நியூயார்க் : ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கக் கூட்டுப் படைகள் நடத்திய அட்டூழியத்தை வெளியிட்டு பரபரப்பைக் கிளப்பிய, "விக்கி லீக்ஸ்' இணையதளம், இதுவரை இல்லாத அளவிற்கு அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளின் பல்வேறு ரகசிய ஆவணங்களை வெளியிடப் போவதாக அறிவித்ததையடுத்து, அமெரிக்கா தன் கூட்டணி நாடுகளான இந்தியா, பிரிட்டன் உள்ளிட்ட உலக நாடுகளுக்கு, இது தொடர்பாக முன்னெச்சரிக்கை விடுத்துள்ளது.
ஜூலியன் அசேஞ்ச் என்பவர் நிறுவிய, "விக்கிலீக்ஸ்' நிறுவனம், கடந்த அக்டோபரில் ஈராக்கில் அமெரிக்கா நடத்திய போர் அட்டூழியங்கள் குறித்த நான்கு லட்சம் ரகசிய ஆவணங்களை வெளியிட்டது. அதன்பின், ஆப்கனில் அமெரிக்காவின் போர் குறித்த 90 ஆயிரம் ரகசிய ஆவணங்களை வெளியிட்டது.இதையடுத்து, ஜூலியன் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. ஒருவாரம் முன்பு அவரைக் கைது செய்வதற்கு, ஸ்விட்சர்லாந்து கோர்ட் ஒன்று அனுமதி அளித்தது. இந்நிலையில், இவ்வார ஆரம்பத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ஜூலியன், "அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகள் பற்றிய ரகசிய ஆவணங்கள் விரைவில் வெளியிடப்படும். இதுவரை வெளியிட்டதை விட அவை ஏழு மடங்கு அதிகமாக இருக்கும்' என தெரிவித்து பரபரப்பைக் கிளப்பினார்.
கூட்டணி நாடுகளுக்கு முன்னெச்சரிக்கை:ஆனால் எப்போது அந்த ஆவணங்கள் வெளியிடப்படும் என்ற தகவலை அவர் கூறவில்லை. அவரது பேட்டிக்குப் பின், அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகள் மத்தியில் கிலி பிடித்துள்ளது. அதனால், தன் கூட்டணி நாடுகளான இந்தியா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா, இஸ்ரேல், ஜெர்மனி, ரஷ்யா, துருக்கி, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பிரான்ஸ் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கு அமெரிக்கா நேற்று முன்னெச்சரிக்கைத் தகவல் ஒன்றை இது தொடர்பாக விடுத்துள்ளது.
அமெரிக்க வெளியுறவு செய்தித் தொடர்பாளர் பி.ஜே. கிரவுலி கூறியதாவது:ரகசிய ஆவணங்கள் வெளியிடப்படக் கூடும் என இந்தியாவை எச்சரித்துள்ளோம். ஆனால், "விக்கிலீக்ஸ்' தன்னிடம் வைத்திருக்கும் ஆவணங்கள் குறித்து எங்களுக்கு சரியாக எதுவும் தெரியவில்லை. இந்த ஆவணங்கள் வெளியிடப்படக் கூடாது.இந்த ஆவணங்களை வெளியிடுவது அமெரிக்க பாதுகாப்பு மற்றும் நாட்டு நலன்களுக்கு ஆபத்தையே விளைவிக்கும். இணையம் மூலம் ஒவ்வொரு அரசும் தங்களது கருத்துக்களைப் பரிமாறிக் கொள்கின்றன. அதன் மூலம் பரஸ்பரம் நம்பிக்கையும் ஏற்படுகிறது. இந்தக் கருத்துக்கள் பத்திரிகைகள் மற்றும் "டிவி', ரேடியோக்களில் தலைப்புச் செய்தியாக வரும் போது அந்த நம்பிக்கை போய்விடுகிறது.இப்படி வெளியிடுவதன் மூலம் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கிடையில் ஒரு வித பதட்டத்தை உருவாக்கலாம் என்று அவர்கள் நினைக்கின்றனர்.இவ்வாறு கிரவுலி தெரிவித்தார்."விக்கிலீக்சின் தொடரும் இந்த நடவடிக்கைகள் மிகவும் அபாயகரமானவை' என, ராணுவ அதிகாரிகளின் தலைவர் அட்மிரல் மைக் முல்லன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்கு பயம் ஏன்?"விக்கிலீக்ஸ்' வெளியிட்ட ஈராக் தொடர்பான ஆவணங்கள், அமெரிக்க வீரர்கள் ஈராக்கியர்களை எவ்விதம் சித்ரவதை செய்தனர் என்பதை விரிவாக விளக்குகின்றன. மேலும் சர்வதேச போர் விதிமுறைகளை மீறி அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி படைகள் நடந்து கொண்டதையும் அவை காட்டுகின்றன.இந்நிலையில், ஈராக்கிலுள்ள அல்-குவைதா பயங்கரவாதிகளுக்கு துருக்கி உதவியது, ஈராக்கில் உள்ள ஓர் இனமான குர்திஷ் இனத்தவரை துருக்கிக்கு எதிராக கலகத்தில் ஈடுபடும் படி அமெரிக்கா தூண்டியது, இஸ்ரேலுக்கு அமெரிக்கா செய்யும் ரகசிய உதவிகள் உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்படக் கூடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இத்தகவல்கள் வெளியானால், ஈராக்கிலுள்ள அமெரிக்கப் படை வீரர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றுதான் அமெரிக்கா பயப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக