செவ்வாய், 19 ஜூலை, 2011

பகவத் கீதை படியுங்கள், இல்லாவிட்டால் நாட்டை விட்டு வெளியேறுங்கள்- கர்நாடக அமைச்சர் பேச்சு

பெங்களூர்: பகவத் கீதையைக் கண்டிப்பாக அனைவரும் படிக்க வேண்டும். அப்படி படிக்க விரும்பாதவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று கர்நாடக கல்வி அமைச்சர் விஸ்வேஸ்வர ஹெக்டே காகேரி பேசியுள்ளதற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.

கோலாரில்நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய காகேரி, பள்ளிகளில் பகவத் கீதையைப் படிக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதை சிலர் எதிர்க்கின்றனர். அப்படிப்பட்டவர்கள் பேசாமல் நாட்டை விட்டு வெளியேறி விடலாம் என்று கூறியிருந்தார்.

இதற்கு பல்வேறு கட்சிகள், அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. அமைச்சரின் பேச்சைக் கண்டித்து சமதா சைனிக் தள மாணவர் சங்கம் காகேரியின் கொடும்பாவியைக் கொளுத்தி போராட்டத்தில் ஈடுபட்டது.

அமைப்பின் மாநிலத் தலைவர் கோவிந்தய்யா இதுகுறித்துக் கூறுகையில்,கர்நாடக அரசு அனைத்துப் பள்ளிகளையும் ஆர்.எஸ்.எஸ். முகாம்களாக மாற்ற முயற்சிக்கிறது.

எங்களுக்கு பகவத் கீதையின் அத்தியாயங்கள் எதையும் கற்றுத் தர வேண்டாம். அதற்குப் பதிலாக அரசியல் சாசனத்தின் அத்தியாயங்களை கற்றுக் கொடுங்கள் என்றார்.

கர்நாடக தலித் கிறிஸ்தவ சங்கத்தின் தலைவர் மாரிசாமி கூறுகையில், நூலகங்கள், சிறந்த உணவு, தூய்மை ஆகியவற்றை பள்ளிகளுக்குத் தர வேண்டும். அதை விட்டு விட்டு பகவத் கீதையை கற்றுக் கொடுப்பதால் என்ன லாபம் என்று வினவினார்.

இதேபோல பல்வேறு கட்சியினரும் காகேரியின் பேச்சுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரா கூறுகையில், காகேரி மீது முதல்வர் எதியூரப்பா கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரது பேச்சு நாட்டின் மதச்சார்பற்ற தன்மைக்கு எதிரானதாகும் என்றார்

கருத்துகள் இல்லை: