ஞாயிறு, 28 நவம்பர், 2010

இரணைமடு தண்ணீர் இன்னொரு காவிரிப் பிரச்சினையாகுமா?


(விசு கருணாநிதி)
2011 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதம் நடைபெற்று வருகிறது. இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நாளை (29) திங்கட்கிழமை நடைபெறுகிறது. இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகி மெல்ல மெல்ல சூடுபிடித்து வருகிறது. இந்த விவாதத்தில் முக்கிய பங்கு வகிக்க வேண்டியவர்கள் எதிர்க் கட்சியினராக இருந்தாலும், அவ்வாறான தர்க்க ரீதியான வாதங்கள் எதுவும் முன்வைப்பது அரிதாகவே உள்ளது. எதிரணி தரப்பில் விவாதத்தை ஆரம்பித்து வைத்த ஐ.தே.க உறுப்பினர் ரவி கருணாநாயக்க முன்வைத்த கருத்துகளை மையமாக வைத்து விவாதத்தை நகர்த்துவதற்கான போதிய பொருளாதார தத்துவார்த்த கருத்துகள் குறைவென்றுதான் சொல்ல வேண்டும். அதனால், மந்தமாக ஆரம்பமான விவாதம், இரண்டாம், மூன்றாம் நாட்களில் சற்று சூடு பிடிக்கத் தொடங்கியது. அதுவும் வரவு- செலவுத் திட்டத்துடன் நேரடியாகத் தொடர்புபட்டிராத விடயங்கள் தான் சபையைக் கலகலப்பாக்குகின்றன.
அஸ்வர் எம்.பியின் ஒழுங்குப் பிரச்சினையின் காரணமாக சிலவேளைகளில் சபை உற்சாகமடையும். ஆளுந் தரப்பில் இப்போதெல்லாம் அஸ்வர் எம்.பியை இலகுவில் அடையாளம் கண்டுகொள்ளலாம். தமக்கே அழகான சிவப்புத் தொப்பியுடன் தனித்துவமாகக் காட்சியளிப்பார். எதிர்த்தரப்பில் எந்த ஓர் உறுப்பினராவது தவறாகக் கருத்துகளைச் சொல்லிவிட்டால் உடனே சுட்டிக்காட்டுபவர் அஸ்வர் எம்.பிதான். இதனால், சில நேரங்களில் தர்மசங்கடத்தையும் சாதுரியமாக எதிர்நோக்குவார்.
மூன்றாம் நாளான வியாழக்கிழமை (25) தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் எம். சுமந்திரன், ‘வரவு- செலவுத் திட்டத்தைச் சமர்ப்பித்த நிதியமைச்சர் சபையில் விவாதம் முடியும் வரை பிரசன்னமாகி இருக்கவேண்டும். ஆனால், ஜனாதிபதி அந்தப் பதவியை வகிப்பதால் எமக்குக் கேள்வி எழுப்ப முடியாமல் உள்ளது. எனவே, பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் நிதியமைச்சராக இருப்பதுதான் சிறந்தது’ என்றார்.
அஸ்வர் எம்.பி விடுவாரா! ஒழுங்குப் பிரச்சினை! என்று எழுந்து, ‘சுமந்திரன் அவர்களே, ஜனாதிபதி எந்தப் பதவியையும் வகிக்க முடியும். நீங்கள் அரசியலமைப்பை நன்றாக வாசித்துப் பாருங்கள்’ என்றார்.
“எனக்குத் தெரியும். எனது பேச்சை குழப்புமாறு சிலர் அஸ்வர் எம்.பியைத் தூண்டிவிடுகிறார்கள். அவரிடம் யாராவது போய் வந்ததும் வாய்க்கு வந்ததையெல்லாம் கூறுகிறார்” என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார் சுமந்திரன் எம்.பி. எதிர்பாராதவிதமாக அவர் உதிர்த்த வார்த்தைகளால் சற்றே கொதிப்படைந்த அஸ்வர் எம்.பி, அபாண்டமான பழியைப் போடுகிறார். நான் ஒழுங்குப் பிரச்சினையை எழுப்புவதற்காகவே எழுந்தேன். என்னை யாரும் தூண்டிவிடுவதில்லை என்றார். ஆனால் சுமந்திரன் எம்.பி தமது உரையை நிறைவு செய்துகொண்டு அமர்ந்ததும் அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் உரையாற்றத் தொடங்கினார். முதலில் அஸ்வர் எம்.பி மீதான குற்றச்சாட்டுக்கு ஆங்கிலத்தில் அவர் பதில் அளித்தார். அஸ்வர் எம்.பியை அமைச்சர்கள் தூண்டிவிடுவதாகக் கூறினீர்கள். உங்கள் கூற்றுக்குப் பதில் அளிப்பதற்காக அரசியலமைப்பு நூல் அவரிடம் இருக்கிறதா எனக் கேட்கவே அவரிடம் சென்றேன். உங்களுக்கு எதிராகத் தூண்டிவிடச் செல்லவில்லை. நான் அப்படியானவன் அல்லன்’ என்றார்.
இதனை ஏற்றுக்கொண்ட சுமந்திரன் எம்.பி அமைச்சரின் விளக்கத்தை ஏற்றுக்கொள்கிறேன். சில சந்தர்ப்பங்களில் அவ்வாறு நடக்கிறது. அதுதான் சொன்னேன் என்று அமர்ந்தார். எதிர்க் கட்சி உறுப்பினர்கள் முன்வைத்த அரசியலமைப்பு ரீதியான விமர்சனங்களுக்கும் அமைச்சர் சுசில் விளக்கமளித்தார். சிரேஷ்ட அமைச்சர்கள் நியமிக்கப்படுவது அரசியலமைப்புக்கு முரணானது அல்ல. ஜனாதிபதிக்கு அந்த அதிகாரம் உண்டு எனத் தெளிவுபடுத்தினார்.
விவாதத்தில் தமிழ்க் குரல்கள் ஓங்கி ஒலித்ததையும் காணக்கூடியதாக இருந்தது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் ஈ. சரவணபவன் உரையாற்றுகையில், ‘கிளிநொச்சி இரணைமடு குளத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு நீரைக்கொண்டு செல்ல முயற்சி செய்வதாகக் கூறி பல தில்லுமுல்லுகள் இடம்பெறுகின்றன. இதனை முறையாகப் பலனளிக்கும் விதத்தில் மேற்கொள்ளாவிட்டால் காவிரி நீருக்காக தமிழகமும் கர்நாடகமும் மோதிக்கொள்வதைப் போன்று யாழ்ப்பாண விவசாயிகளும் கிளிநொச்சி விவசாயிகளும் மோதிக்கொள்ளும் நிலை உருவாகும் என்றார்.
வரவு- செலவுத் திட்டத்தின் மீதான விவாதம் வெள்ளிக்கிழமை நான்காவது நாளாக நடைபெற்றபோது, அமைச்சர் விமல் வீரவன்ச உரையாற்றி விவாதத்திற்கு சூடேற்றினார்.
அவர் உரையாற்றும்பொழுது ஐ. தே. க உறுப்பினர்கள் அடிக்கடி இடையூறு செய்துகொண்டிருந்தனர். அந்த வேளையில் சபைக்குள் வருகிறார் புத்தளம் மாவட்ட எம்.பி பாலித ரங்கே பண்டார.
“ஐக்கிய தேசிய கட்சியில் உள்ள சிலருக்கு கட்சிக்காரர்களே மண்டையைப் பிளந்தாலும் புத்தி வராது! கருங்கல்லை உஷ்ணத்தில் வைத்தால், எப்படி குஞ்சு பொரிக்காதோ, அதேபோல் மரமண்டைகள்” என்று ஒரு போடுபோட்டார் அமைச்சர் வீரவன்ச, இதற்கு ரங்கே பண்டார எம்.பி. எதுவும் பேசவில்ல.
தாம் உரையாற்றுவதற்குத் தேவையான விடயங்களைக் குறிப்பெடுப்பதில் கவனம் செலுத்திக்கொண்டிருந்தார். அமைச்சர் வீரவன்ச உரையாற்றியதும் தகவல், ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உரையாற்றினார். ஐ. தே. க வினருக்கு உபதேசம் கூறுவதைப்போல் அமைந்திருந்தது அவரது உரை.
“நானும் உங்கள் பக்கம் இருந்தவன் தான். அங்கு சுதந்திரமாக எதையும் பேச முடியாது. பேசினால் அடி உதைதான். உங்கள் தலைவர் 1977 இற்குப் பிறகு 21 முறை தேர்தல்களில் தோல்வி கண்டு சாதனைபடைத்திருக்கிறார். இனியாவது உங்கள் சிந்தனையையும், செயலையும் மாற்றிக்கொள்ளுங்கள். இல்லையேல் மக்கள் ஒட்டுமொத்தமாக உங்களை நிராகரித்துவிடுவார்கள்” என்றார் அமைச்சர் ரம்புக்வெல்ல.
அமைச்சரைத் தொடர்ந்து பாலித ரங்கே பண்டார எம்.பிக்குச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. வரவு- செலவுத் திட்டத்தில் உரையாற்றும் உறுப்பினர்கள், அதுபற்றிய ஆலோசனைகளை விமர்சித்து தர்க்கங்களை முன்வைப்பதைவிட அநேகமானோர் இதர விடயங்களில் கவனம் செலுத்தி, அந்த விடயத்தை வரவு- செலவுத் திட்டத்துடன் முடிச்சுப் போடுகிறார்கள், இந்தத் தென்னை மரத்தில்தான் பசுவைக் கட்டுவார்கள் என்பதைப்போல,
சிரேஷ்ட அமைச்சர்கள் பத்துப்பேர் நியமனம் செய்திருப்பதைப் பற்றி ஒவ்வொருவராக விபரிக்கத் தொடங்கினார் ரங்கே பண்டார. முதலில் விபரிக்கப்பட்டவர் முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க.
“பாருங்கள் முன்னாள் பிரதமர் எத்தனை சிரேஷ்டத்தன்மை வாய்ந்தவர். கட்சிக்காக உழைத்தவர். இன்று அவரை எங்கு வைத்திருக்கிறார்கள். அவர் வகித்த பதவிகள் என்ன, பொறுப்புகள் என்ன!” என்று பட்டியலிடத் தொடங்கியதும், அஸ்வர் எம். பியால் பார்த்துக்கொண்டிருக்க முடியுமா?
“ஒழுங்குப் பிரச்சினை! ஒழுங்குப் பிரச்சினை” என்றார். அப்போது பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி சபைக்குத் தலைமைதாங்கிக் கொண்டிருந்தார்.
“என்ன உங்கள் பிரச்சினை?” என்றார்.
“ஐயா, இவர் தனிப்பட்ட ரீதியில் அமைச்சர்களுக்கு அவதூறு செய்கிறார். வரவு செலவுத் திட்டம் பற்றிப் பேசச் சொல்லுங்கள்!”
ரங்க பண்டார எம்.பீயும் பதிலுக்கு, ஐயா, இவர் கொஞ்ச காலம் சபையில் இல்லாமல் இருந்தார் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் இருந்தோம். இப்போது மீண்டும் வந்து எமக்கு நிம்மதி இல்லை. நத்தார் பப்பாவைப் போல் சிவப்புத் தொப்பியையும் வைத்துக்கொண்டு குழப்புகிறார்” என்றார். இது அஸ்வர் எம்.பி யின் பொறுமையைச் சோதிப்பதாக அமைந்துவிட்டது.
“ஒழுங்குப் பிரச்சினை ஐயா!”
“என்ன ஒழுங்குப் பிரச்சினை?”
நான் சிவப்பு தொப்பி அணிவதை சபாநாயகர், உள்ளிட்ட முழு சபையுமே ஏற்றுக்கொண்டுள்ளது. இவர் எனது மதத்தை அவமதிக்கிறார். அவ்வாறான வார்த்தைகளை நீக்கிவிடுங்கள்!”.
“மதத்தை நிந்திக்கும்படியான வார்த்தைகளை நீக்குமாறு உத்தரவிட்ட பிரதி சபாநாயகர், வரவு- செலவுத் திட்டம் தொடர்பான ஆரோக்கியமான கருத்துகளை முன்வைத்தால் சிறப்பாக இருக்கும் என்றார்.
“தொடர்ந்த ரங்கே பண்டார எம்.பி. பிரதி சபாநாயகர் அவர்களே, நான் எல்லா மதத்தையும் மதிப்பவன். மதத்தை நிந்தித்து எதுவும் கூறவில்லை” என்று மீண்டும் சிரேஷ்ட அமைச்சர்களைக் கிளறுகிறார். இதற்கு ஆளுந்தரப்பிலிருந்து மீண்டும் கண்டனம் கிளம்புகிறது. பிரதி சபாநாயகர் மீண்டும் அறிவுறுத்துகிறார்.
“தனிப்பட்டவர்களின் செயல்களைப் பற்றி தவறாகப் பேசாதீர்கள்” என்றார்.
“பிரதி சபாநாயகர் அவர்களே, நான் அமைச்சர்களின் நற்செயலைத் தான் கூறுகிறேன். தவறாகப் பேசவில்லை. பாருங்கள்... எங்கள் அமைச்சர் திஸ்ஸ விதாரண இருக்கிறார்..... என்று 10 சிரேஷ்ட அமைச்சர்களைப் பற்றியும் விபரித்தார். அந்த நேரத்தில் முதற் தடவையாகக் கருத்தொன்றைக் கூறி சபையைக் கலகலப்பாக்கினார் பிரதியமைச்சர் திருமதி நிருபமா ராஜபக்ஷ. “இவர் வரவு-செலவுத் திட்டத்தில் உரையாற்றுவது, இரங்கல் அறிக்கை மாதிரி அல்லவா இருக்கிறது” என்று நிருபமா சொன்னதும், ரங்கே பண்டாரவின் வரிசையிலுள்ள ஆளுந்தரப்பினரும் கொல்லெனச் சிரித்துவிட்டனர்.
“பொறுங்கள், பொறுங்கள், நான் உயிருடன் இருந்தால், உங்களுக்கும் இரங்கலுரை நிகழ்த்துவேன்” என்று அவர்களுக்குக் கூறி பண்டார எம்.பி. தொடர்ந்தார்.
அதற்குள் அவருக்கு வழங்கப்பட்ட 30 நிமிடம் நிறைவடைய அதோ.... இதோ என்றிருக்கிறது.
“உங்களுக்கு இன்னும் இரண்டு நிமிடங்கள் மட்டுமே உண்டு”
‘பரவாயில்லை. நான் சுஜீவ சேனசிங்க எம்.பியின் நேரத்தில் 5 நிமிடம் வாங்கிக்கொள்கிறேன்” என்ற ரங்கே பண்டார எம்.பி இறுதியாக சிரேஷ்ட அமைச்சர்களுக்கும் வரவு செலவுத் திட்டத்திற்கும் முடிச்சுப் போட்டார்.
வரவு செலவுத் திட்ட விவாதத்தின் நான்காவது நாளான நேற்றும் பெரும்பாலான ஆசனங்கள் வெறுமையாகவே காணப்பட்டன. சில வேளைகளில் உறுப்பினர்கள் போடும் அபிநயத்தைப் பார்த்தால், பேச்சுப் போட்டியில் மாணவர்கள் கதிரைகளைப் பார்த்துப் பேசுவதுதான் ஞாபகத்திற்கு வருகிறது. இதனைப் பாடசாலை மாணவர்களும் களறியில் இருந்து ரசித்துக்கொண்டிருக்கிறார்கள்.
அடுத்ததாக சஜின் வாஸ் குணவர்தன எம்.பி. உரையாற்றத் தொடங்கினார். “இந்த வரவு- செலவுத் திட்டம் நாட்டுக்கு முக்கியமான ஒன்று. எதிர்க் கட்சியினரின் விவாதம் இது. பாருங்கள் எதிர்த்தரப்பில் எவருமே இல்லை” என்று சுட்டிக்காட்டினார்.
ஜனநாயக தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் விஜித ஹேரத் உரையாற்றும்போது சபையில் பெரும் வாதப் பிரதிவாதம் ஏற்பட்டது. வரவு செலவுத் திட்டத்தைக் கடுமையாக அவர் விமர்சித்ததால் ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் அவரை ஒரு பிடி பிடித்தார்கள். இதனால், மதிய உணவு வேளைக்குப் பின்னர் சபை உற்சாகமடைந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக பெரும் சர்ச்சையைக் கிளப்பினார் ஐ.தே.க எம்.பி தயாசிறி ஜயசேகர.
அவர் உரையாற்றிக்கொண்டே கைபேசியை இயக்கிக்கொண்டிருந்தார். அதனைக் கண்ணுற்ற அஸ்வர் எம்.பி. “பொயின்ற்” ஒப் ஓடர்! “ஐயா, இவர் கைபேசி மூலம் குறுந்தகவல் அனுப்புகிறார். அவரது உரையை நேரடியாக ஊடகங்களுக்கு வழங்குகிறார். இது பாராளுமன்ற விதிமுறைகளுக்கு முரணானது. உடனே நடவடிக்கை எடுங்கள்” என்றார்.
அதை பொருட்படுத்தாத தயாசிறி எம்.பி தொடர்ந்தும் கைபேசியை முடுக்கிக்கொண்டு இருந்தார். ஆளுந்தரப்பில் எதிர்ப்பு கடுமையானது. அமைச்சர்கள் தினேஷ் குணவர்தன, ஜகத் புஷ்பகுமார, லலித் திசாநாயக, டிலான் பெரேரா ஆகியோர் கடும் கண்டனத்தை வெளியிட்டனர். பிரதியமைச்சர் கீதாஞ்சன குணவர்தன, இவர் சட்டத்திற்குப் புறம்பான விதத்தில் நடந்துகொள்கிறார். அவரை அமர்விலிருந்து இடை நிறுத்தங்கள் என்று ஆக்ரோஷமாக வலியுறுத்தினார்.
இதனையடுத்து, கைபேசியை நிறுத்திவைக்குமாறு பிரதி சபாநாயகர் உத்தரவிட்டார்.
பிரதி சபாநாயகர் அவர்களே! நான் குறுந்தகவல் அனுப்பவோ, நேரடியாகவோ தகவல் அனுப்பவில்லை. ஜனாதிபதி இப்படிக் கூறியிருக்கிறார்” என்று கைபேசியில் இணையத்தைப் பதிவிறக்கி, ஜனாதிபதியின் உரையை ஒலிபரப்ப முயற்சிக்கிறார். ஆளுந்தரப்பினர் கர்ணகடூரமாகிவிட்டார்கள். பலத்த கண்டனத்தைத் தெரிவித்ததோடு நின்றுவிடாது அவரை உடனே கைது செய்யுங்கள். கைது செய்யுமாறு உத்தரவிடுங்கள் என்று பிரதி சபாநாயகரைக் கோரினார் தினேஷ் குணவர்தன.
இதனையடுத்து தயாசிறி எம்.பியின் கைபேசியை செயலாளர் நாயகத்திடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார் பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி

கருத்துகள் இல்லை: