ஞாயிறு, 14 நவம்பர், 2010

சிவகீதாவின் சதி : ஈரோஸ் பிரபா மற்றும் முன்னாள் EPDP உறுப்பினர் மீது தாக்குதல்.

மட்டக்களப்பு மாநகரசபையின் உறுப்பினர்களான ஈரோஸ் அமைப்பைச் சேர்ந்த பிரபாகரன் மற்றும் ஈபிடிபி யிருந்து சுதந்திரக் கட்சிக்கு தாவியுள்ளவருமாகிய அருமைலிங்கம் ஆகிய இருவர்மீது நேற்றிரவு மட்டு மேயர் சிவகீதா வீட்டில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இருவரும் காயடைந்துள்ளனர். இவர்கள் பிள்ளையான் என அறியப்படும் கிழக்கு மாகாண முதலமைச்சரினால் தாக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் பேச்சாளரும் , முதலமைச்சரின் பிரத்தியேக செயலாளருமான அசாத் மௌலானாவை இலங்கைநெற் தொடர்பு கொண்டு கேட்டபோது, மாகாண சபையினால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மட்டுநகரில் கட்டப்பட்டுவரும் கடைத்தொகுதியினை தகுதியுடையோருக்கு வழங்குவது தொடர்பாக நகர சபை உறுப்பினர்களிடையே மேற்கொள்ளப்படவிருந்த கலந்துரையாடலில் கலந்துகொள்ளுமாறு மட்டு மேயர் சிவகீதாவினால் விடுக்கப்பட்ட அழைப்பினை ஏற்று முதல்வர் சென்றிருந்தார் , அங்கு விவாதங்கள் முற்றி கைகலப்பில் முடிவடைந்துள்ளது. ஆனால் கைலப்பு நடைபெறும்போது முதலமைச்சர் அங்கிருக்கவில்லை எனவும், நகரசபை உறுப்பினர்களால் தாக்கப்படலாம் என்ற அச்சத்தில் முதலமைச்சரின் மெய்பாதுகாவலர்களான விசேட அதிரடிப்படையினர் அவரை பாதுகாப்பாக வெளியேற்றி விட்டனர் என தெரிவித்தார்.

மாகாணசபையின் நிதி ஒதுக்கீட்டில் கட்டப்பட்டுவரும் கடைத்தொகுதியினை மக்களுக்கு பிரித்துக்கொடுப்பதில் , பிணக்குகள் உருவாகியுள்ளதாகவும் பிரபா , அருமைலிங்கம் உட்பட்ட சில உறுப்பினர்கள் அக்கடைத்தொகுதிகளில் ஒவ்வொன்று தமக்கும் வழங்கப்படவேண்டும் என விடுக்கும் கோரிக்கையே விவாத்தின் மூலம் எனவும் அசாத் மௌலானா மேலும் குறிப்பிட்டார்.

எது எவ்வாறாயினும் மக்களின் வரிப்பணம் மற்றும் அரச நிதியில் மக்களுக்கென கட்டப்பட்டுவரும் கடைத்தொகுதியினை தம்மிடையே பகிர்ந்து கொள்வதில் பிணக்கு ஏற்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது.

இக்கடைத்தொகுதியினை மக்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கு எவ்வாறான நடைமுறைகள் கடைப்பிடிக்கின்றன என்பது இதுவரை தெளிவில்லை. மட்டு மாநகரசபையில் நீதியும் நியாயமுமான நிர்வாகமுறை ஒன்று இருக்குமாயின் கடைத்தொகுதிகளை பகிர்ந்தளிப்பதற்கு விண்ணப்ப படிவங்கள் கோரப்பட்டிருக்கவேண்டும். அவ்விண்ணப்பங்களில் பொருத்தமானவர்களை தெரிவு செய்வதற்கு விதிமுறைகளை மாநகர சபை தீர்மானித்திருக்கவேண்டும். அவ்விதிமுறைகள் தொடர்பாக மக்களுக்கு தெரியப்படுத்தப்பட்டிருக்கவேண்டும்.

எதுவாயினும் விடயம் தற்போது அடிதடியில் முடிந்துள்ளபோதும், கடைத்தொகுதியினை பகிர்ந்தளிப்பதற்கு மேயர் நியாயமான விதிமுறை ஒன்றை கடைப்பிடிப்பார மாறாக தனது முடிவுகளை மற்றோர் மீது திணிப்பதற்கு முன்னாள் ஆயுததாரிகளை மீண்டும் அழைத்து அடிதடிகளை ஊக்குவித்துவிட்டு ஒன்றும் தெரியாத குழந்தைபோல் மறைந்து கொள்வாரா என்பதே கேள்வி.

கருத்துகள் இல்லை: