வெள்ளி, 22 ஜூலை, 2011

அழகிரி:புதிய தலைவர் தேவையில்லை, கருணாநிதி சுறுசுறுப்பாக இருக்கையில்

திமுக தலைவர் கருணாநிதி சுறுசுறுப்பாகத் தான் உள்ளார். அதனால் புதிய தலைவர் தேவையில்லை என்று தென்மண்டல திமுக அமைப்புச் செயலாளரும், மத்திய அமைச்சருமான மு.க. அழகிரி தெரிவித்துள்ளார்.

நாளையும், நாளை மறுநாளும் கோவையில் திமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்கள் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கட்சி பொருளாளரான முக ஸ்டாலின் செயல் தலைவராக அறிவிக்கக்கூடும் என்று கூறப்படுகின்றது. மேலும் இந்த பொதுக்குழு கூட்டத்தில் மத்திய அமைச்சர் முக அழகிரி கலந்துகொள்ள மாட்டார் என்ற பேச்சும் அடிபடுகிறது.

இதனால் திமுக கூட்டம் அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. புதிய தலைவர் நியமிக்கப்படலாம் என்னும் தகவலை அழகிரி மறுத்துள்ளார்.

அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், திமுக தலைவர் கருணாநிதி சுறுசுறுப்பாக கட்சிப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். அதனால் தற்போதைக்கு கட்சித் தலைமையை மாற்றத் தேவையில்லை. இக்கட்டான சூழ்நிலையிலும் கட்சியை வழி நடத்தும் ஆற்றல் அவருக்கு உள்ளது.

கோவையில் நடக்கும் திமுக கூட்டங்களில் நான் கலந்து கொள்ளப் போவதில்லை என்று தகவல் பரவியுள்ளது. அது உண்மையில்லை. நாங்கள் அந்த கூட்டங்களில் கலந்து கொண்டு கட்சி வளர்ச்சிக்குத் தேவையான நல்ல கருத்துகளை எடுத்துரைக்கவுள்ளோம்.

ஆனால், பொதுக்குழுவி்ல் ஆலோசனை செய்யப்படவிருக்கும் தீர்மானங்கள் குறித்து இன்னும் தென்மாவட்ட நிர்வாகிகளுக்கு தெரிவிக்கவில்லை.

தமிழக போலீசார் வேண்டுமென்றே திமுகவினர் மீது பொய் வழக்குகளை ஜோடிக்கின்றனர். அவ்வாறு செய்யும் அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளோம். எங்கள் மீது தவறான தகவல்களை பதிவு செய்யும் அதிகாரிகள் மீது வழக்கு தொடருவோம்.

அதிமுகவினர் மீதும் தான் நில அபகரிப்பு புகார்கள் கொடுக்கபப்ட்டுள்ளன. ஆனால் போலீசார் அவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தென் மண்டல திமுக நிர்வாகிகளை மட்டும் குறிவைத்து செயல்படுகின்றனர்.

அன்மையில் திமுக நிர்வாகிகள் சிலரது வீடுகளில் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். ஆனால் அந்த சோதனையில் எதுவும் கிடைக்காததால் வீடுகளில் இருந்த பாஸ்புக் மற்றும் செக்புக்குகளை எடு்த்துச் சென்றுள்ளனர்.

திமுக நிர்வாகிகளின் வீட்டுகளுக்குள் போலீசார் அத்துமீறி நுழைந்துள்ளனர். இது சட்ட விரோத செயலாகும். ஒரு திமுக நிர்வாகியின் வீட்டுப் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர்.

போலீசாரின் இந்த அச்சுறுத்தல்களைக் கண்டு திமுகவினர் பயந்துவிட மாட்டார்கள். போலீசாரின் பாரபட்சமான நடவடிக்கைகளை எதிர்த்து திமுக தலைவர் போராட்டம் அறிவித்துள்ளார். அதில் பங்கேற்று நாங்கள் எங்கள் எதிர்ப்பைத் தெரிவிப்போம் என்றார்.

கருத்துகள் இல்லை: