புதன், 1 டிசம்பர், 2010

யார் பொருத்தமான துணைவேந்தர்?ரட்ணஜீவன் ஹுல் ?

 
யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவுக்கான வாக்களிப்பு நடைபெற்று, மூன்று பேராசிரியர்களின் பெயர்கள் ஜனாதிபதியின் இறுதிச் சிபாரிசுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த துணைவேந்தர் யார் என்ற எதிர்பார்ப்பு யாழ்ப்பாண மக்களிடையே அதிகரித்துள்ளது. 

14 வாக்குகளைப் பெற்று பேராசிரியர் வசந்தி அரசரட்ணம், தலா 9 வாக்குகளைப் பெற்று தற்போதை துணைவேந்தர் பேராசிரியர் நா.சண்முகலிங்கன் மற்றும் பேராசிரியர் ரட்ணஜீவன் ஹுல் ஆகியோரின் பெயர்கள் ஜனாதிபதியின் இறுதித் தெரிவுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் இவர்களுள் அதிகூடிய வாக்குகளைப் பெற்ற ஒருவராக உள்ளார். இதனால், இவரையே ஜனாதிபதி தெரிவுசெய்யலாம் என்று ஒரு சாரார் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

எனினும், ஜனாதிபதியின் தெரிவில் வாக்குகள் ஒரு முக்கிய விடயமாகக் கருதப்படாது என்பதுடன், மூவரில் எவர் ஒருவரையும் ஜனாதிபதி அடுத்த துணைவேந்தராக நியமிக்க முடியும்.

ஒருவேளை கூடுதல் வாக்கு என்ற விடயத்தை ஜனாதிபதி ஒரு பொருட்டாகக் கருதாவிட்டால், பேராசிரியர் சண்முகலிங்கனையா அல்லது ரட்ணஜீவன் ஹுலையா அவர் தெரிவுசெய்வார் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

பேராசிரியர் ரட்ணஜீவன் ஹுல் முன்னர் ஒருதடவை யாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகத் தெரிவுசெய்யப்பட்டபோதும், விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் கொடுத்த நெருக்குதல் காரணமாக அவர் பதவியைப் பொறுப்பேற்காமல் நாட்டை விட்டு வெளியேறினார் என்று சொல்லப்படுகிறது.

மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் பேரவை என்ற அமைப்பை நிறுவி, இலங்கையில் நடைபெற்றுவரும் மனித உரிமை மீறல்களை கிரமமாகப் பதிவுசெய்து, அவற்றை உலகின் முன் கொண்டு சென்ற கலாநிதி ராஜன் ஹுலின் சகோதரரே ரட்ணஜீவன் ஹுல் என்பதே, விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் அவருக்கு எதிர்ப்புத் தெரிவிக்கக் காரணமாக இருந்தது.

அப்போது விடுதலைப் புலிகளின் தலைமை ரட்ணஜீவன் ஹுல் பொருத்தமான அறிவியலாளன் என்று கருதியதாகவும், எனினும், யாழ்ப்பாணத்தில் அப்போது செல்வாக்குப் பெற்றிருந்த விடுதலைப் புலிகள் ஆதரவு மாணவர் பேரவை தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமாக இருந்த ஒருவர் உட்பட, விடுதலைப் புலிகளின் அரசியல்துறையினர் கொடுத்த நெருக்குதல் காரணமாக, விடுதலைப் புலிகளின் தலைமை ரட்ணஜீவன் ஹுலுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்ததாகவும் ஒரு கருத்து நிலவுகிறது.

இதுதவிர, ரட்ணஜீவன் ஹுல் ஒரு இந்து எதிர்ப்புவாதி என்கின்ற பிரசாரமும் அவருக்கு எதிராக முடுக்கிவிடப்பட்டிருந்தது.

பேராசிரியர் வசந்தி பல்கலைக்கழக மூதவை உறுப்பினர். பேராசிரியர் சண்முகலிங்கன் ஏற்கனவே துணைவேந்தராக இருந்து வருபவர். இதனால், தேர்தலில் வாக்களித்த மூதவை உறுப்பினர்கள் மத்தியில் இவர்களுக்கு போதிய செல்வாக்கு இருந்தது.

ஆனால், பேராசிரியர் ஹுலின் நிலைமை அப்படி இருக்கவில்லை. அவர் யாழ் பல்கலைக்கழகத்தில் அண்மைக் காலத்தில் பணியாற்றியவரல்ல. இதனால், பல்கலைக்கழகத்துக்குள் அவருக்கு ஒரு செல்வாக்கு வட்டம் இருந்திருக்கவில்லை. பதிலாக, பேராசிரியர் ஹுலுக்கு எதிரான பிரசாரங்களே பெருமளவுக்கு முன்னெடுக்கப்பட்டு வந்தன.

இந்தத் தடைகளையும் தாண்டி அவர் தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் சண்முகலிங்கனுக்கு ஈடான வாக்குகளைப் பெற்றிருப்பது, அவரது தனிப்பட்ட புலமைச் சிறப்புக்கு இருக்கும் ஆதரவையே காட்டுகிறது என்று ஒரு சாரார் வாதிடுகின்றனர்.

இவரது விடுதலைப் புலிகளுக்கு எதிரான நிலைப்பாடு, அந்த அடிப்படையில் உலக அளவில் தமிழ்ப் புத்திஜீவிகள் மத்தியில் இவருக்கிருக்கும் செல்வாக்கு, இதற்கும் மேலாக உலக அளவில் பல்வேறு பல்கலைக்கழகங்களுடன் இவர் கொண்டுள்ள தொடர்பும் அவரது புலமைச் சிறப்பும் காரணமாக, அடுத்த துணைவேந்தராக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இவரைத் தெரிவுசெய்யலாம் என்று அவர்கள் நம்புகின்றனர்.

எனினும், அவரது சகோதரர் ராஜன் ஹுலின் செயற்பாடுகள் இலங்கை அரசாங்கத்துக்கும் நெருக்கடிகளை ஏற்படுத்திய காரணத்தினால், ஜனாதிபதி இவரை யாழ் பல்கலைக்கழக துணைவேந்தராகத் தெரிந்தெடுப்பாரா என்ற சந்தேகங்களும் சில தரப்பினரால் எழுப்பப்படுகின்றன.

யாழ் சமூகத்தின் ஒரு அடையாளமாக இருந்துவரும் யாழ் பல்கலைக்கழகம், தமிழர்களுடைய உரிமைப் போராட்டத்திலும் முக்கிய பங்கை ஆற்றியிருந்தது. எனினும், இறுதிக் காலங்களில் பல்கலைக்கழகத்துக்குள் அதீதமாக வளர்த்தெடுக்கப்பட்ட விடுதலைப் புலிகள் ஆதரவுச் செயற்பாடுகள் காரணமாக, பல்கலைக்கழகத்தின் அறிவியல் ரீதியான, சுயாதீனமான நிலைப்பாடு குறித்த சந்தேகங்கள் பல தரப்பினராலும் எழுப்பப்பட்டிருந்தன.

விடுதலைப் புலிகள் காலத்தில் அவர்களுக்கு நெருக்கமாகவும் செயற்பட்டவர் என்ற ஒரு கருத்து தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் நா.சண்முகலிங்கன் தொடர்பாக நிலவுகிறது. பின்னர் அவர் அரசாங்கத்துக்குச் சார்பானவராகவே இருந்தார் என்ற கருத்துக்களும் முன்வைக்கப்படுகின்றபோதும், ஜனாதிபதியின் பார்வை எப்படி இருக்கப்போகிறது என்ற சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன.

இந்த வாதப் பிரதிவாதங்களைக் கடந்து, யாழ் பல்கலைக்கழகத்தின் அடுத்த துணைவேந்தராக யார் தெரிவுசெய்யப்படப்போகின்றனர் என்ற எதிர்பார்ப்பு தற்போது யாழ்ப்பாணத்தில் அதிகமாக்க காணப்படுகிறது.

போர் நிறைவடைந்து, தமிழ்ச் சமூகம் தன்னை பல தளங்களிலும் வளர்த்தெடுக்கவேண்டியிருக்கின்ற இன்றைய சூழ்நிலையில், அதில் குறிப்பிடத்தக்க வகிபாகத்தை வகிக்கக்கூடிய யாழ் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தர் முக்கியமான ஒருவராகக் கருதப்படுவதே இதற்குக் காரணமாகும்.

தனிப்பட்ட நிலைப்பாடுகள், அரசியல் சாய்வுகள், கொள்கைகள் என்பவற்றுக்கு அப்பால், பல்கலைக்கழகத்தையும், அதன்வழி யாழ் சமூகத்தையும் அறிவியல் ரீதியாக அடுத்த கட்டத்துக்கு வளர்த்துச் செல்லக்கூடிய ஒருவர் துணைவேந்தராக நியமிக்கப்படவேண்டும் என்ற எதிர்பார்ப்பு பொதுவாகப் பலரிடமும் காணப்படுகிறது
.
நன்றி:யாழ்இன்று

கருத்துகள் இல்லை: