தமிழகம், புதுவை, கேரளா, மேற்கு வங்கம், அசாம் என, ஐந்து மாநிலங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டதால், கடைசி கட்ட தேர்தல் நடந்து முடியும் வரை, ஓட்டுப்பதிவுக்கு பின்பு எடுக்கப்படும் கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிடக் கூடாது என, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
இதன் காரணமாக, தமிழகம், புதுவை, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு தேர்தல் முடிந்தும், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகவில்லை. தமிழகத்தை பொறுத்தவரை, ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகரித்துள்ளது யாருக்கு சாதகம் என்ற பெரிய கேள்வியோடு அரசியல் கட்சியினர், அரசியல் ஆர்வலர்கள், வாக்காளர்கள் என, அனைத்து தரப்பினரும் ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர்.தேர்தல் கமிஷன் கட்டுப்பாடு காரணமாக, வெற்றியை முழுமையாக உறுதி செய்ய முடியவில்லை என்ற கருத்து, ஓட்டுப்பதிவு முடிந்த ஒரு வாரம், தி.மு.க., பிரமுகர்கள் மத்தியில் நீடித்தது. மத்திய, மாநில அரசுகளின் உளவுத்துறை சார்பாக, ஓட்டுப்பதிவு முடிந்ததும், உடனடியாக எடுக்கப்பட்ட சர்வேக்கள், தி.மு.க.,விற்கு சாதகமாகவே கருத்து தெரிவித்தன.ஆனால், அடுத்தடுத்து வந்த ரிப்போர்ட்டுகள், தி.மு.க.,வின் தூக்கத்தை கெடுக்கும் வகையில் அமைந்திருந்தது. அதே நேரத்தில், கட்சியின் மாவட்ட செயலர்கள், அமைச்சர்கள், தி.மு.க., கூட்டணி, 140 முதல், 160 தொகுதிகளை பிடிக்கும் என்று தலைமையிடம் தெரிவித்துள்ளனர். அடுத்தடுத்து வந்த குழப்பமான கருத்துக்களால், தி.மு.க., தலைமை மேலும் குழம்பியது.ஸ்பெக்ட்ரம் விவகாரம் ஒருபுறம் நெருக்கடியை ஏற்படுத்தி வரும் நிலையில், தேர்தல் முடிவை முன்கூட்டியே தெரிந்து கொள்வது அடுத்த கட்ட நடவடிக்கைக்கு பாதுகாப்பாக இருக்கும் என்று, தி.மு.க., தலைமை நினைத்தது.இதற்காக, யாரையும் நம்பாமல், தனக்கு நம்பிக்கையான முக்கியமான, மூத்த நிர்வாகிகள், 10 பேரை ஆய்வுக்காக களமிறக்கியது. தி.மு.க.,விற்கு சாதகமில்லாத மாவட்டங்கள் என கருதப்பட்ட மாவட்டங்களை விட்டுவிட்டு, தி.மு.க., கூட்டணிக்கு சாதகமாக உள்ள, 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இந்த நிர்வாகிகள் ரகசிய ஆய்வு மேற்கொண்டனர்.வேலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, ஈரோடு, சேலம், கன்னியாகுமரி, மதுரை மற்றும் அதன் அண்மை மாவட்டங்கள், சில என, தேர்வு செய்யப்பட்ட இடங்களில் இந்த நிர்வாகிகள் களமிறங்கினர். கட்சியின் மாவட்ட செயலர் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு கூட தகவல் தெரிவிக்காமல், அந்தந்த மாவட்டங்களுக்கு சென்ற இவர்கள், தி.மு.க., வேட்பாளர்கள், கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் என, ஒவ்வொருவரையும் தனித்தனியாக விசாரித்துள்ளனர்.இவர்கள் ஒவ்வொருவரும் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில் சாதக, பாதகமான தொகுதிகள் பட்டியலிடப்பட்டன. இந்த பட்டியலில் உறுதியாக வெற்றி பெறும் தொகுதிகள், இழுபறியில் உள்ள தொகுதிகள், தோல்வி உறுதியான தொகுதிகள் என, மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, அதற்கான காரணங்களை தெரிவித்து, கட்சித் தலைமையிடம் அறிக்கையாக கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கைகளை பார்த்தபின் தான், தலைமைக்கு தெம்பு கிடைத்துள்ளதாக தி.மு.க., முன்னணி நிர்வாகிகள் கூறுகின்றனர். இந்த அறிக்கையின் அடிப்படையில், 135 முதல், 140 தொகுதிகள், தி.மு.க., கூட்டணிக்கு உறுதியாக கிடைக்கும் என, இந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.இதை உறுதிப்படுத்துவது போல், உளவுத்துறை கடைசியாக எடுத்து கொடுத்த ரிப்போர்ட்டில், 130 தொகுதிகள், தி.மு.க., கூட்டணிக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் தொலைக்காட்சி வெளியிட்ட கருத்துக் கணிப்பிலும், தி.மு.க.,விற்கு ஆதரவாக கணிப்பு வெளியாக, தி.மு.க., தலைமை உற்சாகம் அடைந்துள்ளது.தி.மு.க., தலைமை, முக்கிய நிர்வாகிகள் மூலம் மேற்கொண்ட இந்த ரகசிய ஆய்வில், அமைச்சர்கள், மாவட்ட செயலர்கள் பலரின் உள்ளடி வேலைகளும், கூட்டணிக் கட்சிகளை தோற்கடிக்க நடந்த குளறுபடிகளும் பட்டியலிடப்பட்டுள்ளன. இதை தெரிந்து கொண்ட அமைச்சர்கள் பலர், தங்கள் மாவட்டத்தை சேர்ந்த, தி.மு.க., மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை அழைத்து வந்து, தி.மு.க., தலைவர் முன்னிலையில் நற்சான்றிதழ் கொடுக்கச் செய்துள்ளனர்."கட்சி தலைமையை திருப்திபடுத்த வேண்டும் என்ற நோக்கோடு, இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள் ஆய்வறிக்கை கொடுக்கவில்லை. அனுபவம் வாய்ந்த அந்த நிர்வாகிகள் கொடுத்துள்ள அறிக்கை பொய்த்து போகுமானால், அது, அவர்களுக்கும் பாதகத்தை ஏற்படுத்தும் என்பதால், வெளிப்படையாக உண்மை நிலவரத்தை தெரிவித்துள்ளனர். சோர்ந்து போயிருந்த தலைவரும், முன்னணி நிர்வாகிகளும் இதனால், தெம்பாகியுள்ளனர்' என்கிறது அறிவாலய வட்டாரம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக