பம்மல் கே சம்பந்தம் படத்தில் கமல்ஹாசனுக்கு தந்தையாகவும் நடித்திருந்தார்.

கடைசியாக அவர் கண்டேன் காதலைப் படத்தில் அவர் நடித்திருந்தார்.

கருத்துகள் இல்லை: