புதன், 1 டிசம்பர், 2010

Velanai.வேலணைப் பிரதேச கடற்கரையோரத்தில் நட்சத்திர விடுதிகள்

வேலணை பிரதேச சபைக்குச் சொந்தமான கடற்கரையோரக் காணிகளில் நவீன பாணியிலான ஆடம்பர நட்சத்திர விடுதிகளை அமைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தீவகப் பகுதியில் உள்ள பிரதேசசபைகளுக்கு வருமானப் பற்றாக்குறை     நிலவுவதாகவும்     இந்தப் பகுதிகளில் உல்லாசப் பயணக்கைத்தொழில் துறையை அபிவிருத்தி செய்வதன் மூலம் வருமானத்தை ஈட்டுவதுடன் வேலை வாய்ப்பு, வெளிநாட்டு செலவாணி ஈட்டம் , போக்குவரத்து,   வர்த்தகம் மற்றும் முதலீட்டு வலயங்களை உருவாக்கக்  கூடிய அளவிற்குத் திட்டங்களை மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மண்டைதீவின் வடக்கே ஒலிபரப்புக் கூட்டத்தாபனம் முன்பு இயங்கிய 103 ஏக்கர் பரப்பளவைக் கொண்டுள்ள பகுதி அதற்கு வடபுறமாகப் பண்ணை வீதிக்குக் கிழக்காக கடலின் மத்தியில் அமைந்துள்ள சிறுத்தீவு, வேலணைப் பகுதியில் மண்கும்பான் கடற்கரையில் அமைந்திருக்கும் சாட்டி  மற்றும் குறிகாட்டுவான், புங்குடுதீவு இறங்குதுறைப் பகுதி என்பனவே உல்லாசப் பயணத்துறையின் அபிவிருத்திக்காக ஆடம்பர விடுதிகள் அமைப்பதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
தீவுப் பகுதியில் உள்ள உள்ளூராட்சிச் சபைகளுக்கு நிதிவளப் பற்றாக்குறையை ஈடுசெய்வதற்கான வருமானத்தை இந்தத் துறையின் விருத்தி நிவர்த்தி செய்யுமென எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் வேலைவாய்ப்புக்களை பிரதேச மக்களுக்கு வழங்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதே வேளை மண்ணைக்கடலின்  மத்தியில் உள்ள சிறிய தீவில் தென் இலங்கையைச் சேர்ந்த அரசியல் பிரமுகர் ஒருவர் தனது சொந்த நிதி வளத்தில் சகல வசதிகளும் கொண்ட உல்லாசபுரியை கட்டியமைக்கவுள்ளதாகவும் மண்கும்பானிலும் புங்குடுதீவு இறங்குதுறையிலும் தென் இலங்கையைச் சேர்ந்த பெரும் புள்ளிகள் முதலீடுகளை மேற்கொள்ளத் தயாராகவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை: